/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வெளிப்புற சுவர்களில் தேவையில்லாத துளைகளை தவிர்ப்பது நல்லது?
/
வெளிப்புற சுவர்களில் தேவையில்லாத துளைகளை தவிர்ப்பது நல்லது?
வெளிப்புற சுவர்களில் தேவையில்லாத துளைகளை தவிர்ப்பது நல்லது?
வெளிப்புற சுவர்களில் தேவையில்லாத துளைகளை தவிர்ப்பது நல்லது?
ADDED : செப் 07, 2024 12:14 PM

பொதுவாக கட்டடம் கட்டும் போது அதன் வெளிப்புற சுவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் நினைக்கிறோம். இவ்வாறு சுவர்கள் அமைக்கும் போது கட்டுமான நிலையில் சாரம் அமைப்பதற்காக சில இடங்களில் இடைவெளிகள் ஏற்படுவது வழக்கம்.
ஆனால், பூச்சு வேலை முடியும் சமயத்தில் கவனமாக இருந்து, இது போன்ற இடைவெளிகளை அடைப்பது அவசியம். கட்டுமான நிலையில் ஏற்படும் இது போன்ற இடைவெளிகள் ஏதாவது ஒரு காரணத்தால் உருவாகி இருக்கும் என்பதை உரிமையாளர்கள் புரிந்து செயல்பட வேண்டும்.
அதே நேரத்தில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்து அந்த வீட்டில் நீங்கள் குடியேறி வசித்து வரும் சூழலில், தேவையில்லாமல் கட்டடத்தில் துளைகள் ஏற்படுத்த கூடாது. ஆனால், இது போன்ற வீட்டை கட்டுவோர் அதில் பிளம்பிங் இணைப்புகள், ஏசி அமைத்தல் போன்ற பணிகளுக்காக துளைகள் அமைப்பது வழக்கமாகி உள்ளது.
குறிப்பாக, ஒரு வீட்டை நீங்களே பயன்படுத்தும் போது, ஏசி, பிளம்பிங் பணிகளுக்காக ஒரு சில இடங்களில் துளைகள் ஏற்படுத்துகின்றனர். அதில் ஏதாவது மாற்றங்கள் செய்யும் போது, ஏற்கனவே அமைக்கப்பட்ட துளைகளை கைவிட்டு, புதிதாக இன்னொரு இடத்தில் துளைகளை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறு, அடுத்தடுத்த இடங்களில் துளைகளை ஏற்படுத்தும் போது, பழைய துளைகளை முறையாக அடைக்க வேண்டியது அவசியம்.
இதில் மேல்நிலை தண்ணீர் தொட்டியில் இருந்து வரும் குழாய்களை வீட்டிற்குள் கொண்டு வருவதற்காக எந்த இடத்தில் துளை அமைக்க வேண்டும் என்பதை நன்றாக யோசித்து முடிவு செய்ய வேண்டும்.
இதில் வீட்டில், மேல்நிலை தொட்டியில் இருந்து வரும் குழாய்களுடன், உள்ளாட்சி அமைப்பு வழங்கும் தண்ணீருக்காக இன்னொரு குழாய் அமைக்க வேண்டிய தேவை ஏற்படலாம்.
இது போன்ற சூழலில், ஒவ்வொரு குழாய் அமைப்புக்கும் தனித்தனியாக சுவரில் துளைகளை ஏற்படுத்துவதால், உறுதி தன்மை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சுவர்களில் உரிய காரணம் இன்றி கூடுதலாக துளைகளை ஏற்படுத்துவதை தவிருங்கள்.
மேல் தளத்தில் வசிப்பவர்கள், ஏசி அமைக்கும் போது, அதன் வெளிப்புற பாகத்தை மொட்டை மாடியில் வைக்க திட்டமிடுகின்றனர். இத்தகைய சூழலில், வீட்டின் வெளிப்புறத்துக்கு ஒரு துளை, மாடியின் கைப்பிடி சுவரில் ஒரு துளை என அமைத்து இணைப்பு பணிகளை மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு, மொட்டை மாடியில் கைப்பிடி சுவரில் ஒவ்வொரு முறையும் துளை அமைக்கும் போது, கட்டடத்தின் உறுதி தன்மை கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இதில் அலட்சியமாக இருந்தால், கட்டடத்தின் வெளிப்புற சுவர்களில் பல்வேறு இடங்களில் துளைகள் ஏற்படும்.
எனவே, பயன்பாட்டு நிலையில் மிக அவசியம், தவிர்க்க முடியாது என்ற நிலையில் மட்டும் கட்டடத்தின் வெளிப்புற சுவர்களில் துளைகள் அமைப்பது நல்லது. இதில், உரிமையாளர்கள் மிக கவனமாக செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.