சுயசான்று கட்டட அனுமதியில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
சுயசான்று கட்டட அனுமதியில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
ADDED : ஜூன் 06, 2026 05:12 PM

தமிழகத்தில் நகர், ஊரமைப்பு சட்டப்படி, 10,000 சதுர அடி வரையிலான குடியிருப்பு கட்டடங்கள் கட்ட உள்ளாட்சி அமைப்புகளே ஒப்புதல் வழங்கலாம். பொது கட்டட விதிகள் வாயிலாக இது போன்ற புதிய வசதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இவ்வாறு, 10,000 சதுரடி வரையிலான கட்டடங்களில் பெரும்பாலான இடங்களில், 1,000 முதல், 3,500 சதுரடி வரையிலான விண்ணப்பங்கள் தான் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. இந்த விண்ணப்பங்களின் பின்னால் இருப்பவர்கள் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினராக தான் இருப்பர்.
இந்த வகை கட்டடங்களில் பெரும்பாலும் அதிக விதிமீறல்கள் இருப்பதற்கும் வாய்ப்பு இல்லை. ஆனால், இந்த விண்ணப்பங்களை உடனுக்குடன் முடிக்காமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டு மக்களை அலைக்கழிப்பது வாடிக்கையாக இருந்து வந்தது.
இதற்கு முடிவு கட்டும் வகையில், 2,500 சதுரடி வரையிலான மனையில், 3,500 சதுரடி வரையிலான பரப்பளவுக்கு வீடு கட்டுவோர் சுயசான்று முறையில் கட்டட அனுமதி பெறலாம் என தமிழக அரசு, 2024ல் அறிவித்தது. இதன்படி, அடிப்படை ஆவணங்களை உரிமையாளர்கள் ஆன்லைன் முறையில் தாக்கல் செய்தால் போதும்.
கட்டணம் என்ன என்பது ஆன்லைன் முறையில் தெரிவிக்கப்படும். அதில் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால், எந்த அதிகாரியையும் நீங்கள் சந்திக்காமல், அலுவலகத்துக்கு அலையாமல், உடனடியாக கட்டட அனுமதி உங்கள் கையில் கிடைத்துவிடும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதற்கான வழிமுறைகள் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். இதில் முதலில், உங்களிடம் இருக்கும் நிலம் முறையாக அங்கீகரிக்கப்பட்ட மனையா என்பதை பார்க்க வேண்டும்.
அங்கீகாரமில்லாத மனையாக இருந்தால், அந்த நிலத்துக்கு சுயசான்று முறையில் கட்டட அனுமதி கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். அதே நேரம், அந்த நிலம், உங்கள் பெயரில், 2016க்கு முன், வீட்டு மனையாக பதிவு செய்யப்பட்டு இருந்தால் அப்போது சுயசான்று முறையில் தகுதி ஏற்படும்.
மனை அங்கீகாரம் போன்று, உங்கள் நிலம் காலியானதாக இருந்தால் மட்டுமே சுயசான்று முறையில் நீங்கள் கட்டட அனுமதி பெற முடியும். அதில் பழைய கட்டடம் இருந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் விண்ணப்பித்து கட்டட இடிப்பு சான்றிதழ் பெற்று அதன் பின் சுயசான்று முறையில் விண்ணப்பிக்கலாம்.
இதில் இரண்டு இடங்களில் விண்ணப்பித்து அலைவதற்கு மேனுவல் முறையில் பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடத்துக்கான அனுமதியை பெறலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. இதே போன்று அரசு ஆட்சேபிக்கும் வகைப்பாட்டில் நிலம் இருந்தால் அதற்கும் சுயசான்றுமுறை பொருந்தாது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
அங்கீகாரமில்லாத மனையாக இருந்தால், அந்த நிலத்துக்கு சுயசான்று முறையில் கட்டட அனுமதி கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
