PUBLISHED ON : ஏப் 17, 2022

'கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் இந்த தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தி உள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம்!' - தமிழக முதல்வரின் 2021 டிசம்பர் மாத 'ட்விட்டர்' பதிவு இது!
இந்த சூழலில், சிறப்பு குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையத்தை ஒரு தோளிலும், சிறப்பு குழந்தையான தன் மகள் நிதில்யாவை மறு தோளிலுமாக சுமந்து வருகிறார் கோவை காயத்ரி சம்பத்.
மறுவாழ்வு மையம் - இதற்கான விதை?
சென்னையில ஒரு சிறப்பு பள்ளியில நிதில்யாவுக்கு சிகிச்சை நடந்துட்டு இருக்கு. அங்கே, 30 வயதான தன் மகனை தினமும் தோள்ல சுமந்தபடி மாநகர பேருந்துல பள்ளிக்கு அழைச்சுட்டு வர்றாங்க ஒரு அம்மா; 'தன் மகனும் எல்லார் மாதிரியும் ஆயிடுவான்'னு அவங்களுக்கு நம்பிக்கை; ஆனா, கணவர்கிட்டே ஒத்துழைப்பு இல்லை; மகனுக்கு விஷத்தை கொடுத்துட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. என் மனசுல இடி இறக்கின அந்த சம்பவம்தான் என் செயல்களுக்கான விதை!
பெண்மையின் பெருமை?
அவளொரு வளர்ந்த பெண் சிறப்பு குழந்தை. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை; அப்பாதான் எல்லாமே! அந்த ஆணின் அருகாமை அவளோட தன்மையில மாற்றங்களை ஏற்படுத்திருச்சு! ஆண்கள் பக்கத்துல தேடிப்போய் அவ உட்காருறதை கவனிச்சு விசாரிச்சதுல இதை தெரிஞ்சுக்கிட்டு சரி பண்ணினேன்.
மகனை தன் பக்கத்துலேயே துாங்க வைச்சு பழகிட்ட தாயோட சிக்கலையும் சரி பண்ணியிருக்கேன். என் பெண்மையோட நுணுக்கமான உணர்வுகள்தான் இதுக்கு காரணம்!
மென்பொறியாளராக பணியாற்றி
வந்த காயத்ரி, மருத்துவரான தன் கணவர் சம்பத்தின் பங்களிப்புடன், கோவையில் சிறப்பு குழந்தைகளுக்கான நிதில்யம் மறுவாழ்வு மையத்தை 2016ம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறார். பயிற்சிகள் மூலம் சிறப்பு குழந்தைகளை தனிச்சிறப்புகளுடன் சமூகத்தில் உலவ வைக்கிறார்.
சிறப்பு குழந்தைகளோடு அதிக நேரம் - மன பாரம் உண்டா?
சிறப்பு குழந்தைகளை மனப்பிறழ்வுக்கு ஆளானவர்களா நினைக்கிறதுதான் இந்த அழுக்கு சிந்தனைக்கு காரணம்; அவங்களுக்கும் திறமை, கொண்டாட்ட மனம் உண்டு!
எங்க மையத்துல சிறப்பு குழந்தைகள் கணினி இயக்குவாங்க; சர்வதேச விளையாட்டு போட்டியில ஜெயிச்சுட்டு வர்றாங்க; பொது தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் வாங்குறாங்க; பட்டாம்பூச்சிகள் பாரம் இல்லையே!
சிறப்பு குழந்தைகள் மேம்பாட்டுக்காக நவீன வசதிகளுடன் 'உண்டு உறைவிடப் பள்ளி' உருவாக்கி வழிநடத்தும் பெரும் கனவோடு பயணித்து வருகிறார் காயத்ரி சம்பத். வாழ்த்துகிறாள் கண்ணம்மா.
காயத்ரி சம்பத்தின் புதுப்புது அர்த்தங்கள்!
வாழ்க்கை? - எண்ணங்கள்
துயரம்? - பிம்பம்
மருந்து? - செயல்
