தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நிஜக்கதை/பேய்த் திருவிழா

பேய்த் திருவிழா

பேய்த் திருவிழா


PUBLISHED ON : செப் 01, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 01, 2026 09:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மலேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் சீனக் காலண்டரின் ஏழாவது மாதத்தில் வீதிகள்தோறும் தீயின் சுடர்களும் காகிதப் புகையும் சூழ்ந்திருக்க, விசித்திரமான அதேசமயம் ஆழமான ஒரு பண்பாட்டு விழா நடைபெறும். அதுவே 'பசி கொண்ட பேய்களின் திருவிழா' . புகித் மெர்தாஜாம் போன்ற பாரம்பரிய மையங்களில், பக்தர்கள் போலிப் பணத் தாள்கள், காகித ஆடைகள் மற்றும் சொகுசுப் பொருட்களின் மாதிரிகளை பிரம்மாண்ட தீயில் எறிந்து வழிபடும் காட்சி மிகவும் பிரசித்தமானது.Image 1614896மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் மலாய் இனத்தவருக்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய மக்கள் தொகையினராகச் சீனர்கள் வாழ்கின்றனர். நாட்டினுடைய மக்கள் தொகையில் சுமார் 22% முதல் 23% வரை உள்ள இவர்கள், வணிகம், பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத் தளங்களில் பெரும் பங்காற்றி வருகின்றனர்.Image 1614897இந்த 'பசி கொண்ட பேய்களின் திருவிழா' நேற்றோ இன்றோ தொடங்கிய ஒன்றல்ல. இது புத்த மத நம்பிக்கைகளின் சங்கமமாக, 2,000 ஆண்டுகளுக்கும் மேலான மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. பண்டைய சீனாவில் உருவான இந்த பாரம்பரிய முறை, 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்த சீன தொழிலாளர்களாலும் வணிகர்களாலும் கொண்டுவரப்பட்டு, தலைமுறை தலைமுறையாக இன்றும் உயிர்ப்புடன் பின்பற்றப்பட்டு வருகிறது.Image 1614898நம்பிக்கைகளின்படி, சீனக் காலண்டரின் ஏழாவது மாதத்தில் நரகத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அங்கு தாகத்தாலும் பசியாலும் தவிக்கும் ஆன்மாக்களும், ஆதரவற்ற பேய்களும் பூமிக்கு வருகின்றன.

அவ்வாறு வரும் ஆன்மாக்களை அமைதிப்படுத்தவும், தங்கள் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தவும் சீன மக்கள் வீதிகளிலும் கோயில்களிலும் உணவுகளைப் படைக்கின்றனர். மேலும், காகிதத்தால் செய்யப்பட்ட பணம் , கார்கள், வீடுகள் மற்றும் ஆடைகளைத் தீயிலிடுகின்றனர். இவ்வாறு எரிக்கப்படும் காகிதப் பொருட்கள் மறுஉலகில் உள்ள ஆன்மாக்களுக்கு நிஜப் பொருட்களாகக் கிடைக்கும் என்பது இவர்களின் தீவிர நம்பிக்கை.Image 1614899நவீன அறிவியலின் பார்வையில், எரிக்கப்படும் காகிதம் சாம்பலாகப் போகிறதே தவிர ஆவிகளுக்குச் சென்று சேருவதில்லை என்றும், இது சுற்றுச்சூழல் மாசு மற்றும் மூடநம்பிக்கை என்றும் சிலர் விமர்சிப்பதுண்டு. ஆனால், இந்த விமர்சனங்களுக்குச் சீனச் சமூகம் மற்றும் கலாச்சார அறிஞர்கள் வழங்கும் பதில்கள் சிந்திக்கத்தக்கவை:

சீனக் கலாச்சாரத்தின் அடித்தளமே முன்னோர்களை மதிப்பதும், பெற்றோருக்குச் செய்யும் கடமையும்தான். 'எங்களை வாழவைத்த முன்னோர்களை அவர்கள் மறைந்த பிறகும் நாங்கள் மறக்கவில்லை; அவர்களுக்காக நாங்கள் செலவிடத் தயார்' என்ற நன்றியுணர்வின் வெளிப்பாடே இந்தச் சடங்கு.

இவ்விழாவில் சொந்த முன்னோர்களுக்கு மட்டுமின்றி, 'ஆதரவற்ற அலைபாயும் ஆன்மாக்களுக்கும்' உணவும் உடையும் படைக்கப்படும். உலகில் ஆதரவின்றிக் கைவிடப்பட்ட ஆன்மாக்கள் கூடப் பசியோடு இருக்கக்கூடாது என்ற உயரிய கருணையை இது உணர்த்துகிறது.

அறிவியல் ரீதியான தர்க்கங்களை விட, தலைமுறைகளாகத் தங்கள் அடையாளத்தைப் பேணவும், குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடிப் பிரார்த்தனை செய்வதன் மூலம் மன அமைதி பெறவும் இது ஒரு பாலமாக அமைகிறது.

கால மாற்றத்திற்கு ஏற்ப, இப்போதெல்லாம் சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு குறைவான காகிதங்களை எரிப்பது, புகை வராத காகிதங்களைப் பயன்படுத்துவது போன்ற மாற்றங்களை இளம் தலைமுறை சீனர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சடங்குகளைத் தாண்டி, வாழ்ந்து மறைந்தவர்களை நினைவில் கொள்வோம்' என்ற உயரிய பண்பாட்டையே இந்த விழா உலகிற்கு உணர்த்துகிறது.

-எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us