/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
'சோக்பிட்' அமைப்பதில் கையாள வேண்டிய அம்சங்கள் தண்ணீர் அடிக்கடி நிறைவதை தடுக்க பொறியாளர் 'டிப்ஸ்'
/
'சோக்பிட்' அமைப்பதில் கையாள வேண்டிய அம்சங்கள் தண்ணீர் அடிக்கடி நிறைவதை தடுக்க பொறியாளர் 'டிப்ஸ்'
'சோக்பிட்' அமைப்பதில் கையாள வேண்டிய அம்சங்கள் தண்ணீர் அடிக்கடி நிறைவதை தடுக்க பொறியாளர் 'டிப்ஸ்'
'சோக்பிட்' அமைப்பதில் கையாள வேண்டிய அம்சங்கள் தண்ணீர் அடிக்கடி நிறைவதை தடுக்க பொறியாளர் 'டிப்ஸ்'
ADDED : நவ 29, 2024 11:57 PM

நான் புதிதாக வீடு கட்டி வருகிறேன். மின் தேவைக்காக வீட்டில் யு.பி.எஸ்., பேட்டரிகளை வீட்டுக்குள் வைக்கலாமா அல்லது வெளியில் வைக்கலாமா?
-நாகராஜன்,
சரவணம்பட்டி.
யு.பி.எஸ்., பேட்டரிகளை வீட்டுக்கு வெளியில் காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். அதேசமயம் மழையில் நனையாத வகையில் இருக்க வேண்டும். ஏனெனில், பேட்டரி அமிலம் 'புளோர் டைல்ஸ்' மற்றும் சுவர்கள் மீது படும் பட்சத்தில் அவை பொரிந்து பாதிப்படையும். சில சமயங்களில் அதிக வெப்பத்தால் பேட்டரி பழுதாகி மின்விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. 'லாப்ட்'களிலும் யு.பி.எஸ்., பேட்டரிகளை வைக்கக்கூடாது. ஏனென்றால் இவற்றின் எடை அதிகமாக இருப்பதால் மிக உயரத்தில் பேட்டரிகளை வைத்தாலும் அதில் மீண்டும் 'டிஸ்டில்டு வாட்டர்' ஊற்றுவதற்கும், அதை பராமரிப்பதற்கும், கையாளுவதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும்.
எங்கள் வீட்டில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டி, 'செப்டிக் டேங்க்' மற்றும் கழிவு நீர் வெளியேறும் குழாய் சேம்பர் மூடிகள் அடிக்கடி துருப்பிடித்து உடைந்து விடுகிறது. இதனை அடிக்கடி மாற்ற வேண்டிய சூழ்நிலை இருப்பதால் அதிக செலவும் ஆகிறது. இதற்கு ஏதேனும் மாற்று வழி உண்டா?
-பெருமாள்,
எட்டிமடை.
தற்போது கடைகளில் எப்.ஆர்.பி., எனப்படும் மெட்டீரியலில் செய்யப்பட்ட சேம்பர் மூடிகள் கிடைக்கிறது. இவை ஒரு அடி நீளம், ஒரு அடி அகலத்தில் இருந்து இரண்டடி, மூன்று அடி வரை உள்ள அளவுகளில் கிடைக்கிறது. இது சுமார் இரண்டு டன் முதல் மூன்று டன் வரை எடை தாங்கும் வலிமையுடன் இருக்கிறது; எளிதில் உடையாது, துருப்பிடிக்காது. போர்டிகோவில் இருக்கக்கூடிய தண்ணீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க் போன்றவற்றின் மீதும் இந்த எப்.ஆர்.பி., மூடிகள் அமைக்கலாம். இதன் மீது இரு சக்கர வாகனங்கள், கார் போன்றவற்றை ஏற்றினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.
நான் கட்டி வரும் வீட்டில் 'சோக்பிட்' அமைக்க முடிவு செய்துள்ளேன். அது எவ்வளவு ஆழமாக அமைக்க வேண்டும். அதற்குள் செங்கற்களை கொண்டு நிரப்பலாமா?
-செந்தில், வடவள்ளி.
அவரவர் இட வசதியை பொறுத்து இவற்றை முடிவு செய்து கொள்ளலாம். குறைந்தது நான்கு அடி அகலமும், நான்கு அடி நீளமும், ஆறு அடி ஆழம் வரை எடுத்தால் சிறப்பு. சோக்பிட்டை செங்கற்களை கொண்டு நிரப்பக் கூடாது. ஏனெனில் செங்கல் நாளடைவில் பொரிந்து மண்ணாகி, நீரை உறிஞ்சும் தன்மையை இழந்து விடும். அதனால் விரைவில் நிறைந்து அடிக்கடி பராமரிக்க நேரிடும். எனவே, சோக்பிட்டில் ஓடை கற்கள், சுண்ணாம்பு கற்கள் கொண்டு நிரப்பலாம். ஓடைக்கற்கள் அதிக அளவு தண்ணீரை உறிஞ்சக்கூடிய தன்மை உள்ளது; எளிதில்நிரம்பாது.
பேஸ் மட்டத்துக்கு மேல் 'காலம் போஸ்ட்' அறையின் மட்டம் வரை செங்கல் சுவர் கட்டிய பிறகு, பலகையை பக்கவாட்டில் அமைத்து கான்கிரீட் போடலாம் என்று மேஸ்திரி கூறுகிறார்; இது சரியான முறையா?
-சுந்தர்,
மத்தம்பாளையம்.
இது ஒரு தவறான கட்டுமான முறை. எப்பொழுதும் காலம் பாக்ஸ் பொருத்திதான் கான்கிரீட் போட வேண்டும். அதன் பிறகு சுவர் கட்டடம் கட்ட வேண்டும். கட்டடத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் சுவர் பூச்சு நடைபெறுவதற்கு முன்பு தற்போது கடைகளில் கிடைக்கும் 'பைபர் மெஸ்'சை பயன்படுத்தி காலம், பீம் ஜாயின்ட்களில் உட்புறம், வெளிப்புறமும் வைத்து அதன் பிறகு பூச்சு வேலை செய்ய வேண்டும். அதன்பிறகு, காலம் போஸ்ட், பீம் ஆகியவற்றின் இணைப்புகளில் வெடிப்புகள் வராது.
-மணிகண்டன்,
பொருளாளர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்(காட்சியா).

