துாண்களுக்கான கம்பிகளை தேர்வு செய்வதற்கான எளிய வழிகள்!
துாண்களுக்கான கம்பிகளை தேர்வு செய்வதற்கான எளிய வழிகள்!
ADDED : ஏப் 11, 2026 07:06 AM

நீங்கள் பல்வேறு கனவுகளுடன் கட்டும் புதிய வீடு, தலைமுறைகள் கடந்து நிலைத்து நிற்க வேண்டும். அதற்கு கட்டுமான நிலையில் வேலைகள் முறையாக நடக்க வேண்டும் என்பதுடன் பொருட்கள் பயன்பாட்டிலும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
தங்கள் புதிய வீடு தரமான முறையில், மிகவும் உறுதியாக கட்டப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. ஆனால், இதற்கான வழிமுறைகள் விஷயத்தில் தான் போதிய விழிப்புணர்வு இல்லாததால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
புதிய வீட்டை தரமாக கட்ட வேண்டும் என்றால் அதற்கு தரமான பணி அனுபவம் உடைய பொறியாளர் அல்லது ஒப்பந்ததாரரை தேர்வு செய்ய வேண்டும். அவருடன் விரிவாக பேசி, தெளிவான முறையில் கட்டுமான ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.
உங்கள் புதிய வீட்டுக்கான கட்டுமான பணியில் துாண்கள், பீம்கள், மேல்தளம் ஆகியவற்றுக்கான கம்பிகள், கான்கிரீட் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்யுங்கள். கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் இதற்கான பொருட்களை தேர்வு செய்வது நல்லது.
கட்டுமான பணிக்கான கம்பிகளை தேர்வு செய்வது என்பது தொழில்நுட்பம் சார்ந்த விஷயம் தான் என்றாலும், அதில் சில அடிப்படை கூறுகளை மக்கள் புரிந்து கொள்வது நல்லது. கட்டடத்தின் மொத்த அளவு என்ன என்பதன் அடிப்படையில் கம்பிகளுக்கான தேர்வு அமையும்.
இந்த வகையில், தரைதளம் மற்றும் முதல்தளம் வரையிலான வீடுகள் எனில், அதற்கான துாண்கள், 10க்கு ஒன்பது அங்குலம் என்ற அளவில் இருக்க வேண்டும். இதற்கு, 12 மி.மீ., வகையில் நான்கு கம்பிகளை அமைத்து அவற்றை ஆறு அங்குல ரிங் வாயிலாக இணைக்க வேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக, இரண்டு தளம் வரையிலான வீடுகள் கட்டும் போது அதற்கான துாண்கள், 10க்கு 15 அங்குலம் என்ற அளவில் இருக்க வேண்டும். இதில், 12 மி.மீ., வகையில், ஆறு கம்பிகளை வைத்து, ரிங்குகளால் இணைக்க வேண்டியது அவசியம்.
இதே போன்று மூன்று தளம் வரையிலான வீடுகள் கட்டும் போது அதற்கான துாண்கள், 10க்கு, 18 அங்குலம் என்ற அளவில் இருக்க வேண்டும். இதில் எட்டு மி.மீ., வகையை சேர்ந்த எட்டு கம்பிகளை பயன்படுத்தி துாண்களை உருவாக்க வேண்டியது அவசியம்.
இந்த அடிப்படையில் கட்டடத்தின் மொத்த அளவு அடிப்படையில் துாண்களுக்கான அளவுகளை துல்லியமாக முடிவு செய்ய வேண்டும். உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில் துாண்களுக்கான அளவுகள் இந்த அடிப்படையில் உள்ளதா என்பதை கட்டுமான ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு உறுதி செய்வது அவசியம் என்கின்றனர் கட்டுமான பொறியாளர்கள்.
தரைதளம் மற்றும் முதல்தளம் வரையிலான வீடுகளுக்கான துாண்கள், 10க்கு ஒன்பது அங்குலம் என்ற அளவில் இருக்க வேண்டும், 12 மி.மீ., வகை கம்பிகளை பயன்படுத்தலாம்.
