PUBLISHED ON : ஆக 21, 2020

வணக்கம். நான் தேவயானி. 'பசியை வென்று பிளஸ் 2 பொதுத்தேர்வில் 600க்கு 500 மதிப்பெண் பெற்ற மதுரை, திருப்பரங்குன்றம் மாணவி'ங்கிற அடிப்படையில நான் உங்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான பொண்ணுதான்!
ஊரடங்கில் எப்படி பொழுதை போக்குறீங்க தேவயானி?
குடும்ப வருமானத்துக்கு ஒயர் கூடை பின்னி கொடுக்குறேன்!
உங்களுக்கு பிடித்த 'டிவி' நிகழ்ச்சி?
எங்க வீட்டுல மின்சாரமே கிடையாதே!
வீட்ல என்ன வசதி இருந்தா நல்லாயிருக்கும்?
கழிப்பறை!
பள்ளியில் பிடித்த ஒரு விஷயம்?
மதிய சத்துணவு!
சைக்கிள் ஓட்டுவீங்களா?
அரசு சைக்கிள் இருக்கு; ஆனா, ஓட்டுறதுக்கு பயம்!
எங்க அப்பா கணேசனுக்கும், அம்மா லட்சுமிக்கும் ஊர் ஊரா போய் குறி சொல்றது தொழில். பிளஸ் 2 முடிச்சும் மேற்படிப்புக்கு வசதி இல்லாததால மூத்த அக்காவை கல்யாணம் பண்ணி தந்துட்டாங்க. எங்களை வளர்க்குறதுக்காகவே, இன்னொரு அக்கா படிக்கலை. தம்பி 10வது பெயில் ஆனதால, வீட்லயே இருக்குறான்.
தங்கச்சியும், கடைசி தம்பியும் ஸ்கூலுக்குப் போறாங்க.
என் குடும்ப சூழலைப் பார்த்து, மதுரை பாத்திமா கல்லுாரியில கட்டணம் இல்லாம சீட் கொடுத்திருக்காங்க. என் மனசுக்குப் பிடிச்ச பி.ஏ., வரலாறு பிரிவை தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
வெளிச்சமா இருக்கணும்!
திருப்பரங்குன்றம் ஜெ.ஜெ., நகர், காட்டுநாயக்கன் குடியிருப்பு. இதுதான் எங்க பகுதியில இருக்குற எல்லா குடும்பங்களுக்குமான முகவரி. யாருக்கும் சொந்தமா பட்டா நிலம் கிடையாது. இங்கிருக்கிற, 60க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் தெரு விளக்கு வெளிச்சத்துலதான் படிக்கிறாங்க.
படிப்புல எனக்கிருக்கிற சந்தேகங்களை, பி.எஸ்சி., பிசிக்ஸ் படிக்கிற வினோத் அண்ணன் தீர்த்து வைப்பாரு. அவர்தான், எங்க சமூகத்துல கல்லுாரிக்குப் போன முதல் இளைஞர். என்னைவிட வயசுல சின்னவங்களுக்கு நான் சொல்லித் தருவேன். ஐ.ஏ.எஸ்., என் கனவு!
நெடும் பயணத்தின் துவக்கம்
உயரமான திருப்பரங்குன்றம், வாழ்விட அடையாளமாக இருப்பினும், தேவயானியின் வாழ்க்கை தரம் இன்னும் மேட்டிற்கு கூட வரவில்லை. 'கோ-கோ' விளையாட்டில் தேவயானிக்கு மிகுந்த ஈடுபாடு. ஆனால், படிக்க அனுப்புவதே சவாலாக இருக்கும் குடும்ப சூழலில், தன் விளையாட்டு கனவுகளை இவர் துளிர்க்க விடவில்லை.
'ஆன்லைன் கல்விதான் எதிர்காலம்னு சொல்றாங்களே' என்றால், 'அப்போ, எங்க எதிர்காலம்...' என்று அதீதமாய் பதற்றம் அடைகிறார்.
பயப்படுறீங்களா தேவயானி?
கண்டிப்பா; ஆனாலும், மனசு ஓரமா ஒரு நம்பிக்கை இருக்கு.
