
ஒரு நாளில் 17 மணி நேரத்தை அர்த்தமுள்ளதாக பயன்படுத்திக் கொள்வதாலேயே, தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம் வென்று சாதித்துக் கொண்டிருக்கிறார் கோவையைச் சேர்ந்த 14 வயது மாணவி.
யார் இவர்?
பெயர்: கவிநயா/ 9ம் வகுப்புபள்ளி: அம்ரித வித்யாலயம், கோவை.பெற்றோர்: பாக்யராஜ் - செல்விஅடையாளம்: 'ஸ்கேட்டிங்' வீராங்கனை
உங்கள் வயதிற்கு 8 மணி நேர துாக்கம் அவசியமில்லையா?
தினமும் காலையில 4:30 மணிக்கு எழுந்திருக்கிறேன். பள்ளிக்கூடம், ரெண்டு வேளை 'ஸ்கேட்டிங்' பயிற்சி போயிட்டு வந்து பாடங்கள் படிச்சு முடிக்க இரவு 8:30 மணி தாண்டிரும். ஓடிட்டே இருக்கிறதால ராத்திரி 10:00 மணிக்கெல்லாம் துாக்கம் வந்திரும். என் உழைப்புக்கு இந்த உறக்கமே போதும்!
சாப்பிட மறுத்து அடம் பிடித்ததால், பசி துாண்டுவதற்காக கவிநயாவின் நான்கு வயதில் அவரை 'ஸ்கேட்டிங்' பயிற்சியில் சேர்த்து விட்டிருக்கின்றனர் பெற்றோர்!
'நாளை' என்பதன் மீது நம்பிக்கை உண்டா கவிநயா?
'டாக்டர் ஆயிடுவேன்'ங்கிற மிகப்பெரிய நம்பிக்கையோட இருக்குறேன். அதேநேரம், 'நாளைக்கு பார்த்துக்கலாம்'னு எதையும் நான் தள்ளிப்போடுறது இல்லை!
சிறந்த வீராங்கனை - சிறந்த மாணவி; எந்த அடையாளத்தில் விருப்பம்?
சிறந்த விளையாட்டு வீரர்கள், சிறந்த மாணவர்களாகவும் இருப்பாங்கங்கிறது என் அனுபவம்!
இதுவரை 50க்கும் அதிகமான தங்கம், 20க்கும் அதிகமான வெள்ளி மற்றும் 8க்கும் அதிகமான வெண்கல பதக்கங்களை மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பெற்றிருக்கும் கவிநயாவிற்கு, கடந்த டிசம்பர் மாதம் ஹரியானாவில் நடைபெற்ற போட்டி, வாழ்நாள் நினைவு; பருவம் எய்திய கணத்திலும் அப்போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றிருக்கிறார்!
தொடர் வெற்றிகள் திகட்டவில்லையா?
திறமையான நபர்களை உருவாக்கி தந்துட்டே இருக்குற விளையாட்டு இது; இதுல என்னை நான் மேம்படுத்திக்கிட்டே இருக்கணும். இந்த தொடர் பயிற்சிகள்தான் என்னோட இலக்கு. வெற்றிகள் எல்லாம் என்னோட பயிற்சிகளுக்கு கிடைக்கிற அங்கீகாரங்கள். அதனால, அதெல்லாம் எனக்கு திகட்டுறதில்லை!
மாணவர்களுக்கு ஏன் விளையாட்டு அவசியம்?
நான் விளையாட்டுல சிறப்பா செயல்படுறதால, கடந்த நான்கு ஆண்டுகளா கல்வி கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் என் பெற்றோருக்கு இல்லை. என் இடத்துல ஒரு கஷ்டப்படுற குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவனோ மாணவியோ இருந்தா, இந்த சலுகை அந்த குடும்பத்துக்கு மிகப்பெரிய வரமா இருக்கும்.
எங்கள் கவிநயா
'கற்பூர புத்தின்னு கேள்விப்பட்டிருக்கோம்; எங்க கவிநயா மூலமா அதை நாங்க முழுமையா உணர்றோம்!'
- ஜெயஜோதி கிருஷ்ணகுமார், தலைமை ஆசிரியை.