/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
சொத்து வாங்கும்போது இதைத்தான் முக்கியமாக பார்க்க வேண்டும் பாஸ்!
/
சொத்து வாங்கும்போது இதைத்தான் முக்கியமாக பார்க்க வேண்டும் பாஸ்!
சொத்து வாங்கும்போது இதைத்தான் முக்கியமாக பார்க்க வேண்டும் பாஸ்!
சொத்து வாங்கும்போது இதைத்தான் முக்கியமாக பார்க்க வேண்டும் பாஸ்!
ADDED : ஆக 10, 2024 12:53 AM

''தான செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்யும் செயல், சட்ட விரோதம் என்று பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் வந்து விட்டன,'' என்று, அறிவுறுத்துகிறார், கோவை வக்கீல் வடவள்ளி நாகராஜன்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் குடிமக்கள் பயன்பெற, அரசால் இலவசமாக வழங்கப்பட்ட HSD பட்டாவின் வாயிலாக, சொத்தின் உரிமையை வைத்திருக்கும் பட்டாதாரருக்கு அந்நிலம், அவர் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டதேயன்றி, வணிக, லாப நோக்கில் அல்ல என்பதை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் பலருக்கு விழிப்புணர்வு இல்லை.
அந்த பட்டா நிலத்தை விற்பனை, செட்டில்மென்ட் உட்பட எந்த வித பாராதீனங்களையும் குறிப்பிட்ட வருடத்துக்கு செய்யக் கூடாது என்றும், அரசுக்கு தேவைப்படும் பட்சத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திரும்ப எடுத்துக் கொள்ளப்படும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருக்கும்.
அந்த நிபந்தனை காலம் முடிவடைந்த பின், பட்டா வழங்கிய அதிகாரியிடம் ஆட்சேபனையின்மை சான்று பெற்ற பின்பே, அந்த சொத்தினை விற்கவோ, வில்லங்கப்படுத்தவோ இயலும். இவ்வாறு நிபந்தனை காலம் முடியும் முன், ஆவண பதிவு செய்தால் அது செல்லத்தக்கதல்ல; இதில் கவனம் தேவை.
எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட இலவச பட்டா வாயிலாக சொத்தின் உரிமை பெற்ற நபர், நிபந்தனை காலம் முடிந்தாலும், அதை எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கே விற்க முடியும். மற்றவர்களுக்கு விற்பனை செய்ய உரிமை இல்லை; இது மிக முக்கியம் ஆகும்.
தான செட்டில்மென்ட் வாயிலாக, தந்தையோ அல்லது தாயாரோ தன் அன்புக்குரியவர்களுக்கு (ரத்த சம்பந்த உறவுகளுக்கு) தங்கள் பெயரில் உள்ள அசையா சொத்தின் உரிமையை மாற்றிக் கொடுக்கலாம்.
ஆனால், அவ்வாறு கொடுத்த பின், அதை எக்காலத்திலும் ரத்து செய்ய இயலாது. தான செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து செய்யும் செயல், சட்ட விரோதம் என்று பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் வந்து விட்டன.
குடும்ப உறவுகளுக்கு இடையில், விரிசல் ஏற்படும் சமயங்களில் முன் யோசனையின்றி, செட்டில்மென்ட் ஆவணத்தை ரத்து பத்திரம் வாயிலாக, சிலர் சாதாரணமாக ரத்து செய்வதை காண முடிகிறது.
அவ்வாறு ரத்து செய்தாலும், செட்டில்மென்ட் கொடுத்தவருக்கு, அந்த சொத்தின் உரிமை திரும்ப வராது. அவ்வாறு கொடுத்தவருக்கே சொத்தின் உரிமை திரும்ப வர வேண்டும் என்று விரும்பினால், யாருக்கு செட்டில்மென்ட் கொடுத்தாரோ, அவரிடமிருந்தே மீண்டும் தான செட்டில்மென்ட் வாயிலாக எழுதி பெற்றுக்கொள்ளலாமே ஒழிய, ரத்து செய்ய இயலாது.
மனையையோ, பூமியையோ வாங்கும் போது, பொதுமக்கள் ஆவணங்களை சரிபார்த்து மேற்கூறியவாறு செட்டில்மென்ட் ரத்து செய்யப்பட்டிருந்தால், அந்த சொத்துக்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
ஏனெனில், ஏற்கனவே செட்டில்மென்ட் ஆவணம் வாயிலாக உரிமை பெற்ற நபர், பிற்காலத்தில் நீதிமன்றத்தை நாடும் போது, சொத்தை வாங்கியவர், சட்ட சிக்கலை சந்திக்க வேண்டி வரும். இதில் கவனம் தேவை.
இவ்வாறு, அவர் கூறினார். தொடர்புக்கு: 98422 50145.

