ADDED : ஏப் 04, 2026 05:10 AM

க னவு இல்லத்தின் முதுகெலும்பாக இருக்கும் முக்கிய மூலப்பொருள் செங்கல். உறுதியான வீட்டை கட்ட உயர்தரமான செங்கற்களே பயன்படுத்தப்பட வேண்டும். நியாயமான விலையில் மற்றும் தரமாக நேரடியாக செங்கல் சூளையில் இருந்து செங்கல் வாங்குவது நல்லது.
ஏனெனில், பல நாட்களாக திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் செங்கற்கள் மழை, வெயிலின் தாக்கத்தால் பலம் இழக்கும் வாய்ப்புள்ளது. எனவே, அதன் தரத்தை பரிசோதித்து வாங்குவது நல்லது என்கிறார் 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.
பார்த்து வாங்குதல் ''செங்கல்லின் வடிவம் சரியாக இருப்பதோடு, முனைகள் உடைந்திருக்காமல் கூர்மையாக இருக்க வேண்டும். செங்கல் நிறம் சீராக ஒரே அளவாக இருக்க வேண்டும். அதை உடைத்தால் சிறு சிறு துண்டுகளாக சிதறக்கூடாது. ஒன்றோடொன்று இரண்டு செங்கற்களை மோதிப்பார்க்க வேண்டும்.
தரமான கற்களாக இருந்தால் ஒன்றுடன் ஒன்று மோதும்போது மணி ஒலி போல தெளிவாக கேட்கும். ஒரு மீட்டர் உயரத்தில் இருந்து செங்கலை செங்குத்தாக போடும்போது தரமானதாக இருந்தால் அது உடையாது.
நன்கு முழுமையாக நனையும்படி தண்ணீர் பக்கெட்டில் 24 மணிநேரம் ஒரு செங்கல்லை போட வேண்டும். அதன் பிறகு அதன் எடையை பார்க்கும்போது, உலர்ந்த நிலைக்கும், ஈரமான நிலைக்கும் அதன் எடையில் 15 சதவீதத்துக்கும் மேல் வித்தியாசம் இருந்தால் அந்த கல் கட்டுமான பணிக்கு ஏற்றதல்ல.
உதாரணத்துக்கு, உலர்ந்த செங்கல்லின் எடை 2 கிலோ என வைத்துக்கொள்வோம். 24 மணி நேரம் தண்ணீரில் ஊறியபின் அதன் எடை 2.3 கிலோ அல்லது அதற்கு மேலும் இருந்தால் அந்த செங்கல் பயன்படுத்த தகுதந்தது அல்ல. தரமற்ற செங்கல் கட்டடத்தை அசைத்துவிடும்,'' என மேலும் உஷார்ப்படுத்துகிறார் மாரிமுத்துராஜ்.
