PUBLISHED ON : ஏப் 23, 2024 12:00 AM

![]() |
அழகர் ஆற்றில் இறங்குவதைக் காண பல லட்சம் பக்தர்கள் மதுரை வைகை ஆற்றில் காத்திருந்தனர்.
அழகரும் மின்னும் தங்கக்குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கினார்.இறங்கிய அழகர், ஆற்றின் நடுவே வெள்ளிக்குதிரை வாகனத்தில் வீற்றிருந்த வீரராகவ பெருமாளை வலம் வந்து அவருக்கான முதல் மரியாதையை வழங்கினார்.
இந்த நிகழ்விற்கு பின்னால் மகத்தான ஒரு விஷயம் இருக்கிறது.
ராஜாக்கள் காலத்தில் சோழவந்தான் தேனுார் மண்டபம் அருகேதான் அழகர் ஆற்றில் இறங்கினார்.
முதல் நாள் இரவே தேனுார் வந்துவிடும் அழகரை அங்குள்ள மண்டபத்தில் வழக்கம் போல தங்கவைத்தனர்.
![]() |
மண்டபத்தில் எதிர்பாரமல் தீ விபத்து ஏற்பட்டது.தீயினை பார்த்ததும் அங்கு இருந்த அரசர் முதல் அர்ச்சகர் வரை அனைவரும் பாதுகாப்பான இடம் தேடி ஒடினர்.
ஆனால் அங்கு இருந்த அழகரின் பக்தரும், வீரராகவ பெருமாள் கோவில் அர்ச்சகருமான 'அமுதுரார்'என்பவர் அழகரை நெருப்பு சூழ்ந்திருக்கிறதே என்று பதைபதைத்துப் போய் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் எரியும் நெருப்பினுள் பாய்ந்து அங்கு இருந்த அழகரை மீட்டுக்கொண்டு வந்தார்.
இதனை அறிந்த அரசர் ஒரு கணம் கலங்கி நான் கூட என் உயிர் பெரிதென விலகிவிட்டேன் ஆனால் நீங்கள் உங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் அழகரை மீட்டுவிட்டீர்கள், இதன் காரணமாக அழகர் ஆற்றில் இறங்கும் போது வழக்கமாக தரப்படும் முதல் மரியாதை இன்று முதல் உங்களுக்கே தரப்படும் என்றார்.
ஆனால் அமுதுரார் அதனை ஏற்காமல் அடியவன் அதற்கு தகுதியற்றவன் ஆனால் நான் அன்றாடம் வழிபடும் வீரராகவப் பெருமாளுக்கு அந்த மரியாதை கிடைத்தால் பெரிதும் மகிழ்வேன் என்றார்,அரசரும் அப்படியே ஆகட்டும் என்றார்.
அன்று தொட்டு இன்று வரை அழகர் இறங்கும் போது எதிர்கொண்டழைக்கும் வீரராகவப் பெருமாளுக்கு அழகர் கோவில் சார்பில் முதல் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்விற்காக அழகர் ஆற்றில் இறங்கும் அதேநாளில் அதிகாலை 3.30மணிக்கெல்லாம் தெற்குமாசிவீதியில் உள்ள தன் கோயிலில் இருந்து வெள்ளி குதிரையில் சர்வ அலங்காரத்துடன் வீரராகவப்பெருமாளும் கிளம்புவார்.
மேலமாசிவீதி, வக்கீல் புதுத்தெரு, யானைக்கல் வழியாக வைகை ஆற்றில் இறங்கி அழகரை வரவேற்க காத்திருப்பார்.அழகர் வந்ததும் 'வையாளி' எனப்படும் முறையில் வெள்ளிக்குதிரை வாகனத்தை ஏந்திவருபவர்கள் அந்த வாகனத்தை குலுக்கியெடுத்து குதுாகலமடைவர்.
அழகர் ஆற்றில் இறங்கிய அங்குள்ள மண்டபத்தில் தங்குவார் அந்த மண்டபத்தை வீரராகவப் பெருமாள் மும்முறை வலம் வருவர்.பின் அழகர் முன்பாக வீரராகவ பெருமாளுக்கு
பரிவட்டம், மாலை சாற்றப்படும்.அழகர் வைகை ஆற்றைவிட்டு கிளம்பியதும் வீரராகப் பெருமாள் மீண்டும் சென்ற வழியே திரும்பி தன் கோவிலை வந்தடைவார்.அவர் கோவிலுக்கு வந்ததும் சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கி பக்தர்கள் ஆனந்திப்பர்.
சித்திரை திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்விற்கு பிறகும் இப்படியான பல விஷயங்கள் உள்ளடங்கியுள்ளன.
-எல்.முருகராஜ்.


