PUBLISHED ON : மார் 19, 2025 12:00 AM

இங்கு வாழும் மீனவர்கள் பல தலைமுறைகளாக கடலுடன் தொடர்புடைய வாழ்க்கை முறையை பின்பற்றுகின்றனர்.
இந்த சமூகத்தில், பாளையம் அண்ணா என்று அழைக்கப்படும் மீனவர் பாளையம் தனது பதினைந்து வயதில் இருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது பரந்துபட்ட கடல் தொடர்புடைய அனுபவ அறிவு, கடல் சார்ந்த நவீன அறிவியல் ஆய்வுகளுக்கு பயன்படுவதால் வெளிநாடு உள்ளீட்ட பல்வேறு கடல் சார் நிபுணர்கள் இவரை எப்போதும் தேடிவந்து விஷய ஞானம் பெற்றுச் செல்கின்றனர்.
அவரிடம் இன்னும் கொஞ்சம் பேசவேண்டும் என்ற போது ஒரு அதிகாலை வேளையில் தனது ஆல்காட் மீனவர் குப்பத்திற்கு வருமாறு அழைத்தார்.
அதன்படி அங்கு சென்ற போது கடலை வணங்கி மீனவர்கள் தொடர்புடைய ஒரு நாட்டுப்புற பாடலை பாடிவிட்டு கடல் தொடர்புடைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.அவர் சொன்னதில் இருந்து சுருக்கமாக அறிந்து கொண்டது கடல் ஒரு இயற்கை அன்னை அதை நாம் சீண்டாதவரை அது நம்மைத் தீண்டாது என்பதுதான்.
நவீனம் என்ற பெயரில் வெளிநாட்டு படகுகளும்,மீன் வலைகளும் வந்த பிறகு 'தங்க முட்டையிடும் வாத்தை அறுத்த கதைதான்' தற்போது நடந்து வருகிறது என்கிறார் வருத்தத்துடன்.
இயற்கை நமக்கு தந்த அருட்கொடை கடல் அதை அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும் இல்லையேல் அது நம்மை விட்டு விலகிவிடும் என்று சொல்லும் பாளையம் அண்ணாவின் கருத்திலும், கண்களிலும் கவலை திவலையாக சொட்டுகிறது.
-எல்.முருகராஜ்