அஸ்திவாரத்துக்கு கான்கிரீட் போடும் பணியில் கவனிக்க வேண்டியவை!
அஸ்திவாரத்துக்கு கான்கிரீட் போடும் பணியில் கவனிக்க வேண்டியவை!
ADDED : ஜூலை 11, 2026 06:44 AM

ஆசையாக வாங்கி வைத்த நிலத்தில் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று திட்டமிடுவோர் அடிப்படையாக சில விஷயங்களில் தெளிவு பெற வேண்டியது அவசியம். குறிப்பாக, நீங்கள் வாங்கிய நிலம் தற்போது என்ன நிலையில் உள்ளது என்று பார்த்து அதில் புதிய வீட்டுக்கான வரைபடத்தை தயார் செய்யவேண்டும்.
இதில் புதிய வீடு கட்டும் போது கட்டுமான பொறியாளரே அனைத்து பணிகளையும் பார்த்து கொள்வார் என்று அமைதியாக இருக்காதீர். ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால், அதில், தொழில்முறை ரீதியாக ஸ்டெச்சுரல் பொறியாளர்கள், ஆர்கிடெக்ட், சிவில்பொறியாளர் ஆகியோர் ஈடுபட வேண்டும்.
ஆனால், பெரும்பாலான இடங்களில், ஸ்டெச்சுரல் பொறியாளர், ஆர்கிடெக்ட் ஆகியோர் இன்றி வீட்டுக்கான வரைபடம் இறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு, இவர்கள் தவிர்க்கப்பட்டு கட்டுமான பொறியாளரே அனைத்தையும் முடிவு செய்யும் போது நடைமுறையில் சில பிரச்னைகள் ஏற்படுகின்றன.
ஸ்டெச்சுரல் பொறியாளர், ஆர்கிடெக்ட் ஆகியோர் வழிகாட்டுதல் அடிப்படையில் தான் கட்டடத்துக்கான அஸ்திவாரம் முடிவு செய்யப்பட வேண்டும். ஒரு நிலத்தின்அமைப்பை ஆராய்ந்து, கட்டடத்தின் அமைப்பை கருத்தில் வைத்து எந்தெந்த இடத்தில் அஸ்திவார துாண்கள் அமைய வேண்டும் என்பது முடிவு செய்யப்படும்.
இவ்வாறு முடிவு செய்யப்படும் இடங்களில் பள்ளம் தோண்டுவது, கம்பி கூடுகள் நிறுத்துவது, கான்கிரீட் போடுவது போன்ற பணிகளை சிவில் பொறியாளர் மேற்பார்வையில் நடத்த வேண்டும். இந்த பணிகளின் போது, அஸ்திவார பள்ளத்தில் அதிகப்படியான ஈரப்பதம் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
அஸ்திவார பள்ளத்தின் அடிப்பகுதியில் மணல் கொட்டி, பிசிசி கான்கிரீட் பயன்படுத்தி அடிப்படை தளம் அமைக்க வேண்டியது அவசியம். அதன்மேல் கம்பி கூடுகளை நிறுத்தி, அதில் கான்கிரீட் கொட்டும் போது தாங்குவதற்கான தடுப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
இதில் கம்பி கூடுகள் எந்த நிலையிலும், தரையை அதாவது அப்பகுதிக்கான இயல்பான மண் அடுக்குடன் தொடர்பு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக, ஒரே சமயத்தில் அனைத்து அஸ்திவார துாண்களுக்கான பணிகளையும் மேற்கொள்வதில் தவறு இல்லை.
அஸ்திவார பணியில் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டை வாங்கி பயன்படுத்தினால், சில மணி நேரங்களில் வேலையை முடித்துவிடலாம். அது மட்டுமல்லாது, கான்கிரீட் கலவை விரைவாக இறுக்கம் அடைவதுடன் நீராற்றும் பணிகளுக்கு தயாராகிவிடும் என்கின்றனர்
அஸ்திவாரத்துக்கு பள்ளம் தோண்டுவது, கம்பி கூடுகள் நிறுத்துவது, கான்கிரீட் போடுவது போன்ற பணிகளை சிவில் பொறியாளர் மேற்பார்வையில் நடத்த வேண்டும்.
