/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
துல்லிய கணக்கு பார்க்காமல் கேண்டிலிவர் பாகங்களை கட்டுவது நல்லதல்ல!
/
துல்லிய கணக்கு பார்க்காமல் கேண்டிலிவர் பாகங்களை கட்டுவது நல்லதல்ல!
துல்லிய கணக்கு பார்க்காமல் கேண்டிலிவர் பாகங்களை கட்டுவது நல்லதல்ல!
துல்லிய கணக்கு பார்க்காமல் கேண்டிலிவர் பாகங்களை கட்டுவது நல்லதல்ல!
ADDED : அக் 11, 2025 07:09 AM

பொதுவாக ஒரு வீடு கட்டுவதானால் அதில் அஸ்திவாரம் துவங்கி, மேல் தளம் வரை ஒவ்வொரு பாகமும் உறுதியாக இருக்க வேண்டும். இதற்காக பொறியாளர் தேர்வு, பொருட்கள் வாங்குவது என அனைத்திலும் மக்கள் கவனமாக செயல்பட நினைக்கின்றனர்.
புதிய வீட்டுக்கான வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அதன் பாகங்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கனும். குறிப் பாக, கட்டடத்துக்கான வரைபடம் தயாரிப்பதற்கு முன் கட்டட அமைப்பியல் வல்லுனர் ஒருவரை அணுகி உரிய வழிகாட்டுதல்களை பெற வேண்டும்.
பெரிய கட்டடங்களுக்கு தான் கட்டட அமைப்பியல் பொறியாளர் வேண்டும் என்று நினைக்காமல், சாதாரண கட்டடத்துக்கும் இவரது வழிகாட்டுதல்களை பெற வேண்டும். சமீபகாலமாக கட்டடங்களில் வெளிப்புற தோற்றம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்கான வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
குறிப்பாக, வீட்டின் முன்பக்க போர்டிகோ, பால்கனி போன்ற பாகங்களை அமைக்கும் போது அதன் அளவை சற்று அதிகரிக்க மக்கள் விரும்புகின்றனர். கட்டடத்தின் பிரதான சுவரில் இருந்து ஒன்றரை அடி என்ற அளவில் தான் பால்கனிக்கான தரை பகுதிகள் வெளியில் நீட்டிக்கொண்டு இருக்கலாம்.
ஆனால், சில இடங்களில் இதற்குமேல் சற்று அதிக நீளத்தில் பால்கனி இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். இதற்காக, கேண்டிலிவர் முறையில் பால்கனி பாகத்தை நீட்டிக்க வேண்டும் என்று பொறியாளர்களிடம் அறிவுறுத்துகின்றனர்.
இதில் உரிமையாளர் விருப்பம் என்ற அடிப்படையில் கேண்டிலிவர் முறையில் பால்கனி பாகத்தை அதிகரிக்க பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர். இதில் கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதல் அடிப்படையில் கம்பிகளை தேர்வு செய்ய வேண்டும்.
அப்போது தான் கேண்டிலிவர் முறையில் நீட்டிக்கப்பட்ட பாகங்கள் உரிய முறையில் உறுதியாக நிலைத்து நிற்கும். ஆனால், பெரும்பாலான இடங்களில் கட்டுமான பணிக்கான சிவில் பொறியாளர்கள் குத்துமதிப்பாக ஒரு கணக்கில் கம்பிகளின் நீளத்தை அதிகரித்து கேண்டிலிவர் பாகங்களை கட்டுவதை பார்க்க முடிகிறது.
இவ்வாறு கட்டப்படும் பாகங்கள் அதிக காலத்துக்கு நிலைத்து நிற்கும் என்று எதிர்பார்க்க முடியாது. கட்டுமான பணிகள் முடிந்த சில ஆண்டுகளில் அதில் சுமை தாங்க முடியாத நிலையில் விரிசல், உடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன.
எனவே, கேண்டிலிவர் முறையில் கட்டடத்தின் சில பாகங்களை அமைக்கும் போது கட்டட அமைப்பியல் பொறியாளரின் வழிகாட்டுதலை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் கட்டும் கட்டடம் நிலைத்து நிற்கும் என்கின்றனர் கட்டட அமைப்பியல் பொறியாளர்கள்.