இதயம் சொல்வதைக் கேளுங்கள்-ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு
இதயம் சொல்வதைக் கேளுங்கள்-ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு
PUBLISHED ON : மார் 24, 2024 12:00 AM

![]() |
எதை வேண்டுமானாலும் படியுங்கள் ஆனால் படித்த படிப்பை வைத்து இந்த தேசத்திற்கு நம்மால் என்ன பங்களிப்பு செய்யமுடியும் என்று எண்ணுங்கள் அப்போதுதான் வரலாற்றில் உன் பெயர் இடம் பெறும் இல்லாவிட்டால் ரேஷன் கார்டில் மட்டுமே உன் பெயர் இடம் பெறும் என்றார் ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு.
தினமலர் நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக்குழுமம் இணைந்து நடத்திய பிளஸ் டூவிற்கு பிறகு உயர்கல்வி படிக்கவிரும்பும் மாணவர்களுக்கான கல்வி ஆலோசனை வழங்கும் வழிகாட்டி நிகழ்வில் இந்திய பாதுகாப்புத்துறையின் ராணுவ விஞ்ஞானியாக இருக்கும் டாக்டர் டில்லிபாபு 'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' என்ற தலைப்பில் மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார்.
![]() |
எண்ணம் மட்டும் வலுவாக இருந்தால் வறுமை நம்மை ஒன்றும் செய்யமுடியாது என்பதற்கு நானே உதாரணம், சென்னை வியாசர்பாடியில் சாதாரண மின் வசதியோ,கழிப்பறை வசதியோ இல்லாத வீட்டில் வளர்ந்தவன் நான்.
அரசுப்பள்ளியில் படித்து அங்கு பெற்ற மதிப்பெண் அடிப்படையில்,அரசு கல்லுாரியில் இடம் கிடைத்து பிடெக் படித்தேன், அங்கும் புத்தகம் வாங்கக்கூட பணம் இல்லாத நிலை,ஒரு புத்தகம் ஆயிரம் ரூபாய் என்றால் என்னைப் போன்ற ஐந்து பேர் ஒன்று சேர்ந்து ஆளுக்கு இருநுாறு ரூபாய் போட்டு அந்தப் புத்தகத்தை வாங்கி பின் அதை ஐந்தாக கிழித்து ஆளுாளுக்கு பகுதி பகுதியாக படிப்போம்.
'நீ என்னத்தை படிச்சு கிழிக்கப் போற' என்று கேட்டவர்கள் மத்தியில் உண்மையிலேயே 'கிழித்து'விட்டுத்தான் படித்தேன்.அதன் பிறகு இந்திய பாதுகாப்புத்துறையில் வேலை அவர்களே 'எம்டெக்' உள்ளீட்ட பல படிப்புகளை படிக்க வைத்து உயர்த்தினர், இன்று ராணுவ விஞ்ஞானியாக எல்லாவித வசதி வாய்ப்புகளுடன் இருந்து கொண்டு இருக்கிறேன்,ஆனால் நான் ஒரு காலத்திலும் இந்த வசதி வாய்ப்புக்காக ஏங்கியவனும் இல்லை, அதை நோக்கி பயணிப்பவனும் இல்லை.இப்போதும் என் வீட்டில் முப்பதாயிரம் புத்தகங்கள் உள்ளது ஆனால் ஒரு டி,வி.,கிடையாது.
![]() |
படிக்க வேண்டும் படித்த படிப்பைக் கொண்டு இந்த தேசத்திற்கு இந்த சமூகத்திற்கு பயன்படும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்பதே என் நோக்கம்.இதை நோக்கியே எனது தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.
உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால் நீங்கள் எல்லாம் படங்களில் பார்த்து ரசிக்கும் பனிமலையானது நிஜத்தில் செல்பி எடுத்துக் கொள்ள மட்டுமே லாயக்கான இடமாகும்.,மைனஸ் ஐம்பது டிகிரியில் தாங்கமுடியாத குளிர் நிலவும்.அங்கே ஒரு இரவு கூட என்னால் நிம்மதியாக உறங்கமுடியவில்லை 'ஸ்லீப்பிங் பேக்கிற்குள்' இருந்தாலும் குளிர் என் எலும்பு குருத்துக்குள் கூட புகுந்து வாட்டியது.இங்கே இருந்தபடிதானே மணைவி,பிள்ளைகள்,சொந்தம்,நட்பு,சந்தோஷம் என்று அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு நம்மை காக்க நாட்டைக் காக்க நம் ராணுவ வீரர்கள் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.
இவர்களுக்கு வெறுமனே 'சல்யூட்' செய்துவிட்டு வருவதில் எனக்கு உடன்பாடில்லை,அந்த துாங்காத இரவில் நிறைய யோசித்தேன் இவர்களது தலையாய பிரச்னை கழிவறை பிரச்னைதான் என்பதை உணர்ந்தேன். இவர்கள் முகாமிட்டு இருக்கும் இடத்தில் மனித கழிவுகளை மக்கவைக்கவோ,வெளியேற்றவோ, வழிகிடையாது சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவித்தபடியும் துர்நாற்றம் ஏற்படுத்தியபடியும் அங்கேயே மலையாக குவிந்துகிடக்கும் அந்தப்பனிச்சுழல் அப்படி.
அந்த மனிதக்கழிவை மக்கவைக்க, அழிக்க,துர்நாற்றமற்ற சூழலுக்கு மாற்ற பயோ டாய்லெட்டை நிறுவினோம்: நுண்ணுயிரிகளின் செயல்பாட்டால் மனித கழிவுகள் 99 சதவீதம் மக்கி பயோ வாயுவாக வெளியேறும். இதில் நாற்றம் இருக்காது.இப்போது பனி மழையில் பணியாற்றும் ராணுவ வீர்கள் இதற்காக கையெடுத்துக் கும்பிடுகின்றனர்,இந்த திட்டம் நன்றாக இருக்கிறதே என்று ரயில்வே துறை எங்களைக் கேட்டது நல்லது நடக்கத்தானே கேட்கிறார்கள் என்று உடனே அந்த திட்டத்தை வழங்கினோம், நாட்டில் ஓடும் ஆயிரக்கணக்கான ரயில்களில் இன்று 'பயோ டாய்லட்' முறைதான் உள்ளது.இதனால் தண்ணீர் செலவும் கிடையாது என்பதால் கர்நாடக அரசு தனது கிராமங்களில் இந்த 'பயோ டாய்லெட்டை' அறிமுகம் செய்தது, இன்று நாடு முழுவதும் பலோ டாய்லெட் அறிமுகமாகிவிட்டது.
இப்படி ராணுவ விஞ்ஞானியாக நாளும் நாட்டிற்கு உதவ உழைத்துக் கொண்டே இருக்கிறோம்.
பிளஸ் டூ படித்து முடித்த மாணவர்களே உங்கள் முன் இதைப்படிப்பதா அதைப்படிப்பதா என்று கண்முன் பல படிப்புகள் வந்து வந்து போகும் உங்கள் இதயத்தின் முன் ஒரே ஒரு படிப்பு மட்டும் என்னை எடுத்து படியேன் என்று கெஞ்சாத குறையாக கேட்டு வந்து நிற்கும். அதை எடுத்துப்படி, விரும்பிப்படி, ரசித்துப்படி, ஆழமாகப்படி, நிச்சயம் அது உன்னை உயர்த்தும், நீ உயரும் போது நாட்டை உயர்த்த மறந்துவிடாதே வாழ்த்துக்கள் என்று டில்லி பாபு பேசி முடித்த போது அரங்கில் எழுந்த கைதட்டல் அடங்க வெகு நேரமானது.
-எல்.முருகராஜ்



