அங்கீகாரமில்லாத மனைகளை வாங்கினால் அதில் வீடு கட்ட முடியாது!
அங்கீகாரமில்லாத மனைகளை வாங்கினால் அதில் வீடு கட்ட முடியாது!
ADDED : மார் 14, 2026 06:55 AM

தமிழகத்தில் அங்கீகாரமில்லாத வீட்டு மனை திட்டங்களை செயல்படுத்தவும், மனைகள் விற்பதற்கும் உயர் நீதிமன்றம், 2016ல் தடை விதித்தது. இதை உறுதி செய்யும் வகையில், அங்கீகாரம் இல்லாத மனைகள் விற்பனை தொடர்பான பத்திரங்களை பதிவு செய்யவும் தடை விதித்து சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை நகர், ஊரமைப்பு துறை அங்கீகாரத்துடன் செயல்படுத்த முன்வந்துள்ளன. இந்நிலையில் வில்லங்கம் எதுவும் இல்லை, முறையாக பட்டா உள்ளது என்ற போதிலும், மனைக்கு அங்கீகாரம் வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
தமிழகத்தில் நிலத்துக்கான அங்கீகாரம் தொடர்பான விஷயங்களில் மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. குறிப்பாக, ஒரு நிலத்தின் உரிமையாளர் அதை பல்வேறு தலைமுறைகளாக குடியிருப்பாக பயன்படுத்தி வந்திருக்கலாம்.
தற்போது அதில் புதிதாக வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து அதற்கான நடவடிக்கையில் இறங்கினால், மனைக்கு அங்கீகாரம் இல்லை என்று கூறி கட்டட அனுமதி மறுக்கப்படும். இதனால், அந்த மனைக்கு முறையாக அங்கீகாரம் பெற்ற பின் தான் கட்டட அனுமதி கிடைக்கும்.
இதில் கிராமங்களில் பெரிய அளவில் நிலம் வைத்துள்ளவர்கள் அதை சென்ட் கணக்கில் பிரித்து வெளியாருக்கு விற்பது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு நிலத்தை பல்வேறு பாகங்களாக விற்கும் போது சர்வேயர் வாயிலாக அளந்து வரைபடம் தயாரித்தால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
ஆனால், இந்த விவகாரத்தில் நிலத்தை பல்வேறு பாகங்களாக பிரித்து பட்டா உட்பிரிவு செய்தால் மட்டும் போதாது, அதற்கு முறையாக நகரமைப்பு துறை அங்கீகாரம் பெற வேண்டும். நிலம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளது, வங்கிக்கடன் இன்றி வீடு கட்ட போகிறோம் என்று சில இறங்குவர்.
என்னிடம் நிலம் உள்ளது, பணம் உள்ளது, அதை பயன்படுத்தி புதிய வீட்டை கட்டுகிறேன் என்று மக்கள் நினைப்பதை பார்க்க முடிகிறது. இது விஷயத்தில் நிலத்தின் உரிமை, வில்லங்கம் ஆகியவற்றுக்கு அப்பால் நகர், ஊரமைப்பு சட்டப்படி வழங்கப்படும் அங்கீகாரம் ஏன், எதற்கு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நிலங்கள் நகர், ஊரமைப்பு சட்டப்படி குடியிருப்பு, வணிகம், சாலைகள், நீர்நிலை, பூங்கா என பிரிக்கப்படுகிறது. இவ்வாறு நிலத்தின் தன்மை அடிப்படையில் பயன்பாடு வரையறுக்கப்பட்டு ஒவ்வொரு நிலமும் வகைபடுத்தப்படுகிறது.
எனவே, புதிதாக சொத்து வாங்குவோர் அதில் சம்பந்தப்பட்ட நிலம் என்ன வகைப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவாக விசாரிக்க வேண்டும். குடியிருப்பு வகைப்பாட்டில் இல்லாத நிலத்தை வீடு கட்டுவதற்காக வாங்கினால், அதற்கு அங்கீகாரம் பெற கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்கின்றனர் நரமைப்பு வல்லுனர்கள்.
நிலத்தின் உரிமை, வில்லங்கம் ஆகியவற்றுக்கு அப்பால் நகர், ஊரமைப்பு சட்டப்படி வழங்கப்படும் அங்கீகாரம் ஏன், எதற்கு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
