கட்டுமான பணிக்கு கான்கிரீட் தேர்வு பயன்பாட்டில் கவனிக்க!
கட்டுமான பணிக்கு கான்கிரீட் தேர்வு பயன்பாட்டில் கவனிக்க!
ADDED : செப் 26, 2026 07:09 AM

ஒரு நிலத்தை வாங்கி அதில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிடுவோர் குறிப்பிட்ட சில அடிப்படை விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். கட்டுமான பணிகளுக்கு அடிப்படை தேவைகள் என்ன என்பதில் தெளிவான புரிதல் இருக்க வேண்டும்.
கட்டுமான பணியில் கம்பிகள், கான்கிரீட், செங்கல், மணல் போன்ற பொருட்களை எப்படி வாங்குவது, எப்படி பயன்படுத்துவது என்பதில் தெளிவான முடிவு எடுக்க வேண்டும். குறிப்பாக, கட்டுமான பணிகள் மேற்கொள்வோர் தற்போது, ரெடிமிக்ஸ் ஆலைகளில் இருந்து கான்கிரீட் கலவைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதில் கட்டுமான பணியில் எந்த பாகத்துக்கு தற்போது பணிகள் நடக்கின்றன என்ற விபரங்களை அறிந்து அதற்கு ஏற்ற கான்கிரீட் கலவையை வாங்க வேண்டும். குறிப்பாக, கம்பிகளை உள்ளீடாக வைத்து மேற்கொள்ளப்படும் ஆர்.சி.சி., பணிக்காக என்ன வகை கான் கிரீட்டை வாங்குவது என்று முடிவு செய்ய வேண்டும்.
அதே நேரம், கம்பிகளை உள்ளீடாக வைக்காமல், தரைகள் போன்ற இடங்கள் தொடர்பான பணிகள், பி.சி.சி., என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த பணிகளுக்கு எத்தகைய கான்கிரீட் கலவை தேவை என்பதை புரிந்து அதற்கு ஏற்ப செயல்பட வே ண்டும்.
ஆர்.சி.சி., பணியானாலும், அதிலும், அஸ்திவாரம், பீம்கள், மேல்தளம் ஆகிய அனைத்து இடங்களிலும் ஒரே வகை கான்கிரீட்டை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதில் அந்த குறிப்பிட்ட பாகத்தின் அமைப்பு, அமையும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் கான்கிரீட் வகையை தேர்வு செய்ய வேண்டும்.
பொதுவாக ஆர்.சி.சி., பணிக்கான கான்கிரீட் வாங்கும் போது அது, எம்.25 வகையை சேர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது தரக்கட்டுப்பாட்டு விதிமுறை. இதிலும், ரெடிமிக்ஸ் ஆலையை அணுகினால், அவர்கள் எம்.25 கான்கிரீட்டில் பல்வேறு புதிய வகைகள் குறித்த விபரங்களை விளக்குவார்கள்.
இதில் ஜல்லியின் அளவு அடிப்படையிலும், சேர்க்கப்படும் சிமென்ட் அளவு, எரிசாம்பல் அளவு அடிப்படையில் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. உங்கள் வீட்டு கட்டுமான பணிக்கு வாங்கப்படும் கான்கிரீட் கலவையில் என்ன வகை சிமென்ட், எவ்வளவு பயன்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.
அதே நேரம், அதிக சுமை ஏற்பட கூடாது என்று நீங்கள் நினைத்தால் அந்த இடத்துக்கான கான்கிரீட்டில் எரிசாம்பலின் அளவு அதிகரிக்கப்படும். இதில் ஜல்லி, சிமென்ட் அளவுகள் குறைக்கப்படுவதால், கான்கிரீட்டால் ஏற்படும் கூடுதல் சுமை குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
கட்டுமான பாகத்தின் அடிப்படையில் என்ன வகை ஜல்லிகள் எந்த இடத்துக்கு ஏற்றது என்பதையும் கருத்தில் வைத்து முடிவு எடுக்க வேண்டும். அப்போது தான் கான்கிரீட் கலவையின் முழுமையான பயன் கிடைக்கும் என்கின்றனர், கட்டமான துறை பொறியாளர்கள்.
ஜல்லியின் அளவு அடிப்படையிலும், சேர்க்கப்படும் சிமென்ட் அளவு, எரிசாம்பல் அளவு அடிப்படையில் கான்கிரீட் கலவையில் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன.
