/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
சொத்து பத்திரத்தை 'லேமினேட்' செய்யக்கூடாது!
/
சொத்து பத்திரத்தை 'லேமினேட்' செய்யக்கூடாது!
ADDED : ஆக 24, 2024 01:27 AM

''தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை கொடுத்து, விபத்து ஏற்படாமல் இருக்க, கண்காணிக்க வேண்டியது ஒப்பந்ததாரரின் கடமை,'' என, அறிவுறுத்துகிறார், கோவை வக்கீல் வடவள்ளி நாகராஜன்.
அவர் கூறியதாவது:
சொத்து பத்திரங்களை பாதுகாப்புக்காக என கருதி, லேமினேஷன் செய்கிறார்கள். அவ்வாறு செய்யக் கூடாது. ஏனெனில், ஆவணங்களில் மாற்றம் செய்து விட்டு அதை மறைப்பதற்காக, லேமினேஷன் செய்பவர்களும் இருக்கிறார்கள்.
தற்போதைய அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டபடியால், ஒரு சிலர் அசல் ஆவணத்தை பல பிரதிகள் கலர் ஜெராக்ஸ் எடுத்து, அனைத்தையும் லேமினேஷன் செய்து வைத்துக் கொள்கிறார்கள். இவற்றை சாதாரணமாக பார்த்தால், அசல் போலவே தோற்றமளிக்கிறது. லேமினேஷன் செய்த ஆவணங்களுக்கு, வங்கி கடனும் மறுக்கப்படுகிறது. சாட்சிய சட்டப்படி எந்த நீதிமன்றத்திலும், அதை ஒரு ஆவணமாக ஏற்பதில்லை.
எனவே, விற்பனைக்காக வரும் சொத்து பத்திரத்தை லேமினேஷன் செய்திருந்தால் அதை பிரித்து Delamination செய்த பிறகு, அதில் உண்மை தன்மை குறித்து ஐயப்பாடு இருந்தால், சம்பந்தப்பட்ட சார்-பதிவு அலுவலகத்தில் சான்றிட்ட நகல் பெற்று அசலுடன் ஒப்பிட்டு பார்த்து சரியாக இருந்தால் மட்டுமே, அந்த சொத்துக்களை வாங்க வேண்டும்.
கவனமாக பயன்படுத்த வேண்டும்
ஏற்கனவே உள்ள தரை தளத்தின் மீது, முதல் தளம் அல்லது கூடுதல் கட்டடங்கள் கட்ட கட்டுமான பணிகளுக்காக, பிரத்யேகமாக சம்பந்தப்பட்ட மின்வாரியத்தில் தற்காலிக மின் இணைப்பு பெற்றிருப்போம்.
அவ்வேளையில், கட்டுமான பணிக்காக ஊழியர்கள் மின்சாரத்தை பயன்படுத்தி இயந்திரங்கள் இயக்கும் போது, அதற்காக வாங்கப்பட்ட தற்காலிக மின் இணைப்பை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
அவ்வாறின்றி, ஏற்கனவே தரை தளத்துக்காக பெறப்பட்ட நிரந்தர வீட்டு உபயோக மின் இணைப்பில் இருந்து மின்சாரத்தை எடுத்து பயன்படுத்துவது விதிமீறலாக கருதப்பட்டு மின்வாரிய பறக்கும் படை அதிகாரிகளால் சோதனையின் போது கண்டறியப்பட்டால், கட்டட உரிமையாளருக்கு தான் அபராதம் விதிக்கப்படுகிறது. மின் திருட்டு ஊர்ஜிதமானால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படலாம். எனவே, இதில் கவனம் தேவை.
தொழிலாளர் பாதுகாப்பு
தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை கொடுத்து, விபத்து ஏற்படாமல் இருக்க, கண்காணிக்க வேண்டியது ஒப்பந்ததாரரின் கடமை. வீட்டு உரிமையாளர்களிடமும் முறையாக ஒப்பந்தம் செய்து கொள்வது, கட்டட ஒப்பந்ததாரர்களுக்கும் நன்மையே.
ஏனெனில், கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும், உரிமையாளரிடமிருந்து தாங்கள் செய்த பணிக்காக வரவேண்டிய தொகையை வசூல் செய்ய, சட்ட பாதுகாப்பை அளிக்கிறது.
அவ்வாறின்றி வாய்மொழி ஒப்பந்த அடிப்படையில், கட்டுமான பணியை மேற்கொண்டால், இரு தரப்பினருக்கும் சிக்கலை உருவாக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

