ADDED : மார் 30, 2024 12:49 AM

கட்டட கட்டுமானப்பணி மேற்கொள்ளும் வாசகர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார், கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்க செயலாளரும், பொறியாளருமான ராமலிங்கம்.
எங்கள் வீடு 20 ஆண்டுகள் பழமையானது. தளத்திற்கு மொசைக் கற்கள் பதித்துள்ளோம். அவை ஆங்காங்கே பெயர்ந்து வருகிறது. அதை எவ்வாறு சரிப்படுத்துவது?
- குமார், சுகுணாபுரம்.
தற்பொழுது சந்தைகளில், மொசைக் கற்களுக்கான நிறுவனங்களும், தொழிலாளர்களும் கிடைப்பது அரிது. ஆதலால் நீங்கள் மொசைக் புளோரிங் மேலே டைல்ஸ் சிமென்ட் பேஸ்ட் கொண்டு, வெர்டிபைடு டைல்ஸ் அல்லது மொசைக் கற்களை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக டைல்ஸ் மார்பிள் மற்றும் கிரானைட் கற்களையும் பதிக்கலாம்.
வீட்டின் முன்புற கதவுகளுக்கு, எந்த வகையான மரங்களை பயன்படுத்தலாம்? மாற்றாக வேறு ஏதேனும் உள்ளதா?
-- பழனியப்பன், ஆலாந்துறை.
முன்புற கதவுகளுக்கு தேக்கு, படாக் போன்ற மரங்களை உபயோகப்படுத்தலாம். தற்பொழுது சந்தைகளில் ஜி.ஐ., தகடுகளால் மிகவும் உறுதியுடன் தயாரிக்கப்பட்ட, இரும்பு கதவுகள் கிடைக்கின்றன. மரக்கதவுகள் சாயலுடன் விலை குறைவாகவும், உறுதியாகவும் கிடைக்கிறது. அவற்றை பயன்படுத்தலாம்.
வீட்டின் வெளிப்புற பகுதிகளில், தரைகளுக்கு என்ன தளம் உபயோகிக்கலாம்?
- செந்தில்குமார், மதுக்கரை.
வீட்டின் வெளிப்புற பகுதிகளுக்கு, கான்கிரீட் தளம் சிறந்தது. செலவு குறைவாக இருக்கும். பிறகு மாற்றம் செய்வதாக இருந்தால், பேவர் பிளாக் உபயோகிக்கலாம்.
குளியல் அறைகளுக்கு, எந்த விதமான கதவுகளை பயன்படுத்துவது சிறந்தது?
- சுதாகர், கே.கே.புதூர்.
சந்தைகளில் பி.வி.சி., பைபர் மற்றும் யு.பி.வி.சி., கதவுகள் கிடைக்கின்றன. பி.வி.சி., கதவுகள் விலை குறைவு. யூ.பி.சி., கதவுகள் உறுதியானதாகவும், அழகிய தோற்றத்துடன் நீண்ட காலம் உழைக்கும் தன்மையுடனும் கிடைக்கின்றது. சற்று விலை அதிகம்.
பால்கனிக்கு இரும்பினால் செய்யப்பட்ட கிரில்லை பயன்படுத்தலாமா... அதற்கு மாற்றாக ஏதாவது உள்ளதா?
- சம்பத், மாதம்பட்டி
வெயில் படும் இடங்களில், இரும்பு கிரில்களை பயன்படுத்தும் போது, அது சற்று சூடாகி நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும். ஆதலால், கிரில் மற்றும் சுவர் இணைப்புகளில் விரிசல் ஏற்படுகிறது. பராமரிப்பு செலவும் உண்டு. எஸ்.எஸ்.ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிரில் உபயோகித்து, டப்ளான் கண்ணாடி உபயோகித்தால், பார்ப்பதற்கு அழகாகவும், நீண்ட நாட்களுக்கு நீடித்தும் இருக்கும். பராமரிப்பு செலவு குறைவு. இதன் விலை இரும்பு கிரில்லை விட சற்று அதிகமாக இருக்கும்.
எனது வீட்டின் மின் விளக்குகள், சீராக எரியாமல் அடிக்கடி அதிக வெளிச்சத்துடனும், உடனே மிகவும் குறைவான வெளிச்சத்துக்கும் மாறுகிறது. எதனால் இவ்வாறு ஏற்படுகிறது? எவ்வாறு சரி செய்வது?
- -ரவிக்குமார், ராமநாதபுரம்.
மின் கம்பத்திலிருந்து உங்கள் வீட்டுக்கு வரும், மின் இணைப்பில் நியூட்ரல் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம், நீங்கள் சிறந்த மின்சார பொறியாளரை கொண்டு, முறையான எர்த் பிட் அமைத்தால், மின்னோட்டம் சீராக இருக்கும்.
