ADDED : ஆக 15, 2026 06:44 AM

நகரங்களில் அதிக விலை கொடுத்து சொந்த வீடு வாங்குவதைவிட சற்று தொலைவான பகுதிகளில் காலி மனை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு காலி மனை வாங்கும் போது பல்வேறு விஷயங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் புதிய மனைப்பிரிவு திட்டத்தில் நிலம் வாங்குவது என முடிவு செய்தால், அதற்கு முறையாக அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்று பாருங்கள். ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்ட திட்டம் என்றால், அதில் மனை விற்பவர் யார் என்று பாருங்கள்.
பல ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்ட மனைப்பிரிவு திட்டத்தில் மனை வாங்கியவரிடம் இருந்து நிலம் வாங்குவதானாலும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக ஒரு மனைப்பிரிவு திட்டம் என்றால் அதற்கு முறையாக அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.
கடந்த, 2016க்கு முன் செயல்படுத்தப்பட்ட திட்டம் என்றால், பெரும்பாலான இடங்களில் முறையான அங்கீகாரம் இருக்காது. அத்தகைய மனைகளை வாங்கும் போது அதை வரன்முறைப்படுத்த தற்போது வாய்ப்பு உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
இதில், விற்பனைக்கு வரும் மனையை நேரில் சென்று பாருங்கள். அதன் நான்கு பக்கங்கள், நான்கு மூலைகளும் சீராக அமைந்து இருக் கின்றனவா என்பதை துல்லியமாக கவனித்து பார்த்து அதன் அடிப்படையில் வாங்குவது குறித்த முடிவுகளை எடுக்க வேண்டும்.
முறையான அங்கீகாரத்துடன் செயல்படுத்தப்படும் திட்டங்களில், 95 சதவீத மனைகள் சீரான பக்கங்கள், மூலைகளுடன் அமைந்து இருக்கும். முறையான அங்கீகாரம் இன்றி செயல்படுத்தப்படும் திட்டங்களில் மூலை மட்டம் சீராக இருக்காது.
மூலைமட்டம் சீராக இல்லாத மனையில் கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக சிலர் தவறாக நினைக்கின்றனர் ஆனால், உண்மையில் இத்தகைய மனைகளை வாங்கினால் அதில் வீடு கட்டும் போது அதிக இடங்களை காலியாக விட வேண் டிய நிலை ஏற்படும்.
நீங்கள் எதிர்பார்த்த அளவை விட குறைந்த பரப்பளவுக்கு தான் வீட்டை கட்ட முடியும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கட்டடத்தின் நான்கு பக்கங்கள் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக பக்கவாட்டு காலியிடம் அதிகமாக விட வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே விற்பனைக்கு வரும் மனையின் நான்கு பக்கங்கள், நான்கு மூலை மட்டமும் சரியாக உள்ளனவா என்று பார்த்து வாங்க வேண்டும். இதில் அலட்சியமாக இருந்தால் வீடு கட்டும் போது பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்கின்றனர் நகரமைப்பு வல்லுனர்கள்.
