
ஆகாஷ் உடனான காதல் தோல்வியை நான் கடந்திருந்தாலும், ராதா ஆன்ட்டி - மூர்த்தி அங்கிளை சந்திக்கிற வரைக்கும் என்னை இன்னொரு காதலுக்கு தகுதியானவளா நான் நினைக்கலை.
ராதா ஆன்ட்டி காதலுக்கு, 30 வயசு; அவங்களுக்கு குழந்தைகள் கிடையாது. ஒருநாள் அவங்க காதல் கதையை கேட்டேன்.
'எனக்கு அவரை பார்த்ததும் பிடிச்சிருந்தது. எங்க காதல் விஷயம் எங்கப்பாவுக்கு தெரியவந்து, எனக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சார். என்னால தடுக்க முடியலை!'
'அப்புறம்...?'
'எங்கப்பா பார்த்த இவரை கட்டிக்கிட்டு 30 வருஷமா குடும்பம் நடத்திட்டு வர்றேன்!'
'காதலிச்சவரை கல்யாணம் பண்ணிக்காதது கஷ்டமா இல்லையா?'
'கஷ்டம்தான்; ஆனா, அது என் வாழ்க்கைக்கு நான் இன்னொரு வாய்ப்பை தராதவரைக்கும்தான்! ஒரு மோசமான அனுபவத்தால மொத்த வாழ்க்கையும் அப்படியே இருந்துடாது இல்லையா; கடந்து போறது எந்தளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு இன்னொரு வாய்ப்பை தந்துக்கிறதும் முக்கியம்!'
'ராதா நீ என் பிரபஞ்சத்தோட மையப்புள்ளி'ன்னு மூர்த்தி என்கிட்டே அடிக்கடி சொல்றாரு; எனக்கு நானே இன்னொரு வாய்ப்பு தந்ததால கிடைச்ச அன்பு இது!'
ஆன்ட்டி சொல்றது உண்மைதான்; இப்போ, என் பிரபஞ்சத்தோட மையப்புள்ளியா தருண் இருக்குறான்.
படம்: கதேயொன்டு ஷ்ருவாகிடே (கன்னடம்)

