ஒரு நாளில் எத்தனை அடிக்கு செங்கல் வைக்கலாம்? கொத்தனார்களுக்கு பொறியாளர்கள் தரும் 'டிப்ஸ்'
ஒரு நாளில் எத்தனை அடிக்கு செங்கல் வைக்கலாம்? கொத்தனார்களுக்கு பொறியாளர்கள் தரும் 'டிப்ஸ்'
ADDED : ஜன 24, 2026 05:25 AM

கொ த்தனார்கள் அனுபவம் கொண்டவர்கள் என பலரால் நம்பப்படுகிறது. சில சைட்களில் படித்த இளம் பொறியாளர்கள் செய்யும் சிறு தவறுகளைக்கூட, கொத்தனார்கள் எனப்படும் மேஸ்திரிகள் சரி செய்வதுண்டு. அந்த கொத்தனார்கள் இன்னும் தங்கள் தொழில் அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
கொத்தனார்களாக இருப்பவருக்கு வரைபடத்தில் உள்ளபடி அளவுகளை பார்த்து 'மார்க்கிங்' செய்யத்தெரிந்திருக்க வேண்டும். பவுண்டேஷனின் போது சென்டர் லைன் வரைபடத்தில் தவறில்லாமல் செய்ய வேண்டும். முக்கியமாக காலி மனையில் திசைகளை பார்த்து தெருவின் இருப்பிடத்திற்கேற்ப வீடு வரும் அமைப்பை உத்தேசித்து, மார்க்கிங் செய்து வாடிக்கையாளரிடம் இசைவு வாங்க வேண்டும்.
'டயகனல் மார்க்கிங்' செய்யும்போது, 90 டிகிரி பெர்பன்டிக்குலர் சரியான அளவில், மூலை மட்டம் பார்க்க தெரிந்திருக்க வேண்டும். பவுண்டேஷன் அமைக்கும்போது லுாஸ் சாயிலில் போடக்கூடாது. கன்சாலிடேஷன் செய்து திமிசு போட்ட பிறகே செய்ய வேண்டும்.
காலம் அமைக்கும்போது வெர்ட்டிகல் லைன், ஹரிசான்டல் லைன் அளவுகளை பார்த்து அளவீடு செய்ய தெரிந்திருக்க வேண்டும். சாலை மட்டத்தில் இருந்து கட்டடத்தின் உயரம் எவ்வளவு வைக்க வேண்டும் என்பதை, பொறியாளரிடம் கேட்டு அதன்படி செய்ய வேண்டும்.
வாட்டர் லெவல் டியூப்பில் துாய்மையான தண்ணீர் நிரப்பி, நீர்க்குமிழிகள் இல்லாமல் மட்டம் பார்க்க தெரிந்திருக்க வேண்டும். அஸ்திவாரம், பெல்ட், லிண்டல், கான்கிரீட் என அனைத்துக்கும் வாட்டர் லெவல் டியூப் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருப்பது அவசியம்.
எத்தனை அவசரம் என்றாலும் செங்கற்களை நனைத்த பிறகே, கட்டுமானத்திற்கு பயன்படுத்த வேண்டும். சிமென்ட் கலவையை பயன்படுத்துவதில் பொறியாளர் கொடுக்கும் விகிதத்தில் கலவை தயாரித்து முறையாக பயன்படுத்த வேண்டும்.
செங்கல் சுவர் ஒவ்வொரு அடுக்காக கட்டும்போதும், பினிஷிங்கில் குத்துக்கல்லாக வைத்து கட்ட வேண்டும். சுவர் கட்டுமானத்தின்போது வெர்ட்டிகல் ஜாயின்ட்களை தவிர்க்க வேண்டும். ஒரே நாளில் சுவர்களை நான்கரை அடிக்கு மேல் கட்டக் கூடாது.
கலவையில் போடும் மணல், ஜல்லிகளில் உள்ள துாசி, துரும்புகள், பிளாஸ்டிக்குகள், பேப்பர்கள், கூழாங்கற்கள் போன்றவற்றை நீக்கி, சலித்த பிறகு கட்டுவதற்கு பயன்படுத்த வேண்டும் என்கிறார் 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.
