
நன்மையின் மீது ஒருவர் நம்பிக்கை கொள்ளும் விதமாகத் திகழ்கிறார் செங்கல்பட்டு, செம்பாக்கத்தில் வசிக்கும் கீதா. பிறந்த ஆறு மாதத்தில் 'போலியோ'வினால் தாக்கப்பட்டாலும், வாழ்க்கை பற்றிய தெளிவும், காதல் மீதான நம்பிக்கையுமே 43 வயது கீதாவின் வெற்றிகளுக்கு காரணம். காதல் கணவர் கண்ணனின் பார்வையில் கீதா யார்?
என் தோழி
நாங்க பள்ளி நண்பர்கள். எதிர்மறை எண்ணங்கள் இல்லாத தோழி கீதா. பிளஸ் 2 முடிச்சதுக்கு அப்புறம் தொடர்பற்று போச்சு. எங்கேயோ நல்லா படிச்சுட்டு இருப்பான்னு நினைச்சேன். ஆனா, அவளுக்கு திருமணம் முடிஞ்சிருந்தது!
கதைகளில் அவசியமற்ற காலகட்டத்தை, 'சில ஆண்டுகளுக்குப் பின்...' என்கிற பதத்தால் கடந்து செல்வார்கள். கீதாவின் வாழ்வில் அந்த திருமண பகுதி அவ்வாறு கடந்து செல்லத்தக்கது.
என் காதலி
சில ஆண்டுகள் கழிச்சு நேர்ல சந்திச்சப்போ கீதா முகத்துல மலர்ச்சி இல்லை. மனம்விட்டு பேசினோம். ஒரே இடத்துல வேலை பார்த்தோம். கொஞ்சம் கொஞ்சமா காதலர்களா மாறிட்டோம். அப்போ, அவளை நம்பி ராகவன், விக்னேஷ்வர்னு இரண்டு குழந்தைகள் இருந்தாங்க!
மகன்கள் இருவரும் தற்போது கல்லுாரி மாணவர்கள். அமெரிக்க மாணவர்களுக்கு ஆன்லைனில் கணக்கியல் பாடம் எடுக்கிறார் கீதா.
என் மனைவி
திருமணம்னு முடிவெடுத்த நேரம்; 'தியாகி பட்டத்துக்கு ஆசையா'ன்னு சிலர் கேலி பண்ணுனாங்க. 'நாம தியாகி இல்லை; ஆனா, இதைவிட சிறந்த நன்மையை நமக்கு நாம பண்ணிக்க முடியாது'ன்னு தோணுச்சு. அந்தளவுக்கு கீதாவோட அருகாமை எனக்கு மனபலத்தை தந்திருந்தது. ஆனாலும், பின்னாட்கள்ல எனக்குள்ளே ஒரு குற்றவுணர்வு!
கார் விபத்தில் கீதாவின் தோள்பட்டை பாதிக்கப்பட்டு ஆறு மாதங்கள் படுக்கையில் முடங்கினார். கார் ஓட்டிய கண்ணனுக்கு பெரும் குற்றவுணர்வு!
என் குழந்தை
தோள்பட்டை சிகிச்சைக்காக நீச்சல் பயிற்சிக்குப் போனோம். நீச்சல் குளத்துல இறங்கினதும் அவளோட மனபலம் எனக்குப் புரிஞ்சது. நிலத்துல அவளுக்கு சவால் தந்த உடல் அசைவுகளை எல்லாம் தண்ணீர்ல அவளால சுலபமா செய்ய முடிஞ்சது!
அன்றைய துவக்கம் அவளை 'பாரா நீச்சல் வீராங்கனை'யா மாத்திருச்சு. கடந்த மார்ச் மாதம் 'மாநில பாரா ஒலிம்பிக்' நீச்சல் போட்டியில அவ தங்கப்பதக்கம் ஜெயிச்சதுக்கு அப்புறம்தான் என் குற்றவுணர்வு தணிஞ்சிருக்கு!
நீங்க என்ன நினைக்கிறீங்க கீதா?
என்கிட்டே குறை இருக்குன்னு நான் நினைச்சது இல்லை. கண்ணனும் அப்படி என்னை உணர வைச்சதில்லை. யாருக்கும் எங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லாததால நிறைய நேரமும், சக்தியும் மிச்சமாகுது.