/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
வேடிக்கை பொருளாக வீட்டை வடிவமைப்பதை தவிர்ப்பது நல்லது!
/
வேடிக்கை பொருளாக வீட்டை வடிவமைப்பதை தவிர்ப்பது நல்லது!
வேடிக்கை பொருளாக வீட்டை வடிவமைப்பதை தவிர்ப்பது நல்லது!
வேடிக்கை பொருளாக வீட்டை வடிவமைப்பதை தவிர்ப்பது நல்லது!
ADDED : ஜூலை 20, 2024 07:57 AM

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பது பெரும்பாலான குடும்பங்களுக்கு வாழ்நாள் லட்சியமாக அமைந்துள்ளது. ஆனால், இதை செயல்படுத்துவதில் எப்படி செயல்படுகிறோம் என்பதில் சிலர் இன்னும் பொறுப்புடன் நடப்பதில்லையே என்று நினைக்கும் அளவுக்கு சூழல் உள்ளது. பொதுவாக, சொந்த வீடு கட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளை துவங்குவோர், அந்த வீட்டின் அளவுகள், வசதிகள் எப்படி இருக்க வேண்டும் என்றுதான் யோசிப்பார்கள்.
ஆனால், சிலர், அந்த வீட்டின் வெளிப்புற தோற்றம் ஏதாவது ஒரு விஷயத்தை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். உங்கள் வீடு எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கு உங்களுக்கு முழுமையான உரிமை உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதை எப்படி செயல்படுத்துவது என்பதில் சில அடிப்படை வரையறைகளை, கள எதார்த்த சூழலுடன் உணர்ந்து முடிவுகள் எடுக்க வேண்டும்.
இந்த நிலையில், வீட்டிற்குள் அறைகள் எப்படி இருக்க வேண்டும், பயன்பாட்டை எளிமையாக்க என்னென்ன வசதிகள் இருக்கணும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதேபோன்று வீட்டின் வெளிப்புறத் தோற்றம் சிக்கல் இல்லாத வகையில் இருப்பதை உறுதி செய்வது அவசியம். தற்போதைய சூழலில் வீடுகளுக்கான வெளிப்புறத் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய ஏராளமான மாதிரிகள் இணையதளத்தில் கிடைக்கின்றன.
நீங்கள் கட்டும் புதிய வீடு என்பது மற்றவர்கள் பார்வையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அதன் வடிவமைப்பு மற்றும் தோற்றம் ஆகியவை வேடிக்கைப் பொருளாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
சிலருக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கும், சிலருக்கு செல்லப் பிராணிகள் மீது ஆர்வம் இருக்கும் என்பதால், விளையாட்டுப் பொருட்களின் தோற்றத்தில் வீட்டை வடிவமைக்கின்றனர்.
அதேபோன்று சிலருக்கு கார்கள் வாங்குவதில் அலாதியான விருப்பம் இருக்கும். இதற்காக, தனக்கு பிடித்த காரின் மாதிரியில் வீட்டின் முகப்பு தோற்றத்தை வடிவமைத்து கட்ட வேண்டும் என்று அதற்கான பணிகளில் மிகுந்த பிடிவாதத்துடன் ஈடுபடுவார்கள். இப்படி, வேடிக்கையான வடிவங்களில் வீட்டை கட்டினால் அது பார்ப்போருக்கு முதல் முறை மட்டுமே வித்தியாசமாக தெரியும்.
அதன்பின், அது ஒரு வேடிக்கைப் பொருளாக தான் இருக்கும், சில சமயங்களில் இதுபோன்ற வடிவமைப்புகள் கிண்டலுக்கு ஆளாகும் நிலையும் ஏற்படுகிறது. எனவே, உங்கள் வீட்டுக்கான வெளிப்புறத் தோற்றம் பார்ப்போரிடம் மகிழ்ச்சியை, மரியாதையை ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக, பயன்படுத்துவோருக்கு சிரமத்தை ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமானத் துறை வல்லுனர்கள்.