நள்ளிரவில் சுதந்திர தினத்தை கொண்டாடும் சென்னை தக்கர் பாபா வித்யாலயம்
நள்ளிரவில் சுதந்திர தினத்தை கொண்டாடும் சென்னை தக்கர் பாபா வித்யாலயம்
PUBLISHED ON : ஆக 13, 2024 12:00 AM


1946 ஆம் ஆண்டு சென்னை தி.நகர் பகுதிக்கு வந்தார்.
ஏழை எளிய மற்றும் அரிஜன மக்களின் பிள்ளைகள் சொந்தமாக தொழில் கற்றுக் கொண்டு முன்னேற தேவையான தொழிற்கல்வியை கற்றுக் கொடுக்கும் கல்விக்கூடத்தை துவக்க வந்தார்.
அவர் துவக்கிவைக்கும் வரை அந்த கல்விக்கூடத்திற்கு எந்தப் பெயரையும் நிர்வாகிகள் வைக்கவில்லை, அனைவரும் மகாத்மா காந்தியின் பெயரையே வைக்க விரும்பினர் அதை அவரிடமும் எடுத்துக்கூறினர்.
ஆனால் அதை மறுத்த மகாத்மா, 'தக்கர் பாபா' பெயரைச் சூடுங்கள் அதுதான் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி அவர் பெயரையே சூட்டினார்.
அப்படி மகாத்மா காந்தியால் பெயர் சூட்டப்பட்ட 'தக்கர் பாபா வித்யாலயா' இன்றும் சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ளது.
எல்லாம் சரி, காந்தி போற்றிய தக்கர் பாபா யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா?
தக்கர் பாபா என்று அழைக்கப்பட்டவரின் முழுப்பெயர் அம்ரித்லால் விட்டல்தாஸ் தக்கர் என்பதாகும்.
தக்கர் பாப்பா 1869 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி இந்தியாவின் குஜராத் மாநிலம் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள பாவ்நகரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார்.பொறியாளர் படிப்பை முடித்து மும்பை மாநகராட்சியில் பணியாற்றும் போது மும்பை முழுவதும் உள்ள குப்பைகளை அள்ளும் தொழிலாளர்களின் அவல நிலையை நேரில் கண்டு கண்கலங்கினார் அவர்கள் வாழும் அசுத்தமான காலனிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வேலையை ராஜினாமா செய்துவிட்டு அரிஜனங்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார் இதற்காக நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார்.இதற்காக தனது வாழ்நாளின் 35 ஆண்டுகள் செலவிட்டு அவர்களுக்காகவே வாழ்ந்து மறைந்தார்.மகாத்மாவால் நிறுவப்பட்ட அரிஜன சேவா சங்க பொதுச் செயலாளராக இருந்த போது காந்தியுடன் மிக நெருக்கமாக இருந்தார்.என்னைவிட அரிஜன மக்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுபவர் தக்கர் பாபா அவர் அரிஜனங்களின் தந்தை என்றே பாராட்டினார்.
அரிஜன மக்களை முன்னேற்ற தக்கர் பாபா எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றுதான் அவர்களுக்கு தொழில் கல்வியைக் கொடுப்பது.தொழிலைக் கற்றுக் கொண்டு முன்னேறினால் அந்த தலைமுறையே மாறிவிடும் என்றார்,இதற்காக நன்கொடையாளர்கள் தயவுடன் நாடு முழுவதும் தொழில் கல்விக்கூடம் துவங்க காரணமாக இருந்தார்.இதை காந்தியும் முழு மனதாக ஆதரித்தார்.இப்படி துவங்கப்பட்டதுதான் சென்னை தக்கர் பாபா வித்தயாலயா சமிதி.

இங்கு படிக்கும் குழந்தைகளை மையமாகக் கொண்டு நாடு நள்ளிரவு சுதந்திரமடைந்ததை நினைவு கூறும் வகையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு துவங்கி நள்ளிரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர் நிறைவாக நள்ளிரவில் சுதந்திர தினவிழாவினைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.இந்த கொண்டாட்டத்தில் பொதுமக்களாகிய நீங்களும் பங்கேற்கலாம்.-எல்.முருகராஜ்

