/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
குளியலறை சுவர்களிலும் வாட்டர் புரூப்பிங் செய்வது அவசியமா?
/
குளியலறை சுவர்களிலும் வாட்டர் புரூப்பிங் செய்வது அவசியமா?
குளியலறை சுவர்களிலும் வாட்டர் புரூப்பிங் செய்வது அவசியமா?
குளியலறை சுவர்களிலும் வாட்டர் புரூப்பிங் செய்வது அவசியமா?
ADDED : அக் 04, 2025 06:58 AM

கா ன்கிரீட்டை அடிப்படையாக வைத்து தான் இன்றைய சூழலில் அனைத்து கட்டடங்களும் கட்டப்படுகின்றன. இதில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும், கான்கிரீட் கலவை தான் அடிப்படையான பொருள் என்பதில் தற்போது வரை எந்த பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், கான்கிரீட் கட்டடங்களை கட்டுவது, பயன்படுத்துவதில் காணப்படும் பல்வேறு பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை மக்கள் தேடுகின்றனர். குறிப்பாக, கான்கிரீட் கட்டடங்களில் நீர்க்கசிவு என்பது மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது.
இதனால், கான்கிரீட் அடிப்படையிலான கட்டடங்களில் நீர்க்கசிவு தடுப்புக்கான பல்வேறு வழிமுறைகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. கட்டடங்களில் பயன்பாட்டு நிலையில் அதன் மேல் தள பகுதியில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள பல்வேறு வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
குறிப்பாக, மொட்டை மாடியில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்பதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இதில், கட்டுமான ரீதியாக உரிய வழிமுறைகளை பின்பற்றுவது மட்டுமல்லாது பராமரிப்பிலும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ஆனால், அடுக்குமாடி கட்டடங்கள் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில், மேல் தளத்தில் இருந்து, கீழ் தள வீட்டுக்கு தண்ணீர் கசிவால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. கட்டடங்களில் மேல் தளங்களில் குளியலறை அமைக்கும் போது அதன் தரை பகுதியில், இயல்பான அளவை விட சற்று தாழ்வாக தளத்தை அமைப்பதில் துவங்கி பல்வேறு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
இதில் மேல்தள வீடுகளுக்கு குளியலறை அமைக்கும் போது தரை பகுதியில் வாட்டர் புரூப்பிங் பொருட்களை பயன்படுத்தி உரிய தடுப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இங்கு, வாட்டர் புரூப்பிங் கலவைகளை கான்கிரீட்டுடன் சேர்த்து பயன்படுத்துவதுடன் அதில் நீர்க்கசிவு ஏற்படுகிறதா என்பதை சரி பார்த்த பின் தான் பதிகற்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், வீடுகளில் குளியலறைகளில் தரை பகுதியில் மட்டுமல்லாது, சுவர் பகுதியிலும் நீர்க்கசிவு தடுப்பு முறைகளை பயன்படுத்த வேண்டும் என வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக, தரையில் இருந்து 6 அடி உயரத்துக்கு சுவரில் பூச்சு வேலை மேற்கொள்ளும் நிலையில் வாட்டர் புரூப்பிங் கலவையை சேர்க்க வேண்டும்.
பெரும்பாலான வீடுகளில் குளியலறை சுவர்களில் பதிகற்கள் அமைத்துவிட்டால் போதும், நீர்க்கசிவை தடுத்துவிடலாம் என்று நினைக்கின்றனர். உண்மையில், சுவர்களில் கன்சீல்டு முறையில் தண்ணீர் குழாய்கள் செல்லும். அதில் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேல் தளங்களில் இருந்து கீழே இறங்கும் நீர் சுவர்களில் பரவ அதிக அளவு வாய்ப்புகள் இருப்பதால், இந்த விஷயத்தில் உரிமையாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.