/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரே இடத்தில் மின்சார மெயின் சுவிட்சுகளை அமைக்க கூடாது!
/
அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரே இடத்தில் மின்சார மெயின் சுவிட்சுகளை அமைக்க கூடாது!
அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரே இடத்தில் மின்சார மெயின் சுவிட்சுகளை அமைக்க கூடாது!
அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரே இடத்தில் மின்சார மெயின் சுவிட்சுகளை அமைக்க கூடாது!
ADDED : ஏப் 27, 2024 08:02 AM

தமிழகத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு திட்டங்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்து வருகிறது. இது போன்ற குடியிருப்புகளில் தரை தள பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக, கட்டுமான நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கின்றன.
நகர், ஊரமைப்பு சட்டப்படியான பொது கட்டட விதிகளின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புகளில், அடித்தளம், தரைதளம் ஆகிய இடங்கள் வாகன நிறுத்துமிடங்களாக ஒதுக்க பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்படும் இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
இன்றைய சூழலில், பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சார இணைப்புக்கான மெயின் சுவிட்ச் பாக்ஸ்கள் தரைதள பகுதியில் தான் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு தரைதள பகுதியில் மெயின் சுவிட்ச் பாக்ஸ்களை அமைக்கும் போது மழைக்காலத்தில் அங்கு என்ன நடக்கும் என்பதை திட்டமிட வேண்டும்.
நீங்கள் கட்டடம் கட்டும் பகுதியில் மழைக்காலத்தில் அதிகபட்ச வெள்ளம் எவ்வளவு உயரம் வரும் என்பதை அறிந்து அதற்கு மேல் நிலையில் மெயின் சுவிட்ச் பாக்ஸ்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தரைமட்டத்தில் இருந்து, குறைந்தபட்சம், 2 அடி உயரத்தில் மெயின் சுவிட்ச்கள் இருப்பது பாதுகாப்பான வழிமுறையாகும்.
பெரும்பாலான கட்டடங்களில் தரைதளத்தில் மாடிப்படிக்கு கீழ் உள்ள இடத்தை தான் மெயின் சுவிட்ச்கள் அமைக்க ஒதுக்கும் பழக்கம் காணப்படுகிறது. இவ்வாறு இடம் ஒதுக்குவதால், அந்த பகுதி உரிய முறையில் பயன்படுத்தப்படும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
ஆனால், மழைக்காலத்தில் வெளியில் இருந்து வரும் வெள்ள நீர், மெயின் சுவிட்ச் பாக்ஸ் அமைந்திருக்கும் பகுதியில் தேங்கும் நிலை ஏற்படும். இவ்வாறு அங்கு தண்ணீர் தேங்கினால், அதில் சிறிய அளவுக்கு மின் கசிவு ஏற்பட்டால் கூட பெரிய விபத்துக்கு வழி வகுத்துவிடும்.
எனவே, மெயின் சுவிட்ச் பாக்ஸ் அமைக்கப்படும் இடத்தில் மழைக்காலத்தில் வெள்ள நீர் தேங்காமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக மின்சார, தொலை தொடர்பு கேபிள்கள் நிலத்தடி வழியே வரும் நிலையில் அதன் வாயிலாக நீர்க்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
இது போன்ற பாதிப்புகளை தடுக்க, அடுக்குமாடி கட்டடங்களில் மெயின் சுவிட்ச் பாக்ஸ்களை அந்தந்த தளத்தில் அமைக்கும் நடைமுறை அறிமுகமாகி உள்ளது. நவீன சாதனங்கள் வாயிலாக இவ்வாறு தளங்கள் வாயிலாக மெயின் சுவிட்ச் பாக்ஸ்களை அமைப்பதால், வெள்ள பாதிப்பு தவிர்க்கப்படும்.
குறிப்பாக, ஏதாவது ஒரு இணைப்பில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டால், ஒட்டுமொத்த கட்டடமும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும். இது போன்ற புதிய வழிமுறைகளை அறிந்து செயல்படுவது நல்லது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.

