/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
கூடுதல் செலவை பார்க்காமல் கட்டுமான ஒப்பந்தம் போடாதீர்!
/
கூடுதல் செலவை பார்க்காமல் கட்டுமான ஒப்பந்தம் போடாதீர்!
கூடுதல் செலவை பார்க்காமல் கட்டுமான ஒப்பந்தம் போடாதீர்!
கூடுதல் செலவை பார்க்காமல் கட்டுமான ஒப்பந்தம் போடாதீர்!
ADDED : ஜன 03, 2026 07:50 AM

சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கான பணிகளை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் தெளிவான முடிவை எடுக்க வேண்டும். கட்டுமான பணிகளை ஒருவரிடம் ஒப்படைக்கும் நிலையில் முறையான எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் போட வேண்டும்.
கட்டுமான ஒப்பந்தம் போட்டு பணிகளை மேற்கொள்ளும் நிலையில், சில அடிப்படை விஷயங்களை தெளிவாக முடிவு செய்ய வேண்டும். குறிப்பாக, கட்டுமான பணிகளை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை ஒப்பந்தத்தில் தெளிவாக எழுத வேண்டும்.
இதில் முதலாவதாக, கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் எழுதும் முன், விலையை முடிவு செய்ய வேண்டும். தற்போதைய சூழலில் சதுர அடிக்கு இவ்வளவு என செலவை முடிவு செய்யும் போது உரிமையாளர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு கட்டடத்தில் எந்தெந்த பணிகள் சதுர அடிக்கான விலையில் அடங்கும் என்பதை ஒப்பந்ததாரருடன் பேசி முடிவு செய்யுங்கள். சில சமயங்களில் எப்படியாவது ஒப்பந்தம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நீங்கள் கேட்கும் அனைத்தையும் சதுர அடிக்கான அடிப்படை விலையில் செய்து கொடுப்பதாக ஒப்பந்ததாரர்கள் உறுதி அளிப்பார்கள்.
ஆனால், பணிகள் முடியும் நிலையில் பார்த்தால் நீங்கள் எதிர்பார்த்த பணிகள் விடுபட்டு இருக்கும். சரி செய்வதற்கான கட்டத்தை கடந்த நிலையில், உரிமையாளர்களுக்கு கோபம் ஏற்படுவது இயற்கை தான் என்றாலும், அப்போது சண்டை போடுவதால் எஞ்சிய பணிகள் பாதிக்கப்படும்.
ஒரு இடத்தில் நிலம் வாங்கி அதில் வீடு கட்டுவதற்கான பணிகளை துவங்கும் போது நாம் உத்தேசித்த பட்ஜெட்டைவிட 30 சதவீதம் வரை கூடுதல் செலவு ஏற்படும். இந்த அடிப்படை விஷயத்தை உரிமையாளர்கள் தெளிவாக புரிந்து கொண்டு ஒப்பந்ததாரரை அணுக வேண்டும்.
இதில் நீங்கள் சொல்லும் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் சதுர அடிக்கான அடிப்படை விலையில் முடித்து தருகிறேன் என்று சில ஒப்பந்ததாரர்கள் உறுதி அளிப்பார்கள். ஆனால், யாரும் தனது கையில் இருந்து பணம் போட்டு கூடுதல் செலவை சரி கட்ட மாட்டார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கட்டடத்தில் வெளிப்புற படிக்கட்டு, உட்புறத்தில் பரன்கள், அலமாரிகள் போன்ற பாகங்களை அடிப்படை செலவில் சேர்த்துகொள்ள ஆரம்பத்தில் ஒப்புதல் தெரிவிப்பார். ஆனால், பணிகள் முடியும் நிலையில் இது அடிப்படை செலவில் வராது என்று ஒப்பந்ததாரர் கூறுவார்.
இதே போன்று, மேல்நிலை தண்ணீர் தொட்டி, கீழ் நிலை தண்ணீர் தொட்டி, கழிவு நீர் தொட்டி ஆகியவற்றுக்கான பணிகள் அடிப்படை செலவில் சேர்ப்பதாக ஒப்பந்ததாரர் கூறினாலும் நம்பாதீர்கள். இத்துடன் மதில் சுவர் கட்டும் செலவும் தனியாக தான் வரும் என்ற எதார்த்த நிலவரத்தை மக்கள் புரிந்து கொண்டால் பிரச்னைகளை தவிர்க்கலாம்.
உரிமையாளரின் இது போன்ற எதிர்பார்ப்புகளை செய்யக் கூடாது என்ற எண்ணம் ஒப்பந்ததாரருக்கு இருக்காது. ஆனால், எதார்த்த சூழலில், அடிப்படை விலையில் இந்த பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இல்லை என்பதை புரிந்து, அது தொடர்பான விஷயங்களை பேசி தெளிவுபடுத்த வேண்டும் என்கின்றனர் இத்துறை வல்லுனர்கள்.
கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தம் எழுதும் முன், விலையை முடிவு செய்ய வேண்டும், தற்போதைய சூழலில் சதுர அடிக்கு என்ன செலவாகும் என்பதை வெளிப்படையாக பேசி முடிவு செய்யுங்கள்.

