/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டுமான பொருட்கள் வாங்குவதற்கு முன் இதை கவனியுங்கள்!
/
கட்டுமான பொருட்கள் வாங்குவதற்கு முன் இதை கவனியுங்கள்!
கட்டுமான பொருட்கள் வாங்குவதற்கு முன் இதை கவனியுங்கள்!
கட்டுமான பொருட்கள் வாங்குவதற்கு முன் இதை கவனியுங்கள்!
ADDED : டிச 06, 2025 08:09 AM

சொந்தமாக வீடு கட்டும்போது, அதற்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும், அவற்றை எப்படி வாங்குவது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இதற்கான பணிகளை துவங்கும் போது, பொறியாளர் வழிகாட்டுதலுடன் உரிய நேரத்தில், உரிய முடிவை எடுப்பது அவசியம்.
கட்டுமான பணிக்கு எந்தெந்த நிலையில் என்ன பொருட்கள் எவ்வளவு தேவைப்படும் என்பது குறித்த ஒரு மதிப்பீட்டை பொறி யாளர் வாயிலாக பெற வேண்டும். பெரும்பாலான பொறியாளர்கள் கட்டுமான ஒப்பந்தம் போடும் நிலையிலேயே இதற்கான மதிப்பீடுகளை கொடுத்துவிடுகின்றனர்.
ஆனால், இது போன்ற மதிப்பீடுகளை பார்த்தால், அதில் உள்ள விஷயங்கள் நமக்கு புரியாத வகையில் இருக்கிறதே என்று தான் பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். முதலில் கட்டுமான பொருட்கள் எவை, அவற்றை என்ன அளவுகளில் வாங்குவது என்பது போன்ற விஷயங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
கட்டுமான பணிக்கான சிமென்ட் வாங்கும் போது மூட்டை எண்ணிக்கை மட்டும் பார்த்தால் போதாது, ஒரு மூட்டையில், 50 கிலோ சிமென்ட் இருக்கும் என்பதை தெரிந்து கெள்ள வேண்டும். இதற்கு அடுத்தபடியாக செங்கல், பொதுவாக ஒரு லோடு செங்கல் என்றால் அதில், 3,000 கற்கள் இருக்க வேண்டும், ஒரு செங்கல் என்பது, 190 மி.மீ., நீளம், 90 மி.மீ., உயரம், 90 மி.மீ., அகலம் என்ற அளவில் இருக்க வேண்டும்.
கட்டுமான பணிகளுக்கு டி.எம்.டி., கம்பிகள் மிக முக்கிய தேவையாக உள்ளன. கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதுல் அடிப்படையில் எந்த பணிக்கு என்ன வகை கம்பி தேவை என்பதை மிக மிக கவனமாக உரிமையாளர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
இதில் தற்போதைய நிலவரப்படி, டி.எம்.டி., கம்பிகள், 6,8,10, 12, 16 மி.மீ., தடிமன்களில் கிடைக்கின்றன. இதற்கு மேல், 20, 25, 32, 40 மி.மீ., தடிமன்களிலும் கம்பிகள் விற்கப்படுகின்றன. இதில் உங்கள் கட்டடத்தில் எந்த இடத்தில் எத்தகைய தடிமன் கம்பி தேவை என்பதை இதில் இருந்து முடிவு செய்யலாம்.
கட்டடம் கட்டுவதில், துாண்கள், மேல் தளம் போன்ற இடங்களுக்கான கான்கிரீட் தயாரிப்பதில் கருங்கல் ஜல்லிகள் வாங்குவது அவசியம். இதில், 10, 20 மி.மீ., தடிமன் ஜல்லிகளை வாங்கி பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக, சில பணிகளுக்கு, 4.75 மி.மீ., தடிமன் ஜல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இது மட்டுமல்லாது, கட்டுமான பணியில் எந்தெந்த நிலையில் அதிக அளவில் கான்கிரீட் தேவைப்படும் என்பதை கருத்தில் வைத்து உரிய முடிவை எடுக்க வேண்டும். இந்த வகையில் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டை வாங்கும் நிலையில், எம்20, எம் 24, எம்30 ஆகிய பிரிவுகளில் கான்கிரீட் கலவை விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய சூழலில், கட்டடங்களில் உட்புற அலங்கார பணிகளில் பல்வேறு நிலைகளில் பிளைவுட் அவசியமாக தேவைப்படுகிறது. இதில், பெரும்பாலான பிளைவுட் பலகைகள், எட்டு, நான்கு அடி என்ற அளவில் தான் விற்பனை செய்யப்படும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இதில் பலகையின் தடிமன், 12 மி.மீ., வரை இருப்பதை வாங்கும் நிலையில் மக்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த அளவுகளை புரிந்து கொண்டால் கட்டுமான பணியில் குழப்பங்களை தவிர்க்கலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
***
பாயிண்ட்
கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதுல் அடிப்படையில் எந்த பணிக்கு, என்ன வகை கம்பி தேவை என்பதை மிக கவனமாக உரிமையாளர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
***

