PUBLISHED ON : செப் 24, 2020

பொருள் ஈட்டி பிள்ளைகளின் கனவை கரை சேர்க்கும் தந்தையரின் உழைப்பு பேசப்படும் அளவிற்கு... உணர்வும் உணவும் ஊட்டி வளர்க்கும் தாய்மையின் உழைப்பு புகழப்படுவதில்லை; ஏன்... பலரால் அது உழைப்பாகவே பார்க்கப்படுவது இல்லை.
தாய் துர்காதேவியை பார்த்தபடி நம்முடைய இக்கருத்தை ஆமோதிக்கிறார் சென்னை, அயனாவரத்தை சேர்ந்த வலு துாக்கும் தடகள வீரரான நவீன்.
அம்மாவோட உழைப்பை உணரத் தவறியது ஏன் நவீன்?
'நம்ம அம்மாதானே'ங்கிற சாதாரண எண்ணம்தான்! வலு துாக்குதல்ல பதக்கங்கள் வாங்குறப்போ அப்பாவுக்கும், பயிற்சியாளர்களுக்கும் தான் நன்றி சொல்லியிருக்கேன். ஒருநாள், 'நானும்தான் உனக்கு பார்த்து பார்த்து சாப்பாடு தர்றேன். என்னைக்காவது எனக்கு நன்றி சொல்லியிருக்கியா'ன்னு அம்மா கேட்டாங்க; எனக்கு, 'சுருக்'குன்னு குத்துச்சு.
துர்காதேவி - என்ன சிறப்பு?
'விரத நாட்கள்ல வீட்ல அசைவம் சமைக்க கூடாது'ங்கிறது அவங்க நம்பிக்கை. ஆனா, வாரத்துல 5 நாட்கள் புரதம் நிறைந்த அசைவ உணவுகளை நான் கட்டாயம் எடுத்துக்கணும். எனக்காக, ஒரேநாள்ல அவங்க நம்பிக்கையை உடைச்சுக்கிட்டாங்க. 'இந்தவாரம் இதெல்லாம் நான் சாப்பிடணும்'னு அம்மாகிட்டே சொல்லிட்டா, கேட்டது அப்படியே கிடைக்கும்; தியாகம்... அதுதான் துர்காதேவி!
உங்க எதிர்காலம் பற்றி அம்மாவின் உணர்வு?
நம்பிக்கை; எனக்கும், இதே துறையில இருக்குற என் தங்கை சுசித்ராவுக்கும் இருக்குற நம்பிக்கையை விட, 'என் பிள்ளைகள் சாதிப்பாங்க'ன்னு அம்மா எங்க மேல வைச்சிருக்கிற நம்பிக்கை அதிகம்.
அதிகமான உழைப்பை உறிஞ்சுற துறையில மகன்; உங்க மனைவி எப்படி சம்மதிச்சாங்க சம்பத்?
அடிப்படையில் நான்... பாடி பில்டர்; சொந்தமா உடற்பயிற்சி கூடம் நடத்திட்டு இருக்குறேன். அதனால, என் மனைவிக்கு இந்த துறை பரிச்சயம்தான். 2017ல முதன்முதலா நவீன் வலு துாக்குதல் பயிற்சிக்கு வந்தப்போ அவங்களுக்கு கவலை இருந்தது.
ஆனா, அவனோட 19 வயசுக்குள்ளே உள்நாட்டு, வெளிநாட்டு போட்டிகள் எல்லாம் சேர்த்து, 29 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம், 9 'ஸ்டிராங் பாய் டைட்டில்' ஜெயிச்சுட்டு வந்து நின்னப்போ அவங்களுக்கு சந்தோஷம்!
இந்த பெருமைகளை நீங்க உணர்றீங்களா துர்காதேவி?
மனப்பூர்வமா உணர்றேன்; பெருமையா இல்ல... என் கடமையை சரியா செஞ்சிருக்கிற திருப்தியா! ஒவ்வொரு பெண்ணோட மனசுலேயும் இந்த திருப்திக்கான ஏக்கம் இருக்கும். எனக்கு அது என் மகன் மூலமா தீர்ந்திருக்கு; மகள் மூலமாகவும் தீரப்போகுது.
