PUBLISHED ON : அக் 27, 2025 12:00 AM

நம்மில் பலர் விடிந்ததும் முதலில் தேடுவது — வீட்டின் வாசலில் வந்து விழுந்திருக்கும் அன்றைய நாளிதழ்தான்.
அந்த நாளிதழை நமக்குக் கையளிக்கப் பல சிறுவர்கள், விடியற்காலையிலேயே, சைக்கிளில் பாய்ந்து மின்னல் வேகத்தில் வீடு வீடாகப் பேப்பர் போடுகிறார்கள். எந்த வீட்டிற்கு எந்தப் பேப்பர் வேண்டும் என்பதையும் துல்லியமாக மனப்பாடம் செய்துகொண்டு, மாடிகளிலும் சந்து பொந்துகளிலும் சுறுசுறுப்பாகச் சுழன்றடிக்கிறார்கள்.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும் தனது பள்ளிப் பருவத்தில் ராமேஸ்வரத்தில் வீடு வீடாகப் பேப்பர் போட்டுள்ளார், இதை அவர் தனது 'அக்னிச்சிறகுகள்' என்ற சுயசரிதைப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது விஷயத்திற்கு வருவோம்.
இந்தச் சுறுசுறுப்பான வேலையை 94 வயது தாத்தா ஒருவர் செய்து வருகிறார்.அவர் பெயர் — சண்முகசுந்தரம்.
சென்னை கோபாலபுரம் பகுதியில்தான் அவர் பேப்பர் போடும் “ஏரியா.”ராயப்பேட்டைச் சேர்ந்த இவர், தன்னை “சண்முகம்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டாலும், பகுதி முழுவதும் “பேப்பர் தாத்தா” என்றே அனைவரும் அழைக்கிறார்கள்.
பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், மோட்டார் வாகனத் தொழிலில் ஐம்பது ஆண்டுகள் பணியாற்றியவர். பின்னர் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அந்தத் தொழிலை விட்டுவிட்டார்.
அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் போது, கோபாலபுரத்தில் பேப்பர் போடும் வேலை இருப்பதை அறிந்தார்.“அது சிறுவர்கள் செய்யும் வேலை” என்றவர்களுக்கு அவர் அளித்த பதில் —
“ஏன் நான் செய்யக்கூடாது? உண்மையாக, நேர்மையாக உழைத்து சாப்பிடணும். அது எந்தத் தொழிலாக இருந்தாலும் பரவாயில்லை.”
அவ்வாறே அவர் 2000ஆம் ஆண்டிலிருந்து பேப்பர் போட்டு வருகிறார் — இப்போது 25 ஆண்டுகள் ஆகிறது.
2000 ஆம் ஆண்டு முதல் பேப்பர் போட்டு வருகிறார் 25 வருடமாகிவிட்டது,பேப்பர் போடுவதுடன், பால் பாக்கெட் போட்டால் இன்னும் கொஞ்சம் கூடுதல் வருமானம் கிடைக்குமே என்று ஒருவர் கூறியதும் 'போட்டுட்டா போச்சு' என்று வீடு வீடாக பால் பாக்கெட்டும் போடுகிறார்,பகலில் சும்மாதானப்பா இருக்க ஒரு வழிபாட்டு மண்டபத்தை பொறுப்பாளரா இருந்து பார்த்துக்கமுடியுமா? சம்பளம் தர்ரோம் என்ற போது 'பார்த்துக்கிட்டா போச்சு' என்று அதையும் பார்த்துக் கொள்கிறார்.
அதிகாலை 3 மணிக்கே எழுந்து, மண்டபத்தைத் தயார் செய்து சிறு வழிபாடு நடத்தி முடித்துவிடுகிறார்.அதன்பின் பால் பாக்கெட் விநியோகம்,பேப்பர் விநியோகம் என்று எந்திரம் போல செயல்படுகிறார்.
வீட்டிற்கு வந்து மனைவி லட்சுமிக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து, பிறகு மீண்டும் மண்டபத்திற்குச் சென்றுவிடுகிறார் அங்குதான் ஓய்வு, உறக்கம், அனைத்தும் —இதுதான் சண்முகத்தின் அன்றாட வாழ்க்கை.ஒரு நாளும் கடமையில் தவறியதில்லை.
“உடம்பில் பிரச்சனை ஏதும் இல்லை. எங்கே போனாலும் என் சைக்கிள்லதான் செல்கிறேன்,” என்று பெருமையாகச் சொல்கிறார்.
மகனும் மகள்களும் பேரன்களும் அனைவரும் நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள் ஒடினது போதும் உட்காருங்கள் என்று கூறினாலும்,நான் அதை காதில் போட்டுக் கொள்வதில்லை.
“நானே உழைத்து சம்பாதித்த காசுல சாப்பிடறதுதான் எனக்கு சந்தோஷமா இருக்கு,”என்று உறுதியாகப் பேசுகிறார்.
“நான் பேப்பர் போடுற வீடுகளில் எத்தனையோ அதிகாரிகள், 'ஒரு கையெழுத்து போடு, முதியோர் பென்ஷன் வாங்கித்தர்றேன்' என்பார்கள். ஆனால், அதுவும் உழைக்காம வாங்குற காசு மாதிரி தோணும். அதனால இதுவரை வேண்டாம்னு இருந்துட்டேன்,”என்று நிதானமாகச் சொல்லும் சண்முகசுந்தரம் —பேப்பர் தாத்தா மட்டும் அல்ல, வைராக்கியத் தாத்தாவும் கூட.
அவரிடம் தொலைபேசி கிடையாது.ஆகையால் அவரை வாழ்த்த நினைத்தால் —மனதார இருக்கும் இடத்தில் இருந்தே வாழ்த்திக் கொள்ளுங்கள்.
-எல்.முருகராஜ்

