/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
'சன்ஷேடு' கட்டுமானத்தில் விரிசல் ஏற்படுவது ஏன்?
/
'சன்ஷேடு' கட்டுமானத்தில் விரிசல் ஏற்படுவது ஏன்?
ADDED : ஜூலை 18, 2025 09:38 PM

'சன்ஷேட் கேண்டிலிவர்' அமைத்தல் என்பது எனக்கு சவாலாகவே இருக்கிறது. இந்த சன்ஷேட்கள் சுவர் தாங்கு பகுதிகளில் விரிசல்கள் தானாகவே ஏற்படுகின்றன. இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
- கணேசன், பீடம்பள்ளி.
பொதுவாக 'சன்ஷேடு' சுவர்கள்மீது அமைக்கும்போது, வெடிப்புகள் ஏற்படுவது கிடையாது. தங்களுக்கு ஏன் அத்தகைய பிரச்னை ஏற்படுகிறது என்று பார்க்க வேண்டும். நீங்கள் சன்ஷேடை 'கட் லிண்டல்' ஆக பயன்படுத்துகிறீர்களா இல்லை தொடர் லிண்டல் ஆக பயன்படுத்துகிறீர்களா என்று தெரிய வேண்டும்.
நீங்கள் கட் லிண்டல் ஆக அமைத்து இருந்தால், இனிமேல் தொடர் லிண்டல் ஆக அமைக்கும்போது வெடிப்பு ஏற்படும் பிரச்னை வராது. எனவே, கூடுமானவரை கட்டடத்தை ஏழு அடி உயரத்தில் தொடர் லிண்டல் மற்றும் பீம்கள் அமைக்கும்பொழுது வலுவாக இருக்கும்.
சட்டக்கோப்பு வடிவமைப்பு ஆக இருக்கும் பட்சத்தில், ஏழு அடி உயரத்தில் அமைக்கும்பொழுது 'பில்லர் டூ பில்லர்' இடையிலான பகுதியை முழுமையாக லிண்டல் அமைப்பது, இத்தகைய வெடிப்புகளை தவிர்க்க உதவும்.
நான் கட்டிவரும் வீட்டை ஒட்டியே கழிவறை அமைகிறது. அதன் உயரம், 7 அடியாக இருக்கிறது. ஆனால், வீட்டின் உயரம், 10 அடி என்பதால் இரண்டிற்கும் சேர்த்து ஒரே முறையாக என்னால் கூரை கான்கிரீட் தளம் அமைக்க முடியவில்லை. கழிவறையை தனியாகத்தான் அமைக்க வேண்டி இருக்கிறது. எட்டுக்கு, நான்கு அளவுடைய கழிவறையின் கூரையை, 'பில்லர்' இல்லாமல் அமைத்தல் என்பது சரியா?
-முருகவேல், கோவை.
பொதுவாக, கட்டடத்திற்கு ஏழு அடி உயரத்தில் தொடர் லிண்டல் கான்கிரீட் அமைக்க வேண்டும். சுவர் அமைக்கும்போது ஏழு அடி உயரத்தில் லிண்டல் கான்கிரீட் உடன் சேர்ந்து பாத்ரூம் கான்கிரீட்டை தாராளமாக அமைக்கலாம்.
நான்கு பக்கமும் செங்கல் சுவர் உள்ளதாக, குறிப்பிட்டு உள்ளீர்கள். நான்கு பக்கமும் செங்கல் சுவர் போதுமானதாகும். நீங்கள் குறிப்பிட்டுள்ள, 8*4 என்ற அளவு தாரளமாக மிக சுலபமாக அமைக்கலாம். எனவே, 7 அடி உயரத்தில் தாய் சுவற்றில் கட்டடத்தின் தொடர் லிண்டல் அமைக்கும்பொழுது, அத்துடன் இணைத்து இந்த கூரை அமைப்பது மிக எளிமையானது.
நாங்கள் வீடு கட்டுவதற்கு, வெளிப்புற கதவுக்கு 'பிளஷ் டோர்' அமைத்து, பாதுகாப்பு கருதி அதனுடன் டோர் சேர்த்து அமைக்க வேண்டி இருக்கிறது. அதற்கு பதிலாக ஒரேயடியாக ஸ்டீல் கேட், ஸ்டீல் கதவுகளை பொருத்துதல் சிக்கனமானதா?
- இன்பசேகரன், குனியமுத்துார்.
பொதுவாக நிலைக்கதவிற்கு வழக்கமான பாரம்பரிய மரக்கதவுகளைத்தான் விரும்புகிறார்கள். பிரதான நிலைக்கதவிற்கு பிறகு பெட்ரூம், மற்ற அறைகளின் கதவுகள் என பார்த்தால் மரக்கதவுகளுக்கு பதிலாக 'ஸ்டீல் டோர்' பயன்படுத்தலாம்.
அது சந்தையில் உங்களுக்கு பல்வேறு வடிவங்களில் வண்ணத்தில் கிடக்கிறது. பார்ப்பதற்கு மரக்கதவு போன்ற தோற்றத்தில் அசத்துகின்ற ஸ்டீல் டோர்கள், ரூ.18 ஆயிரம் முதல் கிடைக்கிறது.
அதேசமயம், ஆறு முதல், ரூ.10 ஆயிரம் வரை பிளஷ் டோர்கள் அசத்தலான வடிவமைப்பில், தோற்றத்தில் கிடைக்கின்றன. பணம் குறித்து கவலை இல்லையெனில் ஸ்டீல் டோர்களை நாடலாம்.
அதேசமயம், பிளஷ் டோர் அமைத்து சேப்டி எம்.எஸ்., கிரில் கதவுகள் வெளிப்புறம் அமைப்பது என்பது வசதியானது கூட. சில சமயங்களில் நாம் கதவை திறந்துவைத்து கொண்டு கிரில் கேட்டினை மூடிவைத்துக்கொண்டு, பயன்படுத்தும்போது காற்றோட்டம், வெளிச்சம் கிடைக்க வாய்ப்புள்ளது.
-மாரிமுத்துராஜ்,
கோயம்புத்துார் சிவில் இன்ஜினியர்கள் சங்கம் (கொசினா)