கான்கிரீட் அமைப்புகள் உறுதியாக 28 நாட்கள் நீராற்றுதல் அவசியம்!
கான்கிரீட் அமைப்புகள் உறுதியாக 28 நாட்கள் நீராற்றுதல் அவசியம்!
ADDED : மார் 14, 2026 06:51 AM

இன்றைய சூழலில், வீடு கட்டும் பொறுப்பை அனைவரும் கட்டுமான நிறுவனம் அல்லது ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கின்றனர. இதற்காக நீங்கள் தேர்வு செய்யும் நிறுவனம் ஒவ்வொரு கட்டத்திலும் பணிகளை முறையாக செய்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் போட்டு பணிகளை ஒப்படைத்து இருக்கிறோம். குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வேலையை முடித்து அவர் வீட்டை ஒப்படைத்து விடுவார் அப்போது அங்கு சென்றால் போதும் என்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர்.
உங்களுக்கான வீட்டை கட்டும் நபர் ஏற்றுக்கொண்ட பொறுப்பை எப்படி செயல்படுத்துகிறார் என்பதை நீங்கள் தான் கண்காணிக்க வேண்டும். சில இடங்களில் மக்கள் கட்டுமான பணி நடக்கும் போது நாம் செல்வதால் பிரச்னை வருமோ என்று நினைக்கின்றனர்.
ஆனால், கட்டுமான பணிகளை தினசரி அடிப்படையில் கூட உரிமையாளர்கள் ஆய்வு செய்வது நல்லது. ஆய்வு என்றால், கட்டுமான பணியாளருடன் நின்று அவர் செய்யும் ஒவ்வொரு வேலையையும் இப்படி செய்யுங்கள், அப்படி செய்யுங்கள் என்று சொல்வதல்ல.
கட்டுமான பணி நடக்கிறது என்றால் ஒவ்வொரு கட்ட பணிகளும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நடந்தால் நல்லது என்று நினைக்காதீர். சுவர் கட்டுவதில் இருந்து தளம் அமைப்பது வரை ஒவ்வொரு நிலையிலும் கட்டடத்தை கட்டி எழுப்புவதுடன் அதை முறையாக நீராற்ற வேண்டியது அவசியம்.
உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில் எந்த பாகத்துக்கு என்ன வகை சிமென்ட் பயன்படுத்தப்படுகிறது என்று பாருங்கள். அந்த வகை சிமென்ட் அடிப்படையிலான கான்கிரீட் உறுதியாக எவ்வளவு நாட்கள் நிராற்ற வேண்டும் என்பதையும் விசாரித்து அறிய வேண்டும்.
குறிப்பாக, அஸ்திவார துாண் முதல் மேல் தளம் வரையிலான பணிகளில் கான்கிரீட் கொட்டி உருவாக்கப்படும் பாகங்கள் முறையாக நீராற்றப்பட வேண்டும். இந்த பாகங்களை கட்டும் போது ஒவ்வொரு நிலையிலும், 20 முதல், 28 நாட்கள் வரை தண்ணீர் தெளித்து நீராற்ற வேண்டியது அவசியம்.
இதில் கட்டடத்திற்குள் சென்று பார்க்கும் போது, பல இடங்களில் தண்ணீர் சிந்திக்கொண்டு இருப்பதை பார்த்து முகம் சுளிக்காதீர்கள். இது போன்று அந்த இடம் இல்லாவிட்டால் மட்டுமே நீங்கள் விசாரிக்க வேண்டும் என்பதை புரிந்து செயல்படுங்கள்.
கான்கிரீட் பாகங்கள் கட்டப்பட்ட நிலையில் முறையாக நீராற்றப்படுவதன் வாயிலாக மட்டுமே அதில் உறுதி தன்மை ஏற்படும். சிமென்ட், எம். சாண்ட், தண்ணீர் சேர்ந்த கலவை வேதிவினை புரிந்து கட்டடத்தின் பாகமாக உறுதியாக நிற்க வேண்டியது அவசியம்.
இந்த அடிப்படையை புரிந்து கொண்டு உரிமையாளர்கள் செயல்பட்டால் உறுதியான கட்டடம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
அஸ்திவாரம் முதல் மேல் தளம் வரையிலான பணிகளில் கான்கிரீட்டால் உருவாக்கப்படும் பாகங்கள் முறையாக நீராற்றப்பட வேண்டும், இதற்காக, 20 முதல், 28 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளலாம்.
