/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
உறுதியான வீடு கட்ட உதவும் இ.பி.எஸ்.,
/
உறுதியான வீடு கட்ட உதவும் இ.பி.எஸ்.,
ADDED : ஏப் 26, 2025 12:20 AM

பூகம்ப பாதிப்பால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்கும் வண்ணம் குடியிருப்புகளை கட்டி உயிர், பொருட்சேதங்களை காப்பது மிகவும் அவசியம். சமீபத்திய மியான்மர், குஜராத் பூஜ் பூகம்பங்கள்பேரழிவுகளை ஏற்படுத்தின.
கடந்த காலங்களில் கோவை, சேலம் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இப்பகுதிகளில் எழுப்பப்படும் கட்டுமானங்களை உறுதியான, பாதுகாப்பானதாக ஆக்குவது கட்டாயம்.
இதற்கென ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட, புதிய கட்டுமான முறைகளையும், தகுந்த தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி பலனடையலாம்.
பதிவுபெற்ற பொறியாளர்கள் சங்க (கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம் கூறியதாவது:
பூகம்ப சமயத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, நவீன தொழில்நுட்பங்களுடன்கூடிய இ.பி.எஸ்.,(எக்ஸ்பேண்டெட் பாலி ஸ்டைரென்) பலகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தாலி நாட்டில், 40 ஆண்டுகளுக்குமுன் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது.
இப்பலகைகள் பயன்பாடு, நம் நாட்டில் குறைவாகவே உள்ளது. இதன் செலவு குறைவு, சுற்றுப்புற பாதுகாப்பானது, ஆற்றல் திறன் கொண்டது; எளிமையானது, உறுதியானது. இரும்பு கம்பி கொண்டு வலுவூட்டப்பட்ட சிமென்ட் கான்கிரீட் பயன்படுத்தி சுவர், தளம் ஏற்படுத்தி கட்டுமானம் அமைப்பதே, இந்த முறை.
துத்தநாகம் பூசப்பட்ட இரும்பு கம்பி கொண்டு, சிப்ஸ் கான்கிரீட் மூலம் மூடி, சுவர் மற்றும் தளம் அமைக்கப்படுகிறது. முழுமையான கான்கிரீட் சுவர் மூலம், வெப்பம் கடத்தப்படுவதை தவிர்க்க, இடையில் ஒரு தெர்மோகோல் பலகை சொருகி வைக்கப்பட்டிருக்கும்.
இவை ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே நீண்ட பலகையாக தொழிற்சாலையிலேயே உருவாக்கப்பட்டு, பேனல்களாக வந்து சேரும்; பின்னர், பேனல்கள் சுவர்களாக நிறுத்தப்படும்.
தொடர்ந்து, சிப்ஸ் கான்கிரீட் கொண்டு பேனல்களின் இருபுறமும் மூடப்பட்டு, பின்னர் சிமென்ட் கலவை கொண்டு முடிக்கப்படும்.
இதனால், மொத்த வீடுமே ஒரே கான்கிரீட் வீடாக அமையும். பேனல்களின் கனம் சுமார் ஆறு அங்குலம் மட்டுமே இருக்கும். இவ்வாறாக அமைக்கப்படும் வீடுகள், செங்கல் வீடுகளைவிட நான்கில் ஒரு பங்கு எடை மட்டுமே இருக்கும். இதனால், அஸ்திவார செலவும் குறையும்; குறைந்த கால அவகாசமே எடுக்கும். செலவும் குறைவாகவே இருக்கும்.
பாத்ரூம் பிட்டிங்ஸ் எப்பொழுதும் போல் அமைக்கலாம். பூகம்ப தடுப்பு சக்தியுடன் அனுகூலங்கள் கொண்ட, உறுதியான வீடு அமைக்க இ.பி.எஸ்., தொழில்நுட்பம் மிக பொருத்தமான ஒன்றே.
அரசு துறை அங்கீகாரமும் உண்டு. ஐ.ஐ.டி., போன்றவற்றில் பரிசோதித்த பேனல்களை மட்டும் பயன்படுத்தி பலனடையலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

