PUBLISHED ON : ஜன 31, 2026 08:40 PM

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடிய வள்ளல் பெருமான், உலகிற்குப் போதித்த மிகப்பெரிய தர்மம் 'பசிப்பிணி போக்கும் ஜீவகாருண்யம்'. சாதி, மதம், இனம் கடந்து பசித்தவன் வயிறு குளிரச் செய்வதே இறைவனுக்குச் செய்யும் மிகப்பெரிய தொண்டு என்று வடலூரில் அவர் ஏற்றிய 'அணைந்தா அடுப்பு' இன்றும் எரிந்துகொண்டிருக்கிறது. அந்தப் பசிப்பிணி போக்கும் அறப்பணியில், தன்னை ஒரு சிறு துளியாக இணைத்துக் கொண்டு கடந்த 25 ஆண்டுகளாகச் சத்தமில்லாமல் சாதித்து வருகிறார் கடலூரைச் சேர்ந்த பக்கிரான்.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, வடலூரைச் சேர்ந்த இவரது நண்பர் சிவபெருமாள் என்பவர், 'வடலூர் தைப்பூச அன்னதானத்திற்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாமே' என்று ஒரு யோசனையை முன்வைத்தார். அதுவே ஒரு பெரும் தொடக்கமானது. அன்று முதல் இன்று வரை, ஒவ்வொரு தைப்பூசத் திருவிழாவிற்கும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
இந்த ஆண்டு தைப்பூசத்திற்காக மட்டும், சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளார் பக்கிரான். வெறும் பொருட்களைக் கொடுப்பதோடு நின்றுவிடாமல், ஏழை எளியவர்கள் தரமான உணவை உண்ண வேண்டும் என்பதற்காகப் பொருட்களைத் தரமாகத் தேர்ந்தெடுத்து, அதைத் தனது சொந்தச் செலவில் லாரி மூலம் ஏற்றிச் சென்று வடலூர் அன்னதானக் கூடத்தில் ஒப்படைத்துள்ளார்.
'பசிக்கு மதம் இல்லை' என்பதைத் தனது செயலின் மூலம் மெய்ப்பித்துள்ளார் பக்கிரான். ஒரு இஸ்லாமியராக இருந்துகொண்டு, வள்ளலார் வழியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பசியாற்ற அவர் காட்டும் இந்த ஆர்வம், தமிழகத்தின் மதநல்லிணக்கத்திற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
வள்ளலார் ஏற்றிய ஜோதி, பக்கிரான் போன்ற மனிதர்களின் உள்ளங்களில் மனிதாபிமானமாக எரிந்து கொண்டிருக்கிறது. பசிப்பவரின் முகம் பார்த்துப் புன்னகைக்கும் இந்த மனிதநேயப் பண்பாளர், இன்னும் பல நற்பணிகளைச் செய்ய இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் நல்வாழ்வையும் அருளட்டும்.
-எல்.முருகராஜ்

