/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
தானியங்கி முறையில் அனுமதி கிடைத்தால் வீடு கட்டுவது எளிதாகும்!
/
தானியங்கி முறையில் அனுமதி கிடைத்தால் வீடு கட்டுவது எளிதாகும்!
தானியங்கி முறையில் அனுமதி கிடைத்தால் வீடு கட்டுவது எளிதாகும்!
தானியங்கி முறையில் அனுமதி கிடைத்தால் வீடு கட்டுவது எளிதாகும்!
ADDED : அக் 05, 2024 09:21 PM
தமிழகத்தில் கட்டுமான திட்ட அனுமதி பணிகளை எளிமையாக்குவதற்கு, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், கட்டுமான திட்ட அனுமதி பெறுவது உரிமம் பெற்ற பொறியாளர் பணி என்று உரிமையாளர்கள் ஒதுங்கி இருப்பது நல்லதல்ல.
கட்டுமான பொறியாளர்கள் இதற்கான பணிகளை முடித்துக் கொடுத்து விடுவர், அதற்கு தேவையான தொகையை மட்டும் கொடுத்தால் போதும் என்ற எண்ணத்தில் தான் பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர்.
உண்மையில் உங்களுக்கான புதிய வீட்டை கட்டுவதற்கு என்ன வகையில், எப்படி அனுமதி பெறப்படுகிறது என்பதை மக்கள் அறிந்து இருக்க வேண்டும்.
குறிப்பாக, நகர், ஊரமைப்பு சட்டப்படி, பொது கட்டட விதிகள் வகுக்கப்பட்டு, 2019ல் வெளியிடப்பட்டது.
இந்த விதிகளின் அடிப்படை யில் தான் அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளும், நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., வாயிலாக கட்டுமான திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.
இதில் பெரிய அளவிலான அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான பணிகளை ஆன்லைன் முறைக்கு மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக ஒற்றை சாளர முறையில், 30 நாட்களுக்குள் கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஆனால், தமிழகம் முழுதும், 1,500 முதல், 2,500 சதுர அடி வரையிலான குடியிருப்பு திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் தான் அதிகமாக வருகின்றன.
இந்த விண்ணப்பங்களை உள்ளாட்சி அமைப்புகள் பரிசீலித்து, விரைவாக ஒப்புதல் தர வேண்டும் என்பதற்காக, ஆன்லைன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை மாநகராட்சி முதல் கடைகோடியில் உள்ள ஊராட்சி பகுதி வரையில், யார் கட்டுமான திட்ட அனுமதி பெற வேண்டும் என்றாலும், ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாகி உள்ளது.
இதன்படி, பொறியாளர்கள் புதிய நடைமுறையில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர்.
இதையடுத்து, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில், புதிதாக வீடு கட்டுவோர், விதிகளுக்கு உட்பட்டு வரைபடங்களை தயாரித்து உரிய கட்டணங்களுடன் இணையதளம் வாயிலாக தாக்கல் செய்துவிட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.
இந்த நடைமுறையை தமிழகத்தில் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால், தானியங்கி முறையில் கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
இது போன்ற புதிய நடைமுறைகள் அமலுக்கு வரும் போது, என்ன விண்ணப்பம், வரைபடம் தாக்கல் செய்யப்பட்டதோ அதன் அடிப்படையிலேயே கட்டடம் கட்டி முடிக்கப்பட வேண்டும்.
இது விஷயத்தில் கட்டுமான பொறியாளர் மீது மட்டுமே அனைத்து பொறுப்புகளையும் ஏற்ற முடியாது.
நில உரிமையாளர்களும், பணியாளர்களும் விதிகளுக்கு உட்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.