/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
விற்பனைக்கு வரும் சொத்தின் உண்மை தன்மையை ஆராய்வது எப்படி?
/
விற்பனைக்கு வரும் சொத்தின் உண்மை தன்மையை ஆராய்வது எப்படி?
விற்பனைக்கு வரும் சொத்தின் உண்மை தன்மையை ஆராய்வது எப்படி?
விற்பனைக்கு வரும் சொத்தின் உண்மை தன்மையை ஆராய்வது எப்படி?
ADDED : மே 11, 2024 07:50 AM

வீடு, மனை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் வில்லங்கம் இல்லாத சொத்துக்களை தான் தேடுகிறார்கள். இதில் விற்பனைக்கு வரும் சொத்து தொடர்பாக என்னென்ன ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதில், அடிப்படை நிலையிலேயே தெளிவு வேண்டும்.
குறிப்பாக, விற்பனை க்கு வரும் சொத்து தற்போது யார் பெயரில் உள்ளது, அவருக்கு எப்படி, எந்த பத்திரம் வாயிலாக வந்தது என்பதை விசாரிக்க வேண்டும். தற்போதைய உரிமையாளர் என்று ஆவணத்தில் உள்ள பெயரும், விற்பதற்காக உங்களை அணுகும் நபரும் ஒன்று தான் என்பதை உறுதி செய்வது அவசியம்.
பெரும்பாலான சமயத்தில், ஆவணத்தில் ஒரு பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும், ஆனால், விற்பனைக்காக பேரம் பேசுவது வேறு நபராக இருக்கலாம். இப்படி பத்திரத்தில் இல்லாத நபர் வாயிலாக பேரம் பேசப்படும் சொத்துக்களை வாங்குவதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.
பத்திரத்தில், பட்டாவில் யார் பெயர் இருக்கிறது என்பதையும், அவர் தான் விற்பனை செய்கிறாரா என்பதையும் தெளிவாக உறுதி செய்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, அந்த நபருக்கு அந்த சொத்து எப்படி வந்தது என்பதை உரிய ஆவண ரீதியாக தெளிவுபடுத்த வேண்டும்.
பல இடங்களில், உயில் அல்லது பாகப்பிரிவினை வாயிலாக கிடைத்தது என்று கூறி, ஒரு சொத்தை விற்பனை செய்வர். இவ்வாறு விற்பனை செய்ய வருவோரிடம், எந்த பத்திரத்தின் அடிப்படையில் இந்த உயில், பாகப்பிரிவினை பத்திரம் எழுதப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை கேட்டு பெறுங்கள்.
இன்றைய நிலையில் ஒரு சொத்து விற்பனைக்கு வரும் போது அதன் முந்தைய பரிமாற்றங்கள் தொடர்பான தாய் பத்திரங்களை ஆய்வு செய்வது மிக மிக அவசியம். அதில் உரிய சட்ட வல்லுனர்களின் வழிகாட்டுதல்களை பயன்படுத்திக்கொள்வது நல்லது. முந்தைய அசல் பத்திரங்கள் இல்லாமல், ஒரு உயில், பாகப்பிரிவினை, செட்டில்மென்ட் பத்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு வரும் நபரை நம்பி, சொத்து வாங்குவது சிக்கலை ஏற்படுத்தும்.
இதில் ஐந்து அல்லது, 10ஆண்டுகளுக்கு முன் உயில் எழுதப்பட்டு இருக்கலாம், அதற்கு முந்தைய பரிமாற்றங்கள், 50 ஆண்டுகளுக்கு முன் நடந்து இருக்கலாம். இருந்தாலும், எவ்வளவு ஆண்டுகளுக்கு முந்தைய பரிமாற்றம் என்றாலும் அதற்கான அசல் பத்திரங்கள் அந்த நபர்களிடம் இருக்க வேண்டும். இதில் அசல் தாய்பத்திரங்கள் இல்லாத நபர்களிடம் சொத்து வாங்குவதை முழுமையாக தவிர்ப்பது பல்வேறு சிக்கல்களில் தப்பிக்க உதவும்.
சொத்து வாங்குவோர் இது விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்கின்றனர் ரியல் எஸ்டேட் துறை வல்லுனர்கள்.