தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பறிக்க முடியாத சொத்து, படிப்பு மட்டும் தான்! ஆசிரியை கீதாகுமாரியின் அனுபவ கல்வி

பறிக்க முடியாத சொத்து, படிப்பு மட்டும் தான்! ஆசிரியை கீதாகுமாரியின் அனுபவ கல்வி

பறிக்க முடியாத சொத்து, படிப்பு மட்டும் தான்! ஆசிரியை கீதாகுமாரியின் அனுபவ கல்வி


PUBLISHED ON : ஏப் 10, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 10, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''கல்விக்கு மட்டும்தான், ஒரு தலைமுறையையே உயர்த்தும் சக்தி இருக்கிறது. அந்தக் கல்வி, பொருளாதாரம் மற்றும் சாதிய அடிப்படையில் மறுக்கப்படும் நிலை, யாரொருவருக்கும் உருவாகக்கூடாது. அதற்கான பயணம் தான் என்னுடையது,'' என்கிறார், 'ரஜீஷ்' அறக்கட்டளையின் நிறுவனரும், ஆசிரியையுமான கீதாகுமாரி என்ற மல்லை தமிழச்சி.

அது என்ன, என்ற மல்லை தமிழச்சி...

மலையாளத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தமிழின் மீது கொண்ட ஆர்வமே காரணம். தற்போது, செங்கல்பட்டு அரசு பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார். அரசு பாராட்டிய நல்லாசிரியர்.

எழுத்தாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், கவிஞர், மொழிப்பெயர்ப்பாளர், பேச்சாளர், செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்தவர் என, இவருக்கு இன்னும் சில அடையாளங்களும் இருக்கின்றன. பல புத்தகங்களும், கவிதை தொகுப்புகளும், மல்லை தமிழச்சியின் பெயரை சொல்கின்றன. இருளர் மற்றும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு ஏற்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துபவர். இதற்காக, தாய்லாந்தைச் சேர்ந்த புத்தர் பன்னாட்டுப் பேரவை அமைப்பின் சார்பாக, 2012ல் விருது பெற்றவர்.இன்னும், பல விருதுகளை தன்வசப்படுத்தியிருக்கும் இவரின், மிகப்பெரிய ஆதங்கம், இந்தத் தலைமுறை குழந்தைகள் புத்தகத்தைக்கூட, கைப்பேசியின் செயலிகளில் வாசிப்பது.

''தங்களுக்கு என்னமாதிரியான புத்தக வாசிப்பு பிடித்திருக்கிறது என்பதை குழந்தைகள் தாமாக கண்டறிய, குழந்தைகளுக்கு புத்தகங்களை நேரடியாக அறிமுகப்படுத்துவது அவசியம். தங்களுக்கான புத்தகத்தை அவர்கள் இப்படி தேடிக்கண்டறியும்போது, படிப்பார்வத்தோடு சேர்த்து, அவர்களுக்கு மொழியறிவும் அதிகமாகும். இதற்கான வாய்ப்பை, பெரியவர்களாகிய நாம்தான் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்,'' என்றார்.

''என் பள்ளி குழந்தைகளுக்கு, தினமும் ஒரு தலைப்பு கொடுத்து, அவர்களை கவிதை எழுதசொல்வது என் வழக்கம். வாசிப்போடு சேர்த்து, எழுத்தார்வத்தையும் அதிகப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் இதையெல்லாம் செய்து வருகிறேன்,'' என்றார், இந்த நல்லாசிரியர்.

தன் அறக்கட்டளை குறித்து நம்மிடம் கூறியதாவது: ரஜீஷ் என்பது, என் மகன் பெயர். சில ஆண்டுகளுக்கு முன், அவன் தவறிட்டான். அவனுடைய இழப்பிலிருந்து மீள, அவன் நினைவாக துவக்கினேன். பொருளாதார ரீதியாக பின்தங்கிய, சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டு மென நினைத்தேன். அறக்கட்டளையின் வழியாக, உணவு உடை இருப்பிடம் போன்ற பல சேவைகளை செய்யமுடியும் என்றாலும், கல்வி மட்டுமே முதன்மையான தேவையென எனக்கு தோன்றியது.

அந்த எண்ணத்தை, என் மகனுடைய அடையாளத்தில் செய்கிறேன். என் சிறுவயதில், படிப்பதற்கு எனக்கு பல தடைகள் இருந்தன. பாதியிலேயே படிப்பை நிறுத்தவேண்டிய சூழல் கூட ஏற்பட்டது. அப்படியான சூழலிலிருந்து என்னை மீட்க, கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர், கல்வி உதவி செய்தார். அவர் அன்று எனக்கு செய்த உதவி, இன்று என்னை, என் பெயருக்குப் பின்னால், 11 பட்டப்படிப்புகள் போட்டுக்கொள்ள வைத்திருக்கிறது.

என்னுடைய இந்தக் கல்வித்தகுதி மூலம், செங்கல்பட்டில் அரசு பள்ளியில் ஆசிரியராக, குழந்தைகளின் கல்விக்கு உதவ முடிகிறது. ஆனாலும், பள்ளிக்கே செல்ல முடியாமல் சிரமப்படும் குழந்தைகளுக்கும், என்னால் ஏதேனும் பயன் இருக்க வேண்டுமென நினைத்தேன். அதற்காக உருவாக்கப்பட்டதுதான், ரஜீஷ் அறக்கட்டளை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், எனக்கு, என் படிப்பை கிடைக்க ஒருவர் உதவியது போல, நான் ஒருவருக்கு உதவ வேண்டுமென நினைத்தேன்.

பிற குழந்தைகளை விடவும், இருளர் மற்றும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியை கொண்டு சேர்ப்பது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது என் கருத்து.ஏனெனில், அவர்களில் மிகப்பெரும்பான்மையான குழந்தைகள், அவரவர்களின் குடும்பங்களில் முதல் தலைமுறை கல்வியறிவை பெறுபவர்களாக இருக்கின்றனர். ஆகவே கல்வியின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துவதில் நிறைய சிக்கல் இருக்கின்றன.

அதேநேரம், கல்வியின் தேவை அவர்களுக்கு அதிகம் இருக்கிறது.கல்வியின் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்துவதற்காக, நேரம் கிடைக்கும்போதெல்லாம் எங்கள் அறக்கட்டளை சார்பாக இச்சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளை கண்டு, அவர்களோடு கலந்துரையாடல் நிகழ்வு நிகழ்த்துகிறோம்.

அவர்களின் பெற்றோர் மத்தியிலும் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார், குழந்தைகளுக்காக இவ்வளவு செய்யும் இவர், அந்தக் குழந்தைகளிடமிருந்து எதிர்ப்பார்ப்பது, ஒன்றே ஒன்றுதானாம். அது, 'உங்களுக்கு முன்பின் தெரியாத ஒருவருடைய கல்விக்கு நீங்கள் உதவவேண்டும்' என்பது!

சரிதான், படிப்புதானே பறிக்க முடியாத ஒரே சொத்து!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us