/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
சாத்தியமாக்குகிறது சுயசான்றிடப்பட்ட கட்டட அனுமதி; விண்ணப்பித்த சில நிமிடங்களில் பெற்று விடலாம்!
/
சாத்தியமாக்குகிறது சுயசான்றிடப்பட்ட கட்டட அனுமதி; விண்ணப்பித்த சில நிமிடங்களில் பெற்று விடலாம்!
சாத்தியமாக்குகிறது சுயசான்றிடப்பட்ட கட்டட அனுமதி; விண்ணப்பித்த சில நிமிடங்களில் பெற்று விடலாம்!
சாத்தியமாக்குகிறது சுயசான்றிடப்பட்ட கட்டட அனுமதி; விண்ணப்பித்த சில நிமிடங்களில் பெற்று விடலாம்!
ADDED : செப் 13, 2024 11:39 PM
விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய சில நிமிடங்களிலேயே, கட்டட அனுமதி பெறும் செயல்முறை சாத்தியமாக்கப்பட்டுள்ளது.
Onlineppa.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, அவரவர் இருப்பிடத்திலிருந்தே விண்ணப்பிக்கலாம்.
ஒரு சதுர அடி கட்டடத்திற்கு, ரூ.88 வீதம் கணக்கிடப்பட்டு முழுத்தொகையையும் இணையம் வழியாக செலுத்த வேண்டும். செலுத்திய சில நிமிடங்களிலேயே, கட்டட அனுமதியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அரசு அலுவலகம் எங்கும் செல்ல வேண்டியதில்லை. கட்டடம் கட்டவும் உடனே ஆரம்பித்துவிடலாம் என்கிறார், பதிவுபெற்ற பொறியாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கனகசுந்தரம்.
அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...
மனையின் பரப்பு, 2,500 சதுர அடிக்குள்ளும், குடியிருப்பு கட்டட பரப்பு, 3,500 சதுர அடிக்குள்ளும் இருப்பின், இந்த உடனடி கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. மனை, அனுமதிபெற்ற மனைப்பிரிவில் இருக்க வேண்டும் அல்லது அரசு திட்டத்தின் மூலம் முறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
2010-16க்கு முன், பத்திரப்பதிவு செய்யப்பட்ட மனையாகவும் இருக்கலாம். அனுமதி பெற்ற நத்தம் பகுதி மனையாகவும் இருக்கலாம். அனுமதியற்ற மனைக்கு, இந்த திட்டம் பொருந்தாது. மலையிட மனைகளுக்கும் இத்திட்டம் பொருந்தாது.
கட்டட உயரம், 7 மீ.,க்கு மிகாமல் இரண்டு தளங்களில் இரு குடியிருப்பு வரை கட்டலாம். அறைகளின் அமைப்பை முடிவு செய்த பின்பு, ஒரு பதிவு பெற்ற பொறியாளரை கொண்டு, கட்டட வரைபடத்தை விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்க வேண்டும்.
வாகன நிறுத்தம் அளிக்கப்பட வேண்டும். முன்புறம் குறைந்தது, 1.5 மீ., காலியிடமும் அவசியம். மனையின் அகலம், 9 மீ.,க்குள் இருப்பின் பக்கவாட்டில் ஒரு புறத்தில், 1 மீ., காலியிடம் போதுமானது. இன்னொரு புறம் மனையை ஒட்டி கட்டலாம்; பின்புறம் காலியிடம் அவசியமில்லை.
விண்ணப்பதாரர், மனையின் உரிமையாளராகவோ அல்லது குத்தகை பெற்றவராகவோ அல்லது 'பவர் ஆப் அட்டர்னியா'கவோ இருக்க வேண்டும்.
மனையின் புகைப்படம், சுயசான்றிடப்பட்ட பதிவுபெற்ற சொத்துரிமை ஆவணம், உரிமையாளரின் பெயரில் பட்டா அல்லது டி.எஸ்.எல்.ஆர்., அனுமதிபெற்ற மனை அல்லது மனைப்பிரிவின் படம், கட்டட வரைபடம் மின்னணு கோப்பாக(பி.டி.எப்.,), இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
அவசியமெனில், பொறியாளரின் உதவியை பெறலாம். பட்டா/டி.எஸ்.எல்.ஆர்., ஆகியவைகளை அரசு இணையதளமான, eservices.tn.gov.in மூலமாக இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பதாரர் அளிக்கும் ஆவணங்களை சரி பார்க்கவும், கட்டுமானம் வரைபடத்தில் உள்ளது போலவே உள்ளதா என சரிபார்க்கவும், அதிகாரிகள் எப்போதும் வரலாம்.
வழங்கப்பட்ட கட்டட அனுமதி, ஐந்து ஆண்டுகளுக்கு செல்லும். அவசியமெனில் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க, காலாவதியாகும் முன் விண்ணப்பிக்கலாம்.
தவறு ஏதேனும் இருப்பின், அதை சரிசெய்ய வாய்ப்பு வழங்கப்படும். தவறான தகவலும் ஆவணங்களும், சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டது.
காலியிட வரி மற்றும் யு.ஜி.டி., இணைப்பு தொகை பின்னர் ஒரு மாதத்திற்குள் செலுத்தலாம்; காத்திருப்பு தவிர்க்கப்படுகிறது. அலைச்சல் இல்லாமல், உடனடியாக அனுமதி பெற்று கட்டுமானம் ஆரம்பிக்க, இந்த சுயசான்றிடப்பட்ட கட்டட அனுமதி ஒரு வரப்பிரசாதமாகும்.
இவ்வாறு, அவர் கூறினார்.