/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
குடியிருப்பு திட்டங்களில் அதிக காலி இடம் கொடுக்கும் கட்டுமான நிறுவனங்கள்!
/
குடியிருப்பு திட்டங்களில் அதிக காலி இடம் கொடுக்கும் கட்டுமான நிறுவனங்கள்!
குடியிருப்பு திட்டங்களில் அதிக காலி இடம் கொடுக்கும் கட்டுமான நிறுவனங்கள்!
குடியிருப்பு திட்டங்களில் அதிக காலி இடம் கொடுக்கும் கட்டுமான நிறுவனங்கள்!
ADDED : நவ 25, 2024 09:28 AM

தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகரித்து வருகின்றன. இது போன்ற திட்டங்களில் வீடு வாங்கி குடியேறுவதில் மக்களும் ஆர்வமாக இருப்பதால், இதற்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பெரிய அளவிலான பல்வேறு முன்னணி கட்டுமான நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது தொடர்பான கட்டுமான நிறுவனங்களின் அணுகுமுறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக, சென்னை போன்ற நகரங்களில் நிலத்தின் விலை வெகுவாக உயர்ந்துள்ளதால், குறைவான இடத்தில் அதிக மக்கள் குடியேற அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.
அதே நேரத்தில், ஒரு மனையின் மொத்த பரப்பளவு, அது அமைந்துள்ள சாலையின் அகலம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது.
இதில், சில ஆண்டுகளுக்கு முன்புவரை, மனையின் பெரும்பாலான பகுதிகளை கட்டுமான திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்பதில் கட்டுமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. ஆனால், இது போன்ற குடியிருப்பு வளாகங்களில் திறந்தவெளி இடங்கள் அதிகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் மக்களிடம் எழுந்துள்ளது.
இதை புரிந்து கொண்ட பல்வேறு கட்டுமான நிறுவனங்கள், அடுக்குமாடி திட்ட வளாகங்களில், காலி இடங்களின் பரப்பளவை அதிகரிக்க முன்வந்துள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பல இடங்களில் அதிக உயரத்தில்அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது தற்போது சாத்தியமாகி உள்ளது.
இது போன்ற அதிக உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட குறிப்பிட்ட அளவு நிலத்தை மட்டும் பயன்படுத்தும் நிறுவனங்கள் மீதி இடங்களை திறந்த வெளி பகுதியாக பராமரிக்க திட்டமிடுகின்றன. இதனால், அந்தகுடியிருப்பில் வீடு வாங்குவோருக்கு திருப்தி ஏற்படுகிறது.
உதாரணமாக, 20 ஏக்கர்நிலத்தில் குடியிருப்பு திட்டத்தை அறிவிக்கும் நிறுவனம், நகர் மற்றும் ஊரமைப்பு சட்டப்படி, 10 சதவீத நிலத்தை திறந்தவெளி ஒதுக்கீடு எனப்படும் ஓ.எஸ்.ஆர்., ஆக ஒதுக்கினால், போதும். இதன்படி, 10 சதவீத நிலத்தை ஒப்படைக்கும் நிறுவனங்கள் அதில் கட்டுமான திட்டத்தை செயல்படுத்துகின்றன.
அப்போது, அடிப்படை ஓ.எஸ்.ஆர்.,ஆக வழங்கிய, 10 சதவீதத்துக்கு மேல் திட்ட பகுதியின் மொத்த பரப்பளவில், 50 சதவீத நிலத்தை காலியாக பராமரிக்க முன்வந்துள்ளன.இந்த இடங்களில் எவ்வித கட்டுமானமும் இன்றி பூங்கா மற்றும் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்த கட்டுமான நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன.
அதிக தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் இந்த புதிய அணுகுமுறையால், வீடு வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை போன்ற நெரிசலான நகரங்களில் இது போன்ற காலியிடங்களை விடுவது ஓரளவுக்கு ஆறுதலை அளிப்பதாக உள்ளது.
இயல்பான சூழலில் பயன்படுத்த ஏற்றதாக இருப்பதுடன், தீ விபத்து போன்ற அவசர காலத்தில் இது போன்ற கூடுதல் காலி இடங்கள் இருப்பது பேருதவியாக இருக்கும். பாதுகாப்பு கோணத்தில் இந்த அணுகுமுறை நல்ல பலனை தரும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.