PUBLISHED ON : ஆக 19, 2026 08:39 PM

இந்திய ஆட்சிப் பணியில் (ஐஏஎஸ்) எத்தனையோ அதிகாரிகள் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால், 'மக்கள் பணி' என்ற ஒன்றுக்காகவே வாழும் நேர்மையான அதிகாரிகளை மட்டுமே வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும். அந்த வரிசையில், அதிகார வர்க்கத்தையும் ஊழல் அரசியல்வாதிகளையும் தனது அதிரடி நடவடிக்கைகளால் நடுங்க வைத்து, சாமானிய மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் மகாராஷ்டிரா கடேரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி துகாராம் முண்டே
அரசியல் அழுத்தம், அடிக்கடி தூக்கியடிப்பு, கொலை மிரட்டல்கள் என எதற்கும் அஞ்சாமல், 'சட்டம் தன் கடமையைச் செய்யும்; நான் என் கடமையைச் செய்வேன்' என நிமிர்ந்து நிற்கும் துகாராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு அளவேயில்லை.
தனது 20 ஆண்டுகால ஆட்சிப் பணியில் 20-க்கும் மேற்பட்ட இடமாற்றங்களைச் சந்தித்தவர். ஆனால், எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்குள்ள முறைகேடுகளைக் களைவதையே தனது முதல் வேலையாகச் செய்தார்.
சோலாப்பூர் மற்றும் நாசிக் மாவட்டங்களில் ஆட்சியராக இருந்தபோது, அப்பகுதியை அச்சுறுத்திக் கொண்டிருந்த மணல் கடத்தல் மாஃபியாக்களின் மீதும், சட்டவிரோதக் குவாரிகள் மீதும் நேரடியாகக் களம் இறங்கி அதிரடிச் சோதனைகளை நடத்தினார். கோடிக்கணக்கிலான கடத்தல் வாகனங்களைப் பறிமுதல் செய்து, அரசுக்கு வரவேண்டிய வருவாயை மீட்டெடுத்தார்.
நாக்பூரில் பணியாற்றியபோது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் நகரின் சுகாதாரக் கட்டமைப்பை முற்றிலும் சீரமைத்தார். தனியாரைக் காட்டிலும் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இயங்குவதை உறுதி செய்தார்.
மகாராஷ்டிரா மாநில எஃப்.டி.ஏ ஆணையராகப் பொறுப்பேற்ற பிறகு, தரமற்ற உணவுகள், போலி மருந்துகள், காலாவதியான மாத்திரைகள் விற்பனை செய்வோர் மீது அதிரடிச் சோதனைகளை முடுக்கிவிட்டார். விதிகளை மீறிய உணவகங்கள் மற்றும் மருந்தகங்களின் உரிமங்களை ரத்து செய்து அதிரடி காட்டினார்.
இவரது அஞ்சாத நேர்மையும், ஊழலுக்கு எதிரான நிலைப்பாடும் பல நேரங்களில் அரசியல்வாதிகளுக்கும், மேல் அதிகாரிகளுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தின. இதன் காரணமாக,20 ஆண்டுகளில் 26 இடமாற்றங்களுக்கு ஆளானார். நவி மும்பை மாநகராட்சியில் இவருக்கு எதிராக 'நம்பிக்கையில்லாத் தீர்மானம்' கூடக் கொண்டுவரப்பட்டது.
ஆனால், 'மக்களுக்கு நன்மை செய்யும்போது மாற்றங்கள் வந்தால், அதை நான் வெகுமதியாகவே கருதுகிறேன்' என்று புன்னகையுடன் அடுத்த இடத்திற்குச் செல்வார் முண்டே. இவர் இடமாற்றம் செய்யப்படும்போதெல்லாம், பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட்டம் நடத்துவதும், ஊர்வலம் போவதும் மகாராஷ்டிராவில் வழக்கமான ஒன்று.
தனியார் நிறுவனங்கள் மீதுதான் உங்கள நடவடிக்கை பாயுமா? என்று நீதிபதி கேட்டதற்கு மறுநாளே கோர்ட் வளாகத்தில் லைசென்ஸ் இன்றி இயங்கிவந்த கேன்டீனை மூடினார் அரசு அலுவலக உணவகங்களில் கடும் நடவடிக்கை எடுத்தார்.
தற்போது அடுத்த கட்ட நடவடிக்கை என்பது மருந்து தயாரிப்பு கம்பெனிகளில்தான் என்று நேற்று ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டு இருக்கிறது.
'முறையான விதிகள் இருக்கும்போது, அதை மீறுவது யாராக இருந்தாலும் தண்டனைக்குரியவரே' என்பதில் சமரசமே செய்துகொள்ளாத துகாராம் முண்டே, இளம் சிவில் சர்வீஸ் தேர்வர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஒரு மிகப்பெரிய முன்னுதாரணம். நேர்மையும் துணிச்சலும் இருந்தால் ஒரு தனி மனிதனால் அமைப்பையே சீரமைக்க முடியும் என்பதற்கு துகாராம் முண்டேவின் வாழ்க்கையே ஆகச்சிறந்த சான்று!
-எல்.முருகராஜ்
