/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
தாழ்வான கட்டடத்தை இடிக்காமல் உயர்த்த முடியுமா? நவீன தொழில்நுட்பம் குறித்து பொறியாளர் 'டிப்ஸ்'
/
தாழ்வான கட்டடத்தை இடிக்காமல் உயர்த்த முடியுமா? நவீன தொழில்நுட்பம் குறித்து பொறியாளர் 'டிப்ஸ்'
தாழ்வான கட்டடத்தை இடிக்காமல் உயர்த்த முடியுமா? நவீன தொழில்நுட்பம் குறித்து பொறியாளர் 'டிப்ஸ்'
தாழ்வான கட்டடத்தை இடிக்காமல் உயர்த்த முடியுமா? நவீன தொழில்நுட்பம் குறித்து பொறியாளர் 'டிப்ஸ்'
ADDED : ஜூலை 12, 2025 01:07 AM

நாங்கள் கட்டி வரும் புதிய வீட்டின் கூரைக்கான கான்கிரீட் 'ரெடி மிக்ஸ்' ஆக போட உள்ளோம். அதன் பிறகு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன என்பதை கூறவும்.
-சிவக்குமார், கவுண்டம்பாளையம்.
'ரெடிமிக்ஸ் கான்கிரீட்' போடும்போது, கான்கிரீட் கலவையின் விகிதம், வலிமை, நீர் மற்றும் சிமென்ட்விகிதம் இவற்றுடன் வேலை செய்யும் விதம் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையான ஈரப்பதம் ஆகியவற்றை, முக்கியமாக கவனிக்க வேண்டும்.
கான்கிரீட் குறித்த நேரத்தில், சைட்டுக்கு டெலிவரி செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுடன் பணிபுரியும்போது ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை,கான்கிரீட்டின் வலிமையை பாதிக்கலாம்.
அதே நேரத்தில் குறைந்த ஈரப்பதம்மற்றும் வெப்பநிலை விரைவாக கான்கிரீட்டை கடினப்படுத்தி, விரிசல்களுக்கு வழி வகுக்கலாம். பொறியாளர்களின் மேற்பார்வையில் கான்கிரீட்டின் தரத்தை உறுதிசெய்து கொள்வது, மிகவும் அவசியம்.
நாங்கள் கட்டிவரும் கட்டடத்தில் கழிவறை தொட்டியை எவ்வாறு அமைக்கலாம்?
-சங்கர், பெரியநாயக்கன்பாளையம்.
மனிதக் கழிவுகளை சரியான முறையில் பக்குவப்படுத்தி வெளியேற்றுவது ஒவ்வொரு தனிமனிதனின் கடமையாகும். மனிதக் கழிவுகளின் நீரை பக்குவப்படுத்தாமல் நிலத்தடி பகுதிகளிலும், கழிவு நீர் ஓடைகளில் வெளியிடுவது சமூக குற்றமாகும். நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியால், மக்கும் மற்றும் பாதுகாப்பான 'பயோ டீகிரேடபிள் செப்டிக் டேங்க்' சந்தையில் உள்ளன. இவ்வகையான பயோ செப்டிக் டேங்க், கழிவறை தொட்டிகளை பயன்படுத்துவதன் வாயிலாக, நிலத்தடி நீர் மாசுபடாமல் பொருளாதார பலன்களையும் பெற முடியும்.
நாங்கள் புதிதாக கட்டடம் கட்ட உள்ளோம். எங்கள் பகுதியில் பூமியின் தன்மை, 20 அடிக்கு மணல் பூமியாக உள்ளது. எவ்வாறு அடித்தளம் அமைக்கலாம்?
-மணிகண்டன், சின்னத்தடாகம்.
நீங்கள் கட்டவுள்ள பகுதியில், முதலில் மண்ணின் தரம் மற்றும் வலிமையை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மண்ணின் தாங்கும் திறன் மிகக் குறைவாக இருந்தால், 'பைல் பவுண்டேஷன்' அமைத்துக் கொள்வது சிறப்பாக இருக்கும்.
எங்கள் வீடு, 20 வருடங்களுக்கு முன் கட்டியது. வீட்டின் அடித்தளம் கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது வீடானது ரோட்டை விட சுமார் 3 அடி 6 அங்குலம் தாழ்வாக உள்ளது. எங்கள் வீட்டை இடிக்காமல் கட்டடத்தை உயர்த்த முடியுமா?
-கலைவாணி, பேரூர்.
உங்கள் கட்டடம் சரியான பராமரிப்புடனும், உறுதியாகவும் உள்ளதா என்பதை தகுந்த பொறியாளர்களைக் கொண்டு ஆராய்ந்து, நவீன தொழில்நுட்பத்துடன் கட்டடத்தை இடிக்காமல் உயர்த்த முடியும். நவீன தொழில்நுட்பத்துடன், பல கட்டுமான நிறுவனங்கள் கட்டடங்களை இடிக்காமல் உயர்த்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
அவ்வாறு கட்டடத்தை உயர்த்தும்போது, கதவு மற்றும் ஜன்னல் ஆகிய திறந்தவெளி இடங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம். கட்டடத்தின் அமைப்பு, தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து, அதற்குண்டான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
நாங்கள் புதிதாக கட்ட உள்ள கட்டடத்தை மிக வேகமாகவும், மாற்று தொழில் நுட்பத்தை கொண்டும் கட்ட ஆலோசனை கூறவும்.
-வசந்தகுமார், பல்லடம்.
நீங்கள் கட்ட உள்ள கட்டடத்தின் பயன்பாடு மற்றும் பொருளாதார காரணங்களால் கட்டடத்தின் கட்டுமான முறை மாறுபடலாம். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால், பல கட்டுமான முறைகள் சந்தையில் உள்ளன. நல்ல தரத்துடனும், மிக வேகமாகவும் குடியிருப்பு கட்டடமாக கட்ட வேண்டுமென்றால், 'மைவான் டெக்னாலஜி' என்ற தொழில்நுட்பம் உள்ளது.
வணிக கட்டடம், மருத்துவமனை மற்றும் பொது உபயோக கட்டடங்களை தரமாகவும், மிக வேகமாகவும் கட்ட வேண்டும் என்றால், 'பிரீகாஸ்ட்' கட்டட முறை மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
தொழிற்சாலை மற்றும் சேமிப்பு கிடங்கு போன்ற கட்டடங்களை தரமானதாகவும், மிக வேகமாகவும் கட்ட வேண்டும் என்றால், 'பிரீ இன்ஜினியரிங் ஸ்டீல் பில்டிங்' கட்டுமான முறை மிக சிறப்பானதாக இருக்கும்.
-விஜயகுமார்
முன்னாள் தலைவர்
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கம் (காட்சியா).