PUBLISHED ON : ஜூலை 24, 2022

பயிர் தேடிப்பாயும் நீருக்கு வரப்புகளே வழிகாட்டிகள். திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த சித்ரா தேவிக்கு வரப்பு போல் வழிகாட்டியது அந்த பயணம்.
'கணவர் துபாய்ல இருந்தப்போ, அங்கே பாலைவனத்துல விவசாயம் நடக்குறதை நான் பார்த்ததுதான் இங்கே நான் விவசாயம் பண்ணக் காரணம்! ஒரு ஏக்கர் கரிசல் மண் பூமி; கிணற்றுப் பாசனம்; சீரகச்சம்பா நெல் பயிரிடுறேன்; நானே தயாரிச்ச இயற்கை உரங்களால நல்ல விளைச்சல்; குடும்பத்தோட தேவை இந்த நிலத்தால தீருது' என்கிறார் சித்ரா.
அப்போ வருமானத்துக்கு?
அதான் மாடித்தோட்டம் இருக்கே; அரிசி சாக்குகள்ல மண், ஆட்டுப்புழுக்கை - மாட்டுச்சாணம், குப்பைகள் கலந்து, அதுல தக்காளி, கத்தரி, வெண்டை, அவரை, மிளகாய், புதினா, கொத்தமல்லி, பாகற்காய்னு பயிரிடுறேன். அரிசி, காய்கறிகள் கழுவுற தண்ணீரை ஊத்துறதால நல்ல விளைச்சல்; இதோட மண்புழு உர விற்பனையும் நல்லா போயிட்டு இருக்கு!
எம்.சி.ஏ., பட்டதாரியும், 'அனிமேஷன்' தொழில்நுட்ப நிபுணருமான சித்ரா தேவி, நகைகளை அடகு வைத்து சிறு நிலம் வாங்கி, அதில் 'மண்புழு உரம்' தயாரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி பள்ளி மாணவர்களுக்கு காட்சிப்படுத்தி வருகிறார். இம்மாதிரியான முன்னெடுப்புகளுக்காக, 'சிறந்த சமூக சேவகி' விருது, 'தமிழ் பசுமை' விருது, 'பெண் சாதனையாளர்' விருது பெற்றிருக்கிறார்.
விவசாயம் - வருமானம் - விவசாயம்; இவ்வளவுதான் வாழ்க்கையா?
இல்லை; தமிழகம் முழுக்க பயணப்பட்டு நாட்டு ரக விதைகளை சேகரிச்சு விவசாயிகளுக்கு இலவசமா கொடுக்குறேன்; 'அறுவடை முடிஞ்சதும் என்கிட்டே வாங்கினதைவிட கூடுதலா எனக்கு திருப்பித் தரணும்'னு ஒப்பந்தம்; இப்படி எனக்கு கிடைக்கிறதை மறுபடியும் இதே ஒப்பந்த அடிப்படையில பலருக்கு கொடுக்கிறேன்!
கணவர் ராமசாமி துணை நிற்க, மாடித்தோட்டம் அமைக்கத் தேவையான பொருட்களுடன் ஒரு கடையை, 2021ம் ஆண்டில் துவக்கிய சித்ரா தேவி, விதைப்பந்துகளையும் விற்பனை செய்து வருகிறார்.
'எங்க நிலம் சும்மா இருக்கு; எங்களால பார்த்துக்க முடியலை'ன்னு சொல்றவங்க மண்ணையும் நான் செழிப்பாக்கி தர்றேன். இதுமூலமா அவங்களுக்கும், எனக்கும் வருமானம்; மண் வளமாகுறதுல எனக்கு சந்தோஷம்!' என்கிறார்.
பயணம் தொடரட்டும்.
ரா.சித்ரா தேவியின்
வயது: 29
படிப்பு: எம்.சி.ஏ.,
விருப்பம்: இயற்கை கல்வி
குடும்பம்: 2 மகன்
அரசுக்கு ஒரு வேண்டுகோள்: இயற்கை விவசாயம் பெருக 'மண்புழு உரம்' தொடர்பான விழிப்புணர்வை அரசு அதிகம் ஏற்படுத்த வேண்டும்!
திருச்சி - மதுரை சாலையின் கோவில் பட்டியில் இருந்து, 7 கி.மீட்டரில் பெரிச்சிப்பட்டி கிராமத்தில் உள்ளது இவரது வயல்.
