வீடு கட்ட கம்பி வாங்கும் போது தர விஷயத்தில் கவனிக்க...
வீடு கட்ட கம்பி வாங்கும் போது தர விஷயத்தில் கவனிக்க...
ADDED : ஆக 29, 2026 06:57 AM

புதிதாக வீடு கட்டும் போது அதன் ஒவ்வொரு பாகமும் முழு உறுதியுடன் அமைய வேண்டும் என்று தான் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இது விஷயத்தில் எதிர்பார்ப்பு மட்டும் இருந்தால் போதாது, அதற்கான சரியான வழிமுறைகளை கடைபிடிப்பதும் அவசியம்.
புதிய வீட்டுக்கான வரைபடம் தயாரிக்கும் முன், நிலத்தின் விபரங்கள், உத்தேச கட்டடத்தின் அளவுகள் விபரங்களை அளித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் ஆலோசனையை பெற வேண்டும். அவரது பரிந்துரை அடிப்படையில் கட்டடத்துக்கான வரைபடங்களை தயாரிக்க வேண்டும்.
இதில் கட்டட அமைப்பியல் பொறியாளர் பரிந்துரைத்த அளவுகளில் துாண்கள் அமைய வேண்டுமானால் அதற்கான சரியான வகை கம்பிகளை தேர்வு செய்ய வேண்டும். ஒரு கட்டடத்தில் அஸ்திவாரம், துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகிய பாகங்கள் உறுதியாக அமைய சரியான வகை கம்பிகளை பயன்படுத்த வேண்டியது அவசியம்.
கட்டட அமைப்பியல் பொறியாளர், கட்டட வடிவமைப்பாளர், கட்டுமான பொறியாளர் ஆகியோருடன் கலந்தாலோசித்து உங்கள் வீட்டுக்கான கம்பிகளை தேர்வு செய்து வாங்குங்கள். தற்போதைய சூழலில், சந்தையில் ஏகப்பட்ட வகைகள் விற்பனை செய்யப்பட்டாலும், அதில் எது சரியானது என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
இதில், ஒரு காலத்தில் முறுக்கு கம்பிகள் பயன்படுத்தினால் போதும் என்ற நிலை இருந்தது. இது கட்டடத்தின் உறுதி தன்மையை உயர்த்த போதுமானதாக இருக்காது என்பதால், டி.எம்.டி., என்ற தெர்மோ மெக்கானிக்கல் டிரீட்டட் வகை கம்பிகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் கட்டுமான பணிக்கான கம்பிகளை தயாரிப்பதில் டி.எம்.டி., முறையை பயன்படுத்துகின்றன. இருப்பினும், கட்டடம் உறுதியாக நிலைத்து நிற்பதுடன், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இதனால், தற்போது, எப்.இ. 500 டி அல்லது எப்.இ. 550டி என்ற வகை கம்பிகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் எப்.இ. 500 அல்லது எப்.இ. 550 வகை கம்பிகளும் விற்கப்படும் நிலையில், இதில் எப்.இ. 500டி வகையை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்ற கேள்வி எழும்.
இதில் 'டி' என்பது, டக்டிலிட்டி' என்று தொழில்நுட்ப முறையில் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, நிலநடுக்க பாதிப்பு அபாயம் உள்ள பகுதிகளில் இந்த வகை கம்பிகளை பயன்படுத்தும் போது, அதிர்வுகளை சமாளிக்கும் திறன் அந்த கட்டடத்துக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இது போன்ற கம்பிகளை வாங்கும் நிலையில் அதில் துரு போன்ற பாதிப்புகள் இருப்பதை எந்த விதத்திலும் அனுமதிக்காதீர். இதில் செலவு குறைப்பு என்ற நோக்கத்தில், உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவதை விட பெரிய நிறுவன கம்பிகளை வாங்குவது நல்லது.
பெரிய நிறுவனங்களில் தயாரிப்புகளில் தரம் சார்ந்த விதிமுறைகள் ஓரளவுக்கு சரியாக கடைபிடிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதில், சரியான முடிவை எடுத்தால், உங்கள் கட்டடம் நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள்.
நிலநடுக்க பாதிப்பு அபாயம் உள்ள பகுதிகளில் எப்.இ. 550 'டி' வகை கம்பிகளை பயன்படுத்தும் போது, அதிர்வுகளை சமாளிக்கும் திறன் அந்த கட்டடத்துக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
