இயங்கிக் கொண்டே இரு, இளமையோடு இருப்பாய்: 77 வயது ஹேமமாலினி!
இயங்கிக் கொண்டே இரு, இளமையோடு இருப்பாய்: 77 வயது ஹேமமாலினி!
PUBLISHED ON : ஜூலை 14, 2026 06:37 PM

இந்தியத் திரையுலகின் 'கனவுக்கன்னி' என்று வர்ணிக்கப்படும் நடிகை ஹேமா மாலினிக்கு தற்போது 77 வயதாகிறது. அவர், உத்தரபிரதேச மாநிலத்தின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான மதுரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக (எம்.பி) இருக்கிறார். கடந்த 2014, 2019 மற்றும் 2024 ஆகிய மூன்று பொதுத்தேர்தல்களிலும் தொடர்ந்து இந்தத் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றுள்ளார். தனது தொகுதி மக்களின் தேவைகளான சாலை வசதிகள், மேம்பாலங்கள் மற்றும் வெள்ள நிவாரணப் பணிகள் போன்ற மக்கள் நலப் பணிகளில் தற்போதும் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறார்.
77 வயதிலும் தனது பாரம்பரிய நடனக் கலையை அவர் கைவிடவில்லை. நாடு முழுவதும் பல முக்கிய விழாக்களில் மேடைகளில் இன்றும் பரதநாட்டிய நாடகங்களை நிகழ்த்தி வருகிறார்.
விழாவில் 15 பேர் கொண்ட பிரம்மாண்ட இசைக்குழு மேடையில் அவரது படப் பாடல்களைப் பாடியது. அவர்களுடன் இணைந்து ஹேமா மாலினியும் சில பாடல்களைப் பாடி ரசிகர்களை நெகிழ வைத்தார்.
மேடையில் மைக் பிடித்த ஹேமா மாலினி, தனது திரையுலகப் பயணம் மற்றும் அண்மையில் மறைந்த தனது கணவர் தர்மேந்திரா குறித்து மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். அவர் பேசியதாவது:
'என் கணவர் தரம் ஜி எப்போதும் என்னிடம் கூறுவார்: 'சினிமாவில் படங்கள் குறைந்துவிட்டதால் உனது பயணம் முடிந்துவிட்டது என்று எப்போதும் நினைக்காதே. நடனம் ஆடு, பொதுச்சேவை செய், எப்போதும் இயங்கிக்கொண்டே இரு; அப்போதுதான் எப்போதும் இளமையுடன் இருப்பாய்' என்று என்னை ஊக்கப்படுத்துவார்.
அதேபோல், 'ஷோலே' படத்தில் கமிட் ஆகும்போது இயக்குநர் ரமேஷ் சிப்பியிடம், 'படத்தில் இவ்வளவு பெரிய ஹீரோக்கள் இருக்கிறார்கள், எனக்கு என்னவென்றால் குதிரை வண்டி ஓட்டும் சாதாரண ரோலா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'நீ இதைச் செய், இல்லை என்றால் பின்னாடி வருத்தப்படுவாய்' என்றார். இன்று உலகமே என்னை 'பசந்தி' என்றுதான் நினைவில் வைத்துள்ளது' என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
மேலும், 'மும்பையில் உள்ள இந்த சண்முகானந்தா ஹாலில் தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு 'சப்னோ கா சௌதாகர்' படத்தின் படப்பிடிப்பின் போது நான் முதன்முதலில் தங்க வைக்கப்பட்டேன். இதே இடத்தில் தான் எனது முதல் ஃபிலிம்பேர் விருதையும் வாங்கினேன். இன்று 60 ஆண்டுகள் கழித்து அதே இடத்தில் எனது திரைப்பயணத்தைக் கொண்டாடுவது, வாழ்க்கை ஒரு முழு வட்டத்தை நிறைவு செய்திருப்பது போல உணர வைக்கிறது' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
