/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
காலி நிலத்தில் விவசாயம் நடைபெற்றால் வரி இல்லை
/
காலி நிலத்தில் விவசாயம் நடைபெற்றால் வரி இல்லை
ADDED : ஜன 03, 2025 11:38 PM
கட்டடம் எதுவுமில்லாத காலி நிலம் சொத்து வரி விதிப்புக்கு உட்பட்டது. இது மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து பகுதியில் உள்ள நிலங்களுக்கு பொருந்தும். இந்த வரி தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டம், 1998, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகள், 2023க்கு உட்பட்டது.
இந்த சட்டம் கடந்த, 2023 ஏப்.,12 முதல் அமலில் உள்ளது. சில வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. காலி நிலத்தில் விவசாயம் நடைபெறின், இந்த வரி இல்லை. காலி நிலப்பரப்பு, 2,400 சதுர அடிக்கு மிகாமல் இருந்தாலும், இந்த வரி இல்லை.
மேலும், காலி நிலத்தில் குறைந்தது, மூன்றில் ஒரு பங்கு பரப்பில் கட்டுமானம் இருந்தாலும் இந்த வரி இல்லை. கட்டடமுள்ள நிலத்தில் மொத்த நிலப்பரப்பில், இரண்டு மடங்கு கட்டட பரப்பை கழித்ததுபோக, மீதமுள்ள நிலத்திற்கு மட்டும் காலி நில வரி பொருந்தும்.
பதிவுபெற்ற பொறியாளர்கள் சங்க(கோவை) முன்னாள் தலைவர் கனகசுந்தரம் கூறியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சிகள், A, B, C என மூவகையாக தரம் பிரிக்கப்பட்டு கட்டண விகிதம் நகராட்சி நிர்வாக துறையின் அரசாணை எண்(151) மூலம் உத்தரவிடப்பட்டது.
இதன்படி, A தரம் கொண்ட கோவை மாநகராட்சி காலி நிலம் பிரதான, பஸ் வழி தடத்தையொட்டி இருந்தால் சதுர அடிக்கு, 60 பைசா என, நிர்ணயிக்கப்பட்டது.
பிற பஸ் வழித்தடத்தையொட்டி இருக்கும் காலி நிலத்திற்கு, 40 பைசாவும், மற்ற சாலையையொட்டி உள்ள நிலங்களுக்கு, 20 பைசாவும் நிர்ணயித்தது. கோவை மாநகராட்சி மாமன்ற தீர்மானம் எண்: 208(29/12/2011) மூலம், 40 முதல், 60 பைசா வரை பழைய, 60 வார்டுகளுக்கும், 10 முதல் 40 பைசா வரை புதிதாக சேர்க்கப்பட்ட, 40 வார்டுகளுக்கும் இடத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர், தீர்மானம் எண்: 237(16/10/2017) அனைத்து மாநகராட்சி காலி நிலங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணமாக சதுர அடிக்கு, 60 பைசா நிர்ணயித்து அரசின் உத்தரவு பெற நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் எண்: 74ன்படி(11/4/2022) 2022 ஏப்., 1 முதல் சதுர அடிக்கு ரூ.1.20 வசூலிக்கப்படுகிறது.
காலியிடம் மூன்றில் இரு பங்கு பரப்புக்குமேல் இருப்பின் கட்டடத்துடன், காலியிடத்திற்கும் வரி விதிக்கப்படுகிறது. ஒரு காலி இடத்தின் வரியை கணக்கிடவும், விண்ணப்பிக்கவும் அரசின் இணையதளம், tnurbanepay.tn.gov.in உதவுகிறது.
காலி நில வரி விதிப்பு கேட்டு, கமிஷனருக்கு விண்ணப்பிக்கலாம். நில உரிமை ஆவணம் மற்றும் வில்லங்க சான்று முக்கியமானவை. இவையே சொத்தையும், அதன் உரிமையாளரையும் குறிக்கும். வழக்கு நிலுவையில் இருந்தால் இது பொருந்தாது.
முதல் முறையாக விண்ணப்பிக்கும்போது, விடுபட்ட வரி இனமாக கருதி, கடந்த ஆறு வருடத்திற்கான, அதாவது, 13 அரையாண்டு வரியையும் செலுத்த கேட்கப்படும். கேட்பு அறிவிப்பாணை மீது மறுப்பு இருந்தால் முறையீடு செய்யலாம். இணையதளம் மூலமே கட்டணம் செலுத்தலாம்.
ஒரு வீதி, சந்து அல்லது சாலையிலுள்ள காலி மனைக்கு கதவு எண் அளிக்கப்படாது. வரி ஒரே கட்டண விகிதமாக இருப்பதால், சுய சான்று அடிப்படையில் விண்ணப்பதாரரே, காலி நில வரி செலுத்தும் இணையவழி முறையை, அரசு ஏற்படுத்தினால் அனைவரும் பெரும் பயனடைவர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
காலியிடம் மூன்றில் இரு பங்கு பரப்புக்குமேல் இருப்பின் கட்டடத்துடன், காலியிடத்திற்கும் வரி விதிக்கப்படுகிறது. ஒரு காலி இடத்தின் வரியை கணக்கிடவும், விண்ணப்பிக்கவும் அரசின் இணையதளம், tnurbanepay.tn.gov.in உதவுகிறது.

