/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
துாண்களில் இணைப்பதில் ரீபார்கப்ளர் பயன்படுத்துவது எப்படி?
/
துாண்களில் இணைப்பதில் ரீபார்கப்ளர் பயன்படுத்துவது எப்படி?
துாண்களில் இணைப்பதில் ரீபார்கப்ளர் பயன்படுத்துவது எப்படி?
துாண்களில் இணைப்பதில் ரீபார்கப்ளர் பயன்படுத்துவது எப்படி?
ADDED : டிச 06, 2025 08:21 AM

கட்டடத்தின் உறுதித் தன்மையை தாங்கி நிற்பவை துாண்கள் தான் என்பதை வீடு கட்டுவோர் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால், வீடு கட்டும் போது, துாண்களை அமைப்பதில் எந்த விதத்தில் செலவை குறைக்கிறேன் என்று சமரசம் செய்துக்கொள்ளகூடாது.
குறிப்பாக, துாண்கள் அமைக்கும் விஷயத்தில் கட்டட அமைப்பியல் வல்லுனர் அளிக்கும் வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். ஒரு கட்டடத்தின் மொத்த அளவு என்ன அதனால் ஏற்படும் சுமை என்ன என்பதை கணக்கிட்டு அதற்கு ஏற்ற துாண்களை கட்டட அமைப்பியல் பொறியாளர் பரிந்துரை செய்வார்.
இதன் அடிப்படையில் புதிய வீட்டுக்கு எந்தெந்த இடத்தில் அஸ்திவார துாண்கள் அமைப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு துாண்கள் அமைக்கும் போது மேலிருந்து இறங்கும் சுமையை கடத்துவதற்கு ஏற்ற வகையில் கம்பிகளை பயன்படுத்த வேண்டும். இதில் அஸ்திவார நிலையில் கம்பி கட்டும் பணிகளை முடித்து, கான்கிரீட் போட்ட பின், அதன் தொடர்ச்சியாக துாண்களை எழுப்ப வேண்டும். இவ்வாறு மேல் நோக்கி துாண்களை எழுப்பும் நிலையில் கம்பிகளில் தேவையான இடங்களில் இணைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
துாண்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்பதில், கம்பிகளை இணைக்கும் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதில் லேப்பிங் என்ற முறையில் பழைய கம்பியில், ஒன்று அல்லது ஒன்றை அடி வரை புதிய கம்பியை சேர்த்து கட்டி இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, கம்பிகளை இணைக்கும் போது அதிக கம்பிகள் செலவு ஏற்படுவதுடன் இணையும் இடத்தில் சுற்றப்படும் கம்பிகள் உடைத்தால் இணைப்பு பாதிக்கப்படும். இதில் இணைப்பு பகுதியில் கான்கிரீட் கொட்டும் போதும் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன. அதனால், கம்பிகள் இணைப்பில் ரீபார் கப்ளர் என்ற பொருளை பயன்படுத்தும் பழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. ஒரு அங்குலம் அளவில் உட்புறத்தில் திருகு வசதியுடன் தயாரிக்கப்படும் இந்த கப்ளர்களை பயன்படுத்தினால், எளிதாக கம்பிகளை இணைக்கலாம்.
உப்புற திருகு இருப்பதால், கம்பிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் இடத்தில் கான்கிரீட் கொட்டும் போதும், பிற்காலத்திலும் எவ்வித பிரச்னையும் ஏற்படாது. கட்டுமான பணியில் ஒரு அங்குலம் முதல் மூன்று அங்குலம் வரை கம்பிகளின் தடிமனுக்கு ஏற்ற வகையில் ரீ பார் கப்ளர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
வழக்கமான லேப்பிங் முறையை காட்டிலும், வெல்டிங் வைப்பதை காட்டிலும், இந்த முறை மிக எளிதான நடைமுறையாக அமைந்துள்ளது. இதை பயன்படுத்தி கம்பிகளை இணைக்கும் போது அங்கு உறுதி தன்மை பாதிக்கப்படாது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

