PUBLISHED ON : ஜூலை 14, 2024

வணக்கம். நான் ரவி - அமுதாவோட மகள் சத்யா; எனக்கு மூணு அண்ணன், ஒரு அக்கா; இப்படி, எனக்கு மூத்த உடன்பிறப்புகள் இருந்தாலும், கல்லுாரிக்குள்ளே காலடி வைச்சிருக்கிறது நான் மட்டும்தான்; நான் நெய்வேலி, ஜவஹர் அறிவியல் கல்லுாரியின் இரண்டாம் ஆண்டு பி.காம்., மாணவி.
சத்யாவின் கஷ்டமும் இஷ்டமும்...? பாடங்கள் கஷ்டமா இருக்கு; ஆனா, அதை படிக்கிறதுல இஷ்டம்தான்!
நிறையும் குறையும்...? எல்லாமே குறைவா இருக்குற வாழ்க்கையில நிறைவா இருக்குறேன்!
பழசும் புதுசும்...? ஆசிரியர் கனவு இருந்தது; இப்போ, வங்கி மேலாளர் கனவு!
பிடித்ததும் பிடிக்காததும்...? என் மக்களோட அன்பு பிடிக்கும்; அவங்க அறியாமை பிடிக்காது!
கடலுார், நெய்வேலி பக்கத்துல பெரியாக்குறிச்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியில இருக்குறேன். இங்கே மொத்தம் 90 பேர். ஊர் ஊராப் போய் ஊசிமணி பாசிமணி விற்கிற எங்க குழந்தைகள் பெரும்பாலும் பள்ளிக்கல்வியை தாண்டுறதில்லை. ஆனா, எப்படியாவது என்னைப் படிக்க வைக்கணும்ங்கிற அம்மாவோட மன உறுதிதான் என்னை கல்லுாரி வரைக்கும் அனுப்பி வைச்சிருக்கு!
சில மாதங்களுக்கு முன்பு சத்யாவின் அம்மா உடல்நிலை பாதிப்பால் காலமாகி விட, தந்தையும் உடல் நலிவுற்று வீட்டில் இருக்கிறார். கூலி வேலைக்குச் செல்லும் இளைய அண்ணனுடன் சேர்ந்து தந்தையை பராமரித்து வருகிறார் சத்யா.
கடந்துவர சிரமப்பட்ட காலங்கள்?
அம்மா இறந்ததுக்கு அப்புறம் மருத்துவமனையில அப்பாவை கவனிச்சுக்க வேண்டிய சூழல். அந்த மருந்து வாசத்தோடதான் படிச்சேன். அந்த மனபாதிப்போட தான் செமஸ்டர் எழுதினேன்!
சத்யா வசிக்கும் நரிக்குறவர் காலனியில் யாருக்கும் பட்டா நிலம் கிடையாது. இரண்டு பொது கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. சுகாதாரமான பொது குடிநீர் வசதி கிடையாது. மழை பெய்தால் சேறும் சகதியும் இக்காலனியில் நிரம்பிவிடும்!
சத்யா கையில் மைக்; எதிர்ல... உங்க மக்கள்...
வாழ்க்கை தரத்துல நாம ரொம்பவே பின்தங்கி இருக்கோம். இதுல மாற்றம் வரணும்னா முதல்ல நாம நம்மை நேசிக்கணும். நம்ம பகுதியை நேசிக்கணும். 'மனித மாண்புகளோட வாழணும்'ங்கிற உணர்வு நமக்குள்ளே வரணும். புரிஞ்சுதா மக்களே...?
உங்க மகிழ்ச்சிக்கு காரணமாகும் ஜீவன்கள்?
இங்கே கோழி வளர்ப்பு அதிகம். தாய்க்கோழிகள் அதன் கோழிக்குஞ்சுகளை கூட்டிக்கிட்டு 'பக்... பக்... பக்'னு இரை பொறுக்குறதை ரசிப்பேன். எங்க பகுதி நாய்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்; அதுல சில நாய்கள், நான் கல்லுாரிக்கு போறப்போ பஸ் ஸ்டாப் வரைக்கும் வந்து வழிஅனுப்பி வைக்கும்.