வீடு கட்டுவதற்கு கலந்தாலோசகர்களை பயன்படுத்துவது எப்படி?
வீடு கட்டுவதற்கு கலந்தாலோசகர்களை பயன்படுத்துவது எப்படி?
ADDED : பிப் 07, 2026 08:11 AM

புதிய வீட்டுக்கான பணிகளை மேற்கொள்ள அது தொடர்பான ஒவ்வொரு நிலையையும் சரியாக திட்டமிட வேண்டியது அவசியம். அதில் கட்டுமான பணிகளை யார் வாயிலாக மேற்கொள்ள போகிறோம் என்பதை சரியாக புரிந்து தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.
இதில் முதல்படியாக, உள்ளாட்சி உட்பட அரசு துறைகளில் முறையாக பதிவு செய்த நிறுவனங்கள், பொறியாளர்களை பயன்படுத்த வேண்டும். நீங்கள் ஒரு கட்டுமான நிறுவனம் அல்லது ஒப்பந்ததாரரை தேர்வு செய்வதற்காக பரிசீலிக்கும் போது அவர் முறையாக பதிவு செய்தவரா என்பதை சரி பார்க்க வேண்டும்.
வீட்டுக்கான பணி பொறுப்பை ஏற்பதற்கு ஒப்பந்ததாரர் அல்லது பொறியாளர் ஒருவரை தேர்வு செய்யும் நிலையில் அவர் அந்த பகுதி குறித்த விபரம் தெரிந்தவராக இருக்க வேண்டும். நீங்கள் என்ன வகையான வீட்டை கட்ட நினைக்கிறீர்களோ அதில் அவருக்கு போதிய அனுபவம் இருக்க வேண்டும்.
வீடு கட்டுவதற்கான பொறியாளர் அல்லது ஒப்பந்ததாரர் வெகு தொலைவில் உள்ள ஊரை சேர்ந்தவராக இருப்பது நல்லதல்ல. அதே நேரம், கட்டுமான பணி இடத்துக்கு அடிக்கடி வந்து செல்லக்கூடியவராகவும், நீங்கள் எளிதாக அணுக கூடியவராகவும் இருக்க வேண்டும்.
இதில் கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்ததாரர், பொறியாளர் சரியாக செயல்படுகிறாரா என்பதை கண்காணிப்பது உட்பட பல்வேறு நிலைகளில் வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன. கட்டுமான ஒப்பந்ததாரர் செய்யும் வேலை சரியான பாதையில் செல்கிறதா என்பதை பெரும்பாலான உரிமையாளர்களால் துல்லியமாக ஆய்வு செய்ய முடிவதில்லை.
இதில் தற்போது கட்டுமான துறையில் சிறிய அளவிலான கலந்தாலோசனை நிறுவனங்கள் வந்துள்ளன. ஒரு நிலத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு என்னென்ன செய்ய வேண்டும், யாரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை இவர்கள் வழங்குகின்றனர்.
கட்டுமான பணியின் மொத்த மதிப்பில், 10 சதவீதம் அல்லது அதற்கு குறைவான தொகையில் கலந்தாலோசகர்கள் தற்போது கிடைக்கின்றனர். இவர்கள் கட்டுமான திட்ட அனுமதி பெறுவது முதல் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் நியமித்த வல்லுநர் சரியாக செயல்படுகிறாரா என்று பார்க்கின்றனர்.
வீடு கட்டும் பணியில் தொழில்நுட்ப ரீதியான விஷயங்களை கவனிக்கவும், முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும், உரிமையாளர் ஏமாற்றப்படாமல் பாதுகாக்கவும் உதவுகின்றனர். இது என்ன கூடுதல் செலவு என்று யோசிக்காமல் கட்டுமான பணிகள் சரியாக நடக்க வேண்டும் என்பதற்கு இதை மக்கள் பயன்படுத்தலாம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.
கட்டுமான பணியின் மொத்த மதிப்பில், 10 சதவீதம் அல்லது அதற்கு குறைவான தொகையில் கலந்தாலோசகர்கள் தற்போது கிடைக்கின்றனர், இவர்கள் கட்டுமான திட்ட அனுமதி பெறுவது முதல் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் நியமித்த வல்லுனர் சரியாக செயல்படுகிறாரா என்று பார்க்கின்றனர்.
