மாடிப்படிக்கான கான்கிரீட் தளம் அமைப்பதில் கவனமாக இருக்கணும்!
மாடிப்படிக்கான கான்கிரீட் தளம் அமைப்பதில் கவனமாக இருக்கணும்!
ADDED : பிப் 14, 2026 07:36 AM

நி லம் வாங்கி அதில் சொந்தமாக வீடு கட்டும் போது உறுதி தன்மைக்காக ஒவ்வொரு பாகமும் எப்படி அமைய வேண்டும் என்பதில் பலரும் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். இதில், கட்டடத்தின் உறுதியுடன் பயன்பாட்டுக்கான விஷயங்களிலும் உரிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
சென்னை போன்ற நகரங்களில் குறைந்த பரப்பளவு மனைகள் கிடைப்பதில் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இருப்பினும், குறைந்த பரப்பளவு மனைகள் வாங்குவோர் அதில் வீடு கட்டும் போது வாகன நிறுத்துமிடம், பக்கவாட்டு காலியிடம் போன்ற விஷயங்களை விட்டு கொடுப்பதை பார்க்க முடிகிறது.
கிடைத்த மனையின் முழு பரப்பளவையும் வீட்டுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்து உரிமையாளர்கள் செயல்படும் போது பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, இவ்வாறு வீடு கட்டுவோர், மாடிப்படி அமைப்பதிலும் மிகவும் அலட்சியமாக செயல்படுவதை பார்க்க முடிகிறது.
புதிய வீட்டுக்கான வரைபடம் தயாரிக்கும் நிலையில் அதில் அடிப்படை தேவைகள் என்ன என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும். இந்த வகையில், மாடிப்படி அமைப்பதற்கான இடத்தை ஒதுக்குவதில் முறையாக கவனம் செலுத்த வேண்டும்.
நீங்கள் கட்டுவது தனி வீடாக இருந்தாலும், அதில் 3.5 அடி அகலத்துக்கு மாடிப்படி இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும். ஒரு சமயத்தில் ஒரு நபர் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் போதிய இடம் இருந்தால் போதும் என்ற நோக்கத்தில் செயல்பட கூடாது.
விழாக்கள், அவசர காலங்களில் ஒரே சமயத்தில் அதிகமானோர் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படும் என்பதை மனதில் வைத்து இதற்கான அளவை முடிவு செய்ய வேண்டும். மாடிப்படிக்கான கான்கிரீட் தளம் அமைக்கும் போது அதன் அளவுகள் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
இந்த கான்கிரீட் தளம் எங்கு துவங்கி, எங்கு முடிய வேண்டும் என்ற அடிப்படையில் துவக்கம், முடிவு பகுதிகளில் மிகவும் கவம் செலுத்த வேண்டும். பெரும்பாலான வீடுகளில் மாடிப்படிகள் எண்ணிக்கை சார்ந்த சில நம்பிக்கைகள் இருக்கும்.
இதன் அடிப்படையில், மாடிப்படி எண்ணிக்கையை முடிவு செய்து அதன் அளவுகள் அடிப்படையில் அதற்கான கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். இதில் கட்டடத்தின் மேல் தளத்தில் மாடிப்படிக்கான கான்கிரீட் தளம் இணையும் இடத்தை துல்லியமாக கவனிக்க வேண்டும்.
இந்த பாகம் பக்கவாட்டு சுவரில் எப்படி இணைய வேண்டும். இதில் கைப்பிடி சுவர் அமைப்பதற்கான இடம் ஆகிவற்றை கருத்தில் கொண்டு அகலத்தை முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயங்களில் கவனமாக இருந்தால் பாதுகாப்பான மாடிப்படிகள் கிடைக்கும் என்கின்றனர் கட்டுமான துறை பொறியாளர்கள்.
படிகளின் எண்ணிக்கையை முடிவு செய்து அதன் அளவுகள் அடிப்படையில், மாடிப் படிக்கான கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும், இது கட்டடத்துடன் இணையும் இடங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
